Archives: மார்ச் 2024

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது. 

 

தேவனை நேசிக்காமல் இருக்கமுடியாது

தற்போது வளர்ச்சிப்பெற்றுள்ள என்து மகன் சேவியர், மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவன் கைகளை அகல விரித்து, “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னான். நானும் என் நீண்ட கைகளை விரித்து, “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலுக்கு சொன்னேன். அவன் தன் கைகளை தன் இடுப்புப் பகுதியில் வைத்தவாறு, “நான் தான் உன்னை முதலில் நேசித்தேன்” என்றான். நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். “தேவன் முதலில் உன்னை என் கருவில் வைத்தபோதே நான் உன்னை நேசித்தேன்” என்றேன். சேவியரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்றான். “இயேசு நம் இருவரையும் முதலில் நேசித்ததால், நாம் இருவருமே வெற்றிபெறுகிறோம்” என்று நான் சொன்னேன்.

சேவியர் தனது முதல் குழந்தையின் பிறப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவன் தனது மகனை பிற்காலத்தில் நினைவுகூரும்போதெல்லாம் அவன்மீது அன்புசெலுத்தியதில் மகிழ்ச்சியடையவேண்டும் என்று நான் வேண்டுதல்செய்கிறேன். ஆனால் நான் ஒரு பாட்டியாகத் தயாராகும்போது, சேவியரும் அவருடைய மனைவியும் ஓர் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று என்னிடம் சொன்ன தருணத்திலிருந்து நான் என் பேரனை எவ்வளவு நேசித்தேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவரையும் மற்றவர்களையும் நேசிக்கும் திறனை நமக்குத் தருகிறது என்று அப்போஸ்தலர் யோவான் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 4:19). அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது, அவருடனான நமது தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது (வச. 15-17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போது (வச. 19), நாம் அவருக்கான அன்பில் வளரலாம். மேலும் பிற உறவுகளில் அன்பை வெளிப்படுத்தலாம் (வச. 20). அன்பு செய்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அன்பு செலுத்தும்படியும் கட்டளையிடுகிறார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (வச. 21). யார் அதிகம் நேசிக்கிறவர்கள் என்று வரும்போதெல்லாம், தேவனே எப்போதும் வெற்றிபெறுகிறார். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நேசிப்பதில் தேவனை ஜெயிக்கமுடியாது.

 

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.