என்னுடைய நெருங்கிய தோழி, “நம்முடைய நன்மை, தீமை மற்றும் அருவருப்பான காரியங்கள் அனைத்தையும் நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்!” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அநேக வருடங்கள் நண்பர்களாக இருக்கும் நாங்கள், எங்களுடைய சந்தோஷங்களையும், ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள கற்றுக்கொண்டோம். நாங்கள் பூரணமற்றவர்கள் என அறிந்திருந்தபடியால் எங்களுடைய போராட்டங்களை பகிர்ந்து கொண்டோம். கூடவே எங்களுடைய வெற்றிகளை எண்ணி களிகூர்ந்து மகிழ்ந்தோம்.

தாவீது கோலியாத்தை வெற்றிசிறந்த நாள் முதற்கொண்டு தாவீதுக்கும், யோனத்தானுக்கும் இடையே வலுவான நட்பு உண்டாயிற்று (1 சாமு. 18:1-4). தாவீதின் மீது யோனதானுடைய தகப்பன் பொறாமை கொண்ட அந்த மோசமான நாட்களில் தங்களுடைய பயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள் (18:6-11,20:1-2). இறுதியாக சவுல் தாவீதைக் கொல்ல திட்டம் தீட்டிய அந்த மகா மோசமான நாட்களில் அவர்கள் ஒன்றாக துன்புற்றார்கள் (20:42).

நம்முடைய சூழ்நிலைகள் மாறும் பொழுதும், உண்மையான நண்பர்கள் ஒருபொழுதும் நம்மைக் கைவிடமாட்டார்கள். நன்மையான காலத்தில் மட்டுமல்லாது மோசமான நாட்களிலும் நம்முடனே கூட இருப்பார்கள். மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் தேவனை விட்டுப்பின்வாங்கிச் செல்லும் படியாய் சோதிக்கப்பட்டால் அவர்கள் தேவனை நோக்கி நம்மைத் திருப்புவார்கள்.

உண்மையான நட்பு தேவனிடமிருந்து நமக்கு கிடைத்த ஈவு, ஏனெனில் அது முற்றிலும் பூரண நண்பனாகிய தேவனையே எடுத்துரைக்கிறது. ஏனெனில் அவர் ஒருவரே நன்மையான நாட்களிலும், மோசமான நாட்களிலும் மற்றும் மிகவும் மோசமான நாட்களிலும் மாறாதவராய் என்றும் நமது நண்பராய் இருக்கிறார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக்கைவிடுவதுமில்லை” (எபி. 13:5) என நமக்கு நினைவூட்டுகிறார்.