வகை  |  odb

பகிர்ந்து கொள்வதற்காக உடைக்கப்பட்டது

அவன் தன்னுடைய மனைவியை ஒரு கார் விபத்தில் இழ ந்தபின்பு, நாங்கள் இருவரும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சந்தித்துக் கொள்வோம். சில வேளைகளில் அவன் பதில் தர முடியாத கேள்விகளோடு வருவான், சில வேளைகளில் அவனுக்கு ஆறுதலளிக்கும் நினைவுகளோடு வருவான். உடைக்கப்பட்ட இந்த உலகத்தின் தீய விளைவுகளில் ஒன்று தான் இந்த விபத்து என்பதை காலம் கடந்த போது ஏற்றுக் கொண்டான், தேவன் இவற்றின் மத்தியில் கிரியை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், எங்களுடைய ஆலயத்தில், துயரத்தையும், அதனை எப்படி புலம்பித் தீர்ப்பது என்பதையும் குறித்து பாடம் நடத்தினார், சீக்கிரத்தில் அவர், இழப்பைச் சந்தித்து, வருந்தும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகச் சிறந்து விழங்கினார். சில வேலைகளில் தேவனுக்கு கொடுக்கும்படி நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போது, தேவன் “போதுமானதாக இல்லை” என்று நாம் கருதுவதை எடுத்து விட்டு, அதைத் “தேவைக்கு அதிகமானதாக” மாற்றுகின்றார். 

ஜனங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி, இயேசு சீஷர்களிடம் கூறுகின்றார். அவர்களோ தங்களிடம் ஒன்றுமில்லையென மறுக்கின்றனர், இயேசு, அவர்களிடமிருந்த கொஞ்ச உணவைப் பெருகச் செய்து, சீஷர்களிடம் திரும்பி, அந்த அப்பங்களை அவர்களிடம் கொடுத்து, அவர் செய்ய விரும்பியதை நிறைவேற்றி, “நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்!” (லூக். 9:13-16) என்றார். கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறார், ஆனால், நாம் அதில் ஈடு பட வேண்டுமென அவர் விரும்புகின்றார்.

“நீ எப்படியிருந்தாலும், உன்னிடமிருப்பது எதுவாயிருந்தாலும், அதை என்னுடைய கரத்தில் வை, உடைந்து போன உன்னுடைய வாழ்க்கையை, உன்னுடைய கதையை, உன்னுடைய பெலவீனங்களை, உன்னுடைய தோல்விகளை, உன்னுடைய வேதனைகளை, உன்னுடைய துன்பங்கள் யாவற்றையும் என்னுடைய கரங்களில் வைத்து விடு, அவற்றைக் கொண்டு, நான் செய்யும் காரியங்களைப் பார்த்து நீ அதிசயிப்பாய்” என்று தேவன் நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நம்முடைய வெறுமையிலிருந்து நிறைவைக் கொண்டுவர அவராலேயாகும். நம்முடைய பெலவீனங்களின் வழியாக அவருடைய வல்லமையை வெளிப்படுத்த அவராலே கூடும்.

தேவன் நம்மைக் காக்கிறார்

எங்களுடைய சிறிய பேரன் கரமசைத்து விடை பெற்றான், பின்னர் அவன் திரும்பிப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “பாட்டியம்மா, நாங்கள் போகும் வரை நீங்கள் ஏன் முற்றத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன், அவன் மிகவும் சிறியவனாகையால், அவனுடைய கேள்வியை மிகவும் ரசித்தேன். அவன் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்த்து, அவனுக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுக்க விரும்பினேன், “அது ஒரு வகை மரியாதை” என்றேன். “நீ எனக்கு விருந்தாளியாக வந்திருக்கும் போது, நீ போகும் வரை உன்னை கவனித்துக் கொண்டிருப்பது, நான் உன் மீது கரிசனைக் கொண்டுள்ளேன் என்பதைக் காட்டுகின்றது” என்றேன். அவன் என்னுடைய பதிலை ஏற்றுக் கொண்ட போதும் சற்று கலக்க மடைந்தவனாய் காணப்பட்டான். எனவே நான் ஒரு எளிய உண்மையை அவனுக்கு எடுத்துக் கூறினேன். “நான் உன்னை நேசிப்பதால் உன்னைக் கவனிக்கிறேன், உங்களுடைய கார் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வேன்” என்றேன். அவன் சிரித்தான், என்னை அன்போடு அணைத்துக்கொண்டான். கடைசியாக, அவன் புரிந்துகொண்டான்.

அவனுடைய குழந்தைத்தனமான புரிந்து கொள்ளல், நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்கு அறிவுறுத்தியது, நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய விலையேறப் பெற்ற பிள்ளைகளாகிய நம் அனைவரையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றார், சங்கீதம் 121ல் கூறப்பட்டுள்ளபடி, “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” (வச. 5).    தேவனை ஆராதிக்கும்படி எருசலேம் நோக்கிப் பயணம் செய்த இஸ்ரவேலர், ஆபத்தான பாதை வழியே பயணித்த போது, தேவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார், “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் (வச. 6-7). என்று உறுதியளித்தார். இதேப் போன்று, நம்முடைய வாழ்க்கையாகிய பயணத்தின் போதும், நாம் ஆவிக்குரிய அச்சுறுத்தல்களையும், தீமைகளையும் சந்திக்க நேரிடும், “கர்த்தர் உன் போக்கையும், உன் வரத்தையும்” காப்பார், ஏன்? அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு. எப்பொழுது? “இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்” (வ.8).

தூய ஆராதனை

ஜோசப் போதகராக இருந்த ஆலயம், அதன் நிகழ்ச்சிகளான மேடை நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்குப் பேர் பெற்றது. அவை மிகவும் சிறப்பாகச் செய்யப் படும், ஆயினும் அந்த ஆலயத்தின் சுறுசுறுப்பான காரியங்கள் தொழில் ரீதியாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் கவலையுற்றார். சரியான காரணத்தோடுதான் சபை வளருகின்றதா? அல்லது அதன் செயல்பாடுகளுக்காக வளருகிறதா? ஜோசப் அதனை அறிய விரும்பினார். எனவே அவர் ஆலயத்தின் ஆராதனையைத் தவிர அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆண்டிற்கு நிறுத்தி வைத்தார், இதன் மூலம் சபையினர் தங்களை தேவனுடைய ஆலயமாக மாற்றி, தேவனை ஆராதிக்கச் செய்தார்.

ஜோசப்பின் தீர்மானம் சற்று அதிகமாகத் தோன்றினாலும், எருசலேம் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தினுள் இயேசு நுழைந்த போது, அவர் செய்ததைக் கவனித்தால் இது புரியும். அந்த பரிசுத்த ஸ்தலம் முழுவதும் எளிமையான ஜெபம் நிறைந்திருப்பதற்குப் பதிலாக, ஆராதனை என்ற பெயரில் குழப்பமான வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது,  “புறாக்களை இங்கே வாங்குங்கள்! லில்லி மலரின் வெண்மை நிறமுடைய புறாக்களே, தேவன் விரும்பும் நிறம்!” இயேசு அந்த வியாபாரிகளின் பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார், அங்கு வாங்க வந்தவர்களைத் தடுத்து விட்டார், அவர்கள் செய்த காரியங்களின் நிமித்தம் கோபமடைந்தவராய், “என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்” (ஏசா. 56:7, எரே. 7), “நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மாற். 11:17) என்றார். புறஜாதியாருக்கென்று கொடுக்கப்பட்ட முற்றம், பிறசமயத்தினர் தேவனை ஆராதிக்கும்படி கொடுக்கப்பட்ட இடம், அனுதின தேவைக்கான பொருட்களை வாங்கும் சந்தையாக, பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றப்பட்டிருந்தது.

நாம் வியாபாரம் செய்வதிலும் அல்லது நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதிலும் தவறொன்றுமில்லை, ஆனால் அதற்கான இடம் தேவாலயமாக இருக்க வேண்டாம், நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். நம்முடைய பிரதாமான வேலை இயேசுவை ஆராதிப்பது தான். இயேசு செய்ததைப் போன்று நாமும் காசுக்காரரின் மேசைகளை கவிழ்க்கத் தேவையில்லை. ஆனால் இத்தகைய தீவிர திருத்தங்களைக் கொண்டு வரும்படி, தேவன் நம்மையும் அழைக்கிறார். 

கண்களால் காண்பதையும் விட அதிகம்

இயந்திரங்களை இயக்குபவர்கள், மிகவும் ஆபத்தான விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தங்களின் விரல்கள் கனரக இயந்திரங்களின் சுழல் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் போது, விரல்களை இழக்க நேரிடும். அதிலும் பெரு விரலை இழந்தால், அது பெரிய துயரத்தைக் கொண்டுவரும். இவ்வாறு பெருவிரலை இழந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர். பெருவிரலை பயன் படுத்தாமல் பல் துலக்குதல், சட்டையின் பொத்தான் மாட்டுதல், தலை வாருதல், ஷூ அணிதல், சாப்பிடல் போன்றவற்றை முயற்சித்துப் பார், அந்தப் பெருவிரல் எத்தனை முக்கித்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் சபையில் இத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விளக்குகின்றார். அதிகமாக கண்களுக்குத் தென்படாதவர்கள், அதிகம் பேசாதவர்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதாக, மற்றவர்கள் அவர்களைக் குறித்துக் கருதுவதாக உணர்வர் (1 கொரி. 12:21). இது பேசப்படாத, உணர்வு சார்ந்த கருத்து, சில வேளைகளில் அது சத்தமாகவும் தெரிவிக்கப் படலாம்.

தேவன் நம்மை, ஒருவர் மீது ஒருவர் சம கரிசனையும், சம மரியாதையும் கொடுக்கும்படி அழைக்கின்றார் (வச. 25). ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் (வ.27), இது நாம் பெற்றுள்ள வரங்களைச் சார்ந்து அல்ல, நம் அனைவருக்கும் மற்றவர் தேவை, நம்மில் சிலர் கண்களாயும், செவிகளாயும் உள்ளனர், அவர்கள் பேச வேண்டும், சிலர் பெருவிரலாயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சில வேலைகளில் கண்களால் காண்பதையும் விட அதிக பங்கு உள்ளது.