
வாழ்க்கைமூலம் கற்றுக்கொடுங்கள்
ஆடு-புலி ஆட்டம்போல பலகைகளை வைத்து விளையாடுகிற விளையாட்டுகள் ஏராளம் உள்ளன. அப்படியொரு விளையாட்டு பலகை ஒன்று கிடைத்ததும் என் ஆறு வயது மகன் ஓவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் அரைமணிநேரம் விளையாட்டு விதிகளை வாசித்தபிறகு, அவனுக்கு சலிப்புத்தட்டிவிட்டது. எவ்வாறு அந்தப் பலகையை வைத்து விளையாடுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு அதில் விளையாடி அனுபவமுண்டு. அவர் விளையாடிக் காண்பித்த பிறகுதான், தனக்கு பரிசாகக் கிடைத்த அந்தப் பலகை அவனுக்கு முக்கியமானதாகத் தெரிந்தது.
அவர்கள் இருவரும் விளையாடியதைப் பார்த்தபோது, அனுபவமுள்ள ஆசிரியர் ஒருவர் இருந்தால் புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பது புரிந்தது. விதிமுறைகளை வாசித்தும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் செயல்முறையோடு யாராவது விளக்கிச் சொன்னால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்போஸ்தலனாகிய பவுல் இதை நன்றாகப் புரிந்திருந்தார். சபையானது விசுவாசத்தில் வளருவதற்கு தீத்து எவ்வாறு உதவியாக இருக்கமுடியும் என்று எழுதும்போது, அனுபவமிக்க விசுவாசிகளின் பங்கு அதில் மிகவும் முக்கியமானதென பவுல் வலியுறுத்துகிறார். ‘ஆரோக்கியமான உபதேசம்” முக்கியம்தான்; ஆனால் வெறுமனே அதைப் போதிப்பது மட்டும் போதாது, அதன்படி வாழ்ந்துகாட்டவேண்டியதும் முக்கியம். முதிர்வயதுள்ள ஆண்களும் பெண்களும் தன்னடக்கமுள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமென பவுல் எழுதுகிறார் (தீத்து 2:2-5). “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி” என்று சொன்னார். வசனம் 7.
ஆரோக்கியமான உபதேசத்திற்காக நன்றிசொல்லுகிறேன், ஆனால் அவற்றின்படி வாழ்ந்து போதிக்கிறவர்களுக்காகவும் நன்றிசொல்லுகிறேன். கிறிஸ்துவின் சீடன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று அவர்கள் தங்களுடைய வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்; நானும் அந்தப் பாதையில் எவ்வாறு நடக்கலாமென எளிதில் கண்டுகொள்ளவும் உதவியிருக்கிறார்கள்.

யார் இவர்?
நானும் என் கணவரும் தேனிலவை முடித்துவிட்டு எங்களுடைய ஊருக்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் லக்கேஜ்களை ஏற்றும் பகுதியில் காத்திருந்தோம். என் கணவரை முழங்கையால் இலேசாக இடித்து, பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் காட்டினேன்.
என் கணவரும் ஓரக்கண்ணால், “யார் அவர்” என்று சைகையால் கேட்டார்.
அவர் ஒரு நடிகர், அவர் பிரபலமாகப் பேசப்படும் கதாபாத்திரங்கள் பற்றிச் சொன்னேன். பிறகு நாங்கள் இருவரும் அவரிடம் சென்று, எங்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இருபத்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும், ஒரு திரைப்பட நடிகரைச் சந்தித்த அனுபவம் இன்றும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரபல நடிகர் ஒருவரைச் சந்திப்பது ஒரு புறத்தில் இருக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான ஒருவரை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். “யார் இந்த மகிமையின் ராஜா?” (சங். 24:8). சர்வவல்ல தேவனாகிய அவரை சிருஷ்டிகர், போஷித்துக் காப்பாற்றுகிறவர், சர்வத்தை ஆளுகிறவர் என்று சங்கீதக்காரன் சுட்டிக்காட்டுகிறார். “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்” என்று புகழ்ந்து பாடுகிறார் (வச. 1-2). முற்றிலும் பிரமித்தவராக, தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும், ஆனாலும் அவரிடம் நாம் செல்லமுடியும் என்றும் தாவீது கூறுகிறார் (வச. 3-4). அவருக்காக நாம் வாழும்போது, அவரைப் பற்றி அறிந்துகொள்ளலாம், அவருடைய வல்லமையைப் பெறலாம், அவர் நமக்காக யுத்தம்செய்வார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம் (வச. 8).
தேவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு அவரே வாய்ப்புகளை உண்டாக்குகிறார்; அவர் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு பிரபலமானவராக இருக்கிறார். அவரைப் பற்றி உணர்ந்துகொள்ளாதவர்கள்கூட, நம்மில் அவருடைய குணம்பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது, “அவர் யார்” என்று கேட்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உண்டாகும். தாவீதைப் போல நாமும் பிரமிப்புக்குள்ளாகி தேவனைச் சுட்டிக்காட்டலாம்; அவரைப் பற்றிச் சொல்லலாம்.

