“சந்தேகத் தோமா” என்று நம்மால் அழைக்கப்படும் தோமாவுக்கு (யோவா. 20:24-29) இந்த அடைமொழி உண்மையில் நியாயமானதல்ல. சொல்லப்போனால் கொல்லப்பட்ட நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்ற செய்தியை நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம்? உண்மையில் அவரை “தைரிய தோமா” என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால், இயேசு அனைத்தையும் அறிந்தவராய் தாமாகவே மரணத்தை நோக்கிச் சென்றபொழுது நடந்த சம்பவங்களில் தோமா மிகச்சிறந்த தைரியத்தை வெளிப்படுத்தினார்.

லாசரு மரித்த பொழுது, “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” (யோவா. 11:7) என்று இயேசு கூறியதற்கு சீஷர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?” என்றார்கள் (வச. 8). ஆனால் தோமாவோ, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்,” என்றான் (வச. 16).

தோமாவுடைய செய்கைகளைக் காட்டிலும் அவனது நோக்கங்கள் உன்னதமானதாய் இருந்தன. ஏனென்றால், இயேசுவைக் கைது செய்த பொழுது, மற்ற சீஷர்களோடு தோமாவும் இயேசுவை விட்டு விலகி ஓடிப்போனான் (மத். 26:56). பேதுருவும், யோவானும் மாத்திரம் இயேசுவை அழைத்துச்சென்ற பிரதான ஆசாரியரின் மண்டபம் வரை சென்றனர். ஆனால் யோவான் மாத்திரமே இயேசுவை சிலுவை வரை பின்பற்றிச் சென்றான்.

லாசருவின் உயிர்தெழுதலைக் கண்டும் கூட (யோவா. 11:38-44) தோமாவால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் மரணத்தை வென்று உயிர்தெழுந்துவிட்டார் என்று விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் சந்தேகப்பட்ட அற்ப மனுஷனாகிய தோமா உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டவுடன், “என் ஆண்டவரே! என் தேவனே!” என வியப்புடன் உரத்த சத்தமிட்டான் (யோவா. 20:28). அதற்கு இயேசு அளித்த பதில் சந்தேகித்தவனுக்கு நம்பிக்கையையும், நமக்கு அளவற்ற ஆறுதலையும் அளிக்கிறது. “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார் (வச. 29).