வகை  |  odb

பாதுகாக்கப்படுகிறோம்

வீட்டைச் சுத்தப்படுத்தும் சேவை மையத்தின் முதலாளியான டெபி, தன்னுடைய தொழிலை விரிவாக்கும் நோக்குடன் அதிக வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டிருப்பாள். அவளுக்கு ஓர் அழைப்பு வந்த போது, ஒரு பெண் அவளோடு தொடர்பு கொண்டாள். அவள், “என்னால் இதற்காகும் தொகையை இப்பொழுது கொடுக்க முடியாது; நான் தற்சமயம் புற்று நோய் சிகிச்சையில் இருக்கின்றேன்” என்றாள். அதிலிருந்து டெபி, “புற்று நோய் சிகிச்சையில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை, அவர்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவை செய்யப்படும்” என்று தீர்மானித்தாள். எனவே, 2005 ஆம் ஆண்டு, அவள் ஒரு லாப நோக்கமில்லாத, வீடு சுத்தப்படுத்தும் சேவையை ஆரம்பித்தாள், இதன் வழியாக நிறுவனங்கள் தங்கள் நன்கொடைகள் மூலம் புற்று நோயால் அவதியுறும் பெண்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவையை வழங்கினர். இத்தகைய சேவையைப் பெற்ற ஒரு பெண், சுத்தமாக்கப்பட்ட தன் வீட்டிற்குத் திரும்பிய போது, தனக்குள் ஒரு பெரிய தன்நம்பிக்கையைப் பெற்றாள். அவள், “முதல் முறையாக, நான் புற்று நோயையும் விரட்ட முடியும் என்று நம்ப ஆரம்பித்தேன்” என்றாள்.

நாம் பாதுகாக்கப்படுகின்றோம், ஆதரவளிக்கப் படுகின்றோம் என்ற உணர்வு, நாம் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள உதவியாயிருக்கும். தேவனுடைய பிரசன்னமும், ஆதரவும் நமக்குண்டு என்ற எண்ணம், நமது ஆவியில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றது. சோதனைகளின் வழியாகக் கடந்து செல்லும் அநேகரின் விருப்பமான சங்கீதம் 46 நமக்குச் சொல்வது, “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்”, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்;……பூமியிலே உயர்ந்திருப்பேன். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 1,10-11).

தேவன் தரும் வாக்குத்தத்தங்களை நினைவுகூர்வதும், அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, நமக்கு உதவியாயிருக்கின்றது என்ற எண்ணமும் நம் இருதயங்களை புதுப்பிக்கின்றன, கடினமான வேளைகளைக் கடந்து செல்வதற்கு ஊக்கமும் நம்பிக்கையையும் தருகின்றன.

உதவி செய்ய வல்லவர்

ஜோ தன்னுடைய வேலையிலிருந்து எட்டு வாரம் “இடைவெளியில்”, இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி வந்தான், அது அவனுக்கு விடுமுறை நாட்கள் அல்ல. அவனுடைய வார்த்தையில் கூறினால், “வீடற்றவர்களோடு, அவர்களில் ஒருவராய், பசியோடு, சோர்வுற்றவர்களாய், மறக்கப் பட்டவர்களாய் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை உணர்வதற்கு” வந்திருந்தான். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முறையாக தெருவில் வசித்த அநுபவம் ஜோவிற்கு ஏற்பட்டது. அப்பொழுது அவன் வேலையில்லாதவனாய