பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்…” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.