ராலீக் ஓர் பெரிய நாய். 45 கிலோ எடையுடன் பலவானாய் தோற்றமளிக்கும். உடல் முழுவதும் அடர்ந்த முடி காணப்படும். பயமளிக்கும் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அது மனிதர்களோடு நன்றாக பழகும். அதன் உரிமையாளர் மருத்துவமனைகளுக்கு அதைக் கூட்டி செல்லும்பொழுது அனைவரது முகத்திலும் புன்முறுவல் பூக்கும்.

ஒரு நாள் நான்கு வயதுள்ள சிறுமி ராலீகைப் பார்த்தாள். அதை ஆசையோடு தடவிக் கொடுக்க விரும்பினாள். ஆனால் அருகில் வருவதற்கு பயம். கடைசியில் அவளது ஆர்வம் பயத்தை மேற்கொண்டது. அதன் பக்கம் வந்து அதனோடு பேசிக் கொஞ்சி மகிழ்ந்தாள். அப்பொழுது தான் ஒரு காரியத்தை அறிந்து கொண்டாள். ராலீக் பெரிய தோற்றத்தை பெற்றிருந்தாலும் அது மிகவும் சாந்த குணமுடைய பிராணி.

இந்தக் குணங்களின் கலவை எனக்குப் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இயேசு எளிதாக அணுகக்கூடிய நபராக விளங்கினார். அவர் சிறு பிள்ளைகளை வரவேற்றார் (மத். 19:13-15), மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட விபச்சார பெண்ணிடம் கனிவோடு நடந்துகொண்டார் (யோவா. 8:1-11). இரக்கத்தினால் உந்தப்பட்டு மக்களுக்கு போதித்தார் (மாற். 6:34). அதே சமயம், அவர் ஆச்சரியப்படத்தக்க வல்லமையையும் வெளிப்படுத்தினார். பிசாசைத் துரத்தி, புயலின் மேல் அதிகாரம் செலுத்தி, மரித்தோரை உயிர்த்தெழச் செய்த செயல்களால் மக்கள் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தனர் (மாற். 1:21-34; 4:35-41; யோவா. 11).

நாம் எப்படி இயேசுவைப் பார்க்கிறோமோ அப்படித் தான் அவரோடு உறவாடுவோம். அவரது வல்லமையை மாத்திரம் நாம் கண்ணோக்கினால், அவரை ஓர் புத்தகத்தில் வாழும் மாவீரனைப் போல அவரை ஓர் பீடத்தில் வைத்து போற்றி வணங்கி ஆராதனை செய்துவிடுவோம். அதே சமயம் அவருடைய அன்பை மாத்திரம் நோக்கினால் அவரை சர்வ சாதாரணமாய் நடத்த ஆரம்பித்து விடுவோம். உண்மை என்னவென்றால் இயேசு வல்லமையும், அன்பும் ஒரு சேர நிறைந்துள்ளவர். தாழ்மையோடு நம்மை நண்பர் என்றழைத்த போதிலும் நம்முடைய கீழ்ப்படிதலுக்கு பாத்திரர் அவரே.