எட்டு வயதான சிறுவன், தன் பெற்றோரின் நண்பரான வால்லியைப் (Wally) பார்த்து “நான் இயேசுவை நேசிக்கிறேன், ஒரு நாள் அவருக்காக பிற நாடுகளில் ஊழியம் செய்ய விரும்புகிறேன்,” என்றான். அடுத்த பத்து ஆண்டுகள் வால்லி அவன் வளர்வதை பார்த்துக்கொண்டே அவனுக்காக ஜெபித்து வந்தான். பின்பு மாலி (Mali) தேசத்திற்கு அவன் போக விரும்பி ஒரு மிஷனரி ஸ்தாபனத்திற்கு விண்ணப்பித்த பொழுது, வால்லி அவனைப் பார்த்து, “நான் இந்த செய்திக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தேன். சிறுவனாக உன் விருப்பத்தை நீ கூறிய பொழுது, நான் உனக்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சேமித்து வைத்தேன். இப்பொழுது அதற்கு நேரம் வந்து விட்டது!” எனக் கூறினான். வால்லியின் இருதயம் தேவனுடைய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச்செல்ல ஆர்வமாயிருந்தது.

இயேசுவும், அவருடைய சீஷரும் அவருடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை கிராமம் கிராமமாய் சுற்றித் திரிந்து அறிவிக்கும் பொழுது, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டது (லூக். 8:1-3). அசுத்த ஆவிகளினின்றும், நோய்களிலிருந்தும் விடுதலையாக்கப்பட்ட சில பெண்கள் “தங்கள் ஆஸ்திகளால்” (வச. 3) அவர்களுக்கு உதவி செய்தனர். அதில் ஒருவர் ஏழு பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட்ட மகதலேனாள் மரியாள். மற்றொருவர் ஏரோதின் அரசில் அதிகாரியாக இருந்த ஒருவனுடைய மனைவியாகிய யோவன்னாள். சூசன்னா மற்றும் ‘அநேக ஸ்திரீகளை’ குறித்து வேறு விபரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை (வச. 3). ஆனால் இயேசு அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்ததினால் அவர்களுடைய ஆஸ்தியைக் கொண்டு இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும் அவர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

நமக்காக இயேசு செய்து முடித்ததை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, பிறருக்காக துடிக்கும் அவரது இதயம் நமதாகிவிடும். தேவன் நம்மை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறார் என்று நாம் அவரிடம் கேட்போமாக.