ஞானமாக உதவுதல்
சாலையின் சிவப்பு விளக்கு எரியவே சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். ஏற்கனே நான் பார்த்திருந்த அதே நபர் அப்போதும் சாலையோரம் நின்றிருந்தார். “உணவுவாங்க பணம் இல்லை. எந்த உதவியானாலும் சரி” என்று கையில் ஓர் அட்டையை வைத்திருந்தார். அவருக்கு உதவுவதா வேண்டாமா என்று தெரியவில்லை, பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
உதவி தேவைப்படுவதுபோல நடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையிலேயே உதவி தேவையிருக்கும், ஆனால் தவறான பழக்கங்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்கள். நம் நகரத்தின் சேவை பணிகளுக்கு பணம்கொடுப்பதுதான் சிறந்தது என்று சமூகப்பணியாளர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். மனப்பாரத்தோடு அங்கிருந்து கிளம்பினேன். அன்று நான் ஞானமாகச் செயல்பட்டிருந்தாலும்கூட, மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
“ஒழுங்கில்லாதவர்களையும் உழைக்காதவர்களையும் எச்சரியுங்கள், பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள், எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்” என்றுதான் மூலபாஷையில் (1 தெச. 5:14) சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நபர்களை அடையாளங்கண்டால்தான் சரியாக நாம் நடந்துகொள்ள முடியும். பலவீனமான அல்லது மனமுறிவுள்ள ஒருவரை எச்சரித்தால், அவர்களுடைய ஆவியை மேலும் சோர்வடையச் செய்துவிடுவோம். உழைக்காத ஒருவருக்கு உதவினால், அவரை மேலும் சோம்பலாக்க ஊக்கப்படுத்திவிடுவோம். எனவே, நமக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு, உண்மையில் உதவி தேவைப்படுகிறதென நாம் அறிந்தவர்களுக்கு உதவுவதுதான் சிறந்தது.
யாருக்காவது உதவும்படி தேவன் உங்களுடைய உள்ளத்தில் ஏவுகிறாரா? நல்லது! இப்போதே உதவிசெய்யத் துவங்குங்கள். அவருக்கு இன்ன தேவைகள்தாம் இருக்கிறதென நீங்களே ஏதாவது கற்பனைசெய்யாதீர்கள். அவருடைய பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள், சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ஜெபித்துவிட்டு, ஞானமாக உதவிசெய்யுங்கள், உங்களுடைய மனது சொல்கிறபடி உதவிசெய்ய நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு “நன்மைசெய்கிற” நோக்கத்துடன் உதவும்போதுதான், அவர்கள் தடுமாறினாலும்கூட “எல்லாரிடமும் நீடிய சாந்தமாக இருப்போம்” (வச. 14-15).

வெற்றி பேரணி
“சிகாகோ கப்ஸ்” பேஸ்பால் அணியானது ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதன்முதலாக 2016ல் தான் உலகத்தொடரை வென்றது. அதன் வெற்றிப்பேரணியில் 50 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். உலக சாம்பியன்களைக் கொண்டாடும் வகையில் நகரில் ஊர்வலமாகச் செல்லத் திரண்டார்கள்.
வெற்றிப் பேரணிகள் நவீனக் காலக் கண்டுபிடிப்புகள் கிடையாது. ரோமர்கள் போரில் வெற்றிபெறும்போது வெற்றி பேரணி நடத்துவார்கள், பண்டைய காலத்தில் அது பிரபலம். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடி தன்னுடைய படைகளோடும் சிறைப்பிடித்து வந்தவர்களோடும் தளபதிகள் பேரணியாகச் செல்வார்கள்.
“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி கிறுஸ்துவுக்குள்” சிறைப்பட்டவர்களாக நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று இந்தப் பேரணியை மனதில்வைத்துத்தான் கொரிந்து சபைக்கு பவுல் எழுதியிருக்கவேண்டும் (2 கொரி. 2:14). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இங்கு சிறைப்பட்டவர்களாகக் காட்டப்படுவது சுவாரஸ்யமானது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அந்தப் பேரணியில் கட்டாயமாகக் கலந்துகொள்ள நிர்பந்திக்கப்படாமல், உயிர்த்தெழுந்து, வெற்றிபெற்ற கிறிஸ்துவின் தலைமையின்கீழ் மனதாரப் பங்குபெறுகிறவர்களாகக் காணப்படுவார்கள். கிறிஸ்து தாம் வெற்றிபெற்றதன்மூலம் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதையும், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளப் போவதில்லை என்பதையும் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம்.
சிலுவையில் இயேசு வெற்றிபெற்றார், அதனால் விசுவாசிகளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று அறிவிக்கும்போது, “அவரை அறிகிற அறிவின் வாசனையை” எங்கும் பரவச்செய்வதற்கு நாம் உதவுகிறோம். (2 கொரி. 2:14). இந்த வாசனை சிலருக்கு இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிப்படுத்துகிற நற்வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய தோல்விக்கான வாசனையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத இந்த வல்லமையான வாசனையானது நாம் செல்கிற இடங்களிளெல்லாம் நுகரப்படும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் வெற்றியோடு உயிர்த்தெழுந்ததை அறிவிப்பார்கள், அந்த வெற்றிதான் உலகத்திற்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்துள்ளது.
