ஒரு வாலிபனான டேனியல், தனக்குப் போதிய பணம் இல்லை என்ற பயத்தோடு, தன்னுடைய இளம்வயதிலேயே தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் குறியாக இருந்தான். ஒரு பிரசித்திப் பெற்ற கணினி தொழிற்சாலையில் பணியைத்துவக்கி, அதில் படிப் படியாக உயர்ந்தான், மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்தான். மிகப் பெரிய வங்கிக் கணக்கு, உயர் ரக கார், கோடிக் கணக்கான பெருமதியுள்ள வீடு என அவன் விரும்பியதையெல்லாம் வாங்கினான். ஆயினும் அவன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக காணப்பட்டான். “நான் மிகவும் ஆவலோடும் திருப்தியற்றவனாகவும் காணப்படுகிறேன்” என்றான் டேனியல். “உண்மையில் செல்வம் வாழ்வை மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது” என்றான். குவித்து வைக்கப் பட்டுள்ள பணத்தினால் நட்பையும், சமுதாய உறவையும், மகிழ்ச்சியையும் தரமுடியவில்லை, அதிக இருதய வேதனையைத் தான் கொண்டு வருகின்றது என்றான்.

சிலர் தங்களுடைய ஆற்றலையெல்லாம் செலவிட்டு, அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பதன் மூலம் தங்களின் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு முட்டாள் தனமான செயல். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என வேதாகமம் கூறுகின்றது (பிர.5:10). சிலர் தங்கள் எலும்புகள் தேயும் வரை வேலை செய்கின்றார்கள். அவர்கள் போராடி, தள்ளி, மற்றவர்களின் உடைமைகளோடு ஒப்பிட்டு, ஒரு பொருளாதார அந்தஸ்தை அடைய தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார நிலையை அடை ந்தும் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. பிரசங்கி கூறுவதைப் போன்று, “இதுவும் மாயையே” (வச. 10).

உண்மை என்னவெனின், தேவனைத் தவிர வேறெந்த காரியத்தையும் நிறைவேற்றும்படி நாம் உழைப்பதெல்லாம் வீண். நம்முடைய திறமைகளையெல்லாம் பயன் படுத்தி, கடினமாக உழைத்து, இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லது செய்யும்படி வேதாகமம் நம்மை அறிவுறுத்துகின்றது. நாம் எவ்வளவு தான் பொருட்களைச் சேர்த்தாலும், அது ஒரு போதும் நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்ய மாட்டாது. இயேசு ஒருவராலேயே உண்மையான பரிபூரண வாழ்வைத் தரமுடியும் (யோவா. 10:10) – அது அன்பின் உறவுகளினால் ஏற்படும் உண்மையான நிறைவு!