ரொட்டி!
நான் மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் சிறு நகரில் வாழ்ந்து வருகிறேன். அங்கு காலையிலும், மாலையிலும் “ரொட்டி” என்ற கூவும் சத்தத்தை மிகத்தெளிவாக கேட்கலாம். வண்டியில் பெரிய கூடையை வைத்து ஒருவர் பலவிதமான இனிப்பு மற்றும் உப்பு கலந்த ரொட்டியை விற்று வந்தார். நான் ஓர் பெரிய நகரத்தில் வசித்த பொழது, நான் தான் கடைக்குச் சென்று ரொட்டி வாங்குவேன். ஆனால் இப்பொழுது வீட்டிற்கே வரும் புதிய ரொட்டியை மகிழ்ச்சியுடன் வாங்குகிறேன்.
வயிற்றுப் பசியைவிட்டு ஆவிக்குரிய பசியை நாம் எண்ணினால், “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவா. 6:51)” என்ற இயேசுவின் வார்த்தைகள் தான் என் நினைவிற்கு வருகின்றது.
சுவிசேஷம் என்பது ஒரு பிச்சைக்காரன் மற்ற பிச்சைக்காரனிடம் தான் எங்கு ரொட்டி யைப் பெற்றுக் கொண்டான் என்று சொல்வது தான் என்று ஒருவர் கூறியுள்ளார். நம்மில் பலரும் இப்படிக் கூறலாம்; “நான் ஒரு காலத்தில் ஆவிக்குரிய பசியுடன் இருந்தேன், என் பாவங்களினால் என் ஆவி இளைத்து, பசியுடன் தவித்தது. அப்போது தான் நற்செய்தியை கேட்டேன். ஒருவர் என்னிடம் இயேசு என்னும் இந்த ரொட்டியை எங்கு கண்டுபிடிக்கலாம் என்று சொன்னார். என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது”.
நாம் இப்பொழுது இந்த ஜீவ அப்பத்தை பிறருக்குக் காண்பிக்கும் பாக்கியத்தையும், கடமையையும் உடையவர்களாய் இருக்கிறோம். நம்முடைய உற்றார், உறவினர், வேலை செய்யுமிடம், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இயேசுவை நாம் பகிர்ந்து கொள்ளலாம். இயேசுவைப்பற்றி பஸ்சிலோ, ரயிலிலோ, காத்திருக்கும் இடங்களிலோ பிறரிடம் பேசலாம். இந்த அற்புதமான நற்செய்தியை நட்பின்மூலமாக பிறரது வாழ்க்கையில் எடுத்துச் செல்லாம்.
இயேசுவே மெய்யான அப்பம். வாருங்கள், இந்த இனிமையான நற்செய்தியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
நன்றாக பார்ப்பது
ராலீக் ஓர் பெரிய நாய். 45 கிலோ எடையுடன் பலவானாய் தோற்றமளிக்கும். உடல் முழுவதும் அடர்ந்த முடி காணப்படும். பயமளிக்கும் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அது மனிதர்களோடு நன்றாக பழகும். அதன் உரிமையாளர் மருத்துவமனைகளுக்கு அதைக் கூட்டி செல்லும்பொழுது அனைவரது முகத்திலும் புன்முறுவல் பூக்கும்.
ஒரு நாள் நான்கு வயதுள்ள சிறுமி ராலீகைப் பார்த்தாள். அதை ஆசையோடு தடவிக் கொடுக்க விரும்பினாள். ஆனால் அருகில் வருவதற்கு பயம். கடைசியில் அவளது ஆர்வம் பயத்தை மேற்கொண்டது. அதன் பக்கம் வந்து அதனோடு பேசிக் கொஞ்சி மகிழ்ந்தாள். அப்பொழுது தான் ஒரு காரியத்தை அறிந்து கொண்டாள். ராலீக் பெரிய தோற்றத்தை பெற்றிருந்தாலும் அது மிகவும் சாந்த குணமுடைய பிராணி.
இந்தக் குணங்களின் கலவை எனக்குப் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இயேசு எளிதாக அணுகக்கூடிய நபராக விளங்கினார். அவர் சிறு பிள்ளைகளை வரவேற்றார் (மத். 19:13-15), மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட விபச்சார பெண்ணிடம் கனிவோடு நடந்துகொண்டார் (யோவா. 8:1-11). இரக்கத்தினால் உந்தப்பட்டு மக்களுக்கு போதித்தார் (மாற். 6:34). அதே சமயம், அவர் ஆச்சரியப்படத்தக்க வல்லமையையும் வெளிப்படுத்தினார். பிசாசைத் துரத்தி, புயலின் மேல் அதிகாரம் செலுத்தி, மரித்தோரை உயிர்த்தெழச் செய்த செயல்களால் மக்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தனர் (மாற். 1:21-34; 4:35-41; யோவா. 11).
நாம் எப்படி இயேசுவைப் பார்க்கிறோமோ அப்படித் தான் அவரோடு உறவாடுவோம். அவரது வல்லமையை மாத்திரம் நாம் கண்ணோக்கினால், அவரை ஓர் புத்தகத்தில் வாழும் மாவீரனைப் போல அவரை ஓர் பீடத்தில் வைத்து போற்றி வணங்கி ஆராதனை செய்துவிடுவோம். அதே சமயம் அவருடைய அன்பை மாத்திரம் நோக்கினால் அவரை சர்வ சாதாரணமாய் நடத்த ஆரம்பித்து விடுவோம். உண்மை என்னவென்றால் இயேசு வல்லமையும், அன்பும் ஒரு சேர நிறைந்துள்ளவர். தாழ்மையோடு நம்மை நண்பர் என்றழைத்த போதிலும் நம்முடைய கீழ்ப்படிதலுக்கு பாத்திரர் அவரே.
புதிய நோக்கம்
ஜேக்கப் டேவிஸ் 1800ல் வாழ்ந்த ஒரு தையல்காரர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அந்த நாட்களில் அமெரிக்க மேற்கு மாகாணத்தில் தங்க சுரங்க வியாபாரம் ஓங்கியிருந்தது. அதில் வேலை செய்யும் வேலையாட்களின் கால் சட்டை (பாண்ட்) சீக்கிரத்தில் கிழிந்து போய்க்கொண்டிருந்தது, அதற்கு ஓர் தீர்வை காணவேண்டும் என்று துடித்தார். அதனால் அவர் ‘லெவி ஸ்டிராஸ்’ (Levi Strauss) நடத்திவரும் கம்பெனிக்கு சென்று, அவரிடம் இருந்து கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துனியாக இருந்தது. அத்துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால் சட்டையை தைத்துகொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. இன்றைக்கு லெவியைத் தவிர்த்து பல வகையான ஜீன்ஸ் துணிகளை உலக சந்தையில் பார்க்கலாம். அதை பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஓர் சாதாரண கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.
சீமோனும் அவன் நண்பர்களும் கலிலேயா கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு வந்து, அவர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், தொடக்கத்தையும் கொடுத்தார். இனிமேல் அவர்கள் மீன்களை பிடிக்கப் போவதில்லை. ஏனெனில் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” ( மாற். 1:17) என்று இயேசு சொன்னார்.
இந்தப் புதிய நோக்கம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது அவர்கள் மூலமாக தேவன் மக்களின் மனங்களை தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அவர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் உலகுக்கு நற்செய்தியாய் எடுத்துச் செல்கிறோம்.
நம் வாழ்வில் இந்த தெய்வீக அன்பு வெளிப்படட்டும். ஏனெனில் அது பிறருடைய வாழ்க்கையையும், நோக்கங்களையும் நித்திய வாழ்வின் தீர்மானங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
உணர்வுகளும் அடையாளங்களும்
எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் தேவனிடம் எப்போதும் அடையாளங்களைக் கேட்கும் பழக்கத்தில் இருந்தான். அது முற்றிலும் தவறல்ல. ஆனால் அவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரி என்பதற்கான அடையாளங்களை ஜெபத்தில் தேடினான். உதாரணமாக, அவன் “தேவனே நான் இந்தக் காரியத்தை செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்த அடையாளத்தைக் காட்டும். அப்பொழுது அது தான் தேவ சித்தம் என்று அறிந்து கொள்வேன்” என்று ஜெபிப்பான்.
இது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியே உணர்ச்சிப்பட்டு ஜெபித்து பதில் பெறும் பழக்கம் இருப்பதினால் அவன் முன்பு தான் நேசித்த பெண்ணுடன் மீன்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அந்த பெண்ணோ இது தேவன் விரும்பும் காரியம் அல்ல என்று திடமாக இருந்துவிட்டாள்.
இயேசுவுடன் வாழ்ந்த மதத் தலைவர்கள்கூட அவரிடம் அற்புத அடையாளங்களை எதிர்பார்த்தனர் (மத். 16:1). நீர் மேசியா என்றால் ஓர் அற்புதத்தினால் அதை நிரூபியும் என்று வழக்காடினர். அவர்கள் தேவனின் வழிக்காட்டுதலை தேடவில்லை; மாறாக, அவருடைய தெய்வீக அதிகாரத்தையே சோதித்தனர். “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்” (வச. 4) என்று இயேசு கூறினார். தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் பொருந்தாது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்து, அவர்கள் கண்முன் இருந்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் அதைவிட பெரிய அடையாளத்தைக் கேட்டதினால் இயேசு அப்படி கடுமையாக பேசினார்.
ஜெபத்தில் அவருடைய வழிகாட்டுதலை நாம் தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (யாக். 1:5). அவருடைய வார்த்தையினாலும் (சங். 119:105), ஆவியானவரின் வழி நடத்துதலினாலும் (யோவா. 14:26) நம்மை வழிநடத்துகிறார். நமக்கு நல்ல போதகர்களையும், ஞானம் நிறைந்த தலைவர்களையும் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவே நமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
ஆகவே தேவனிடத்தில் தெளிவான பதிலை நாம் தேடுவது நல்லது. ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது போலவே அது இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஜெபத்தில் முக்கியமாக நேர்வது என்னவென்றால், நாம் தேவனுடைய மெய்யான இயல்பை அறிந்து அவருடன் உறவு கொள்வதே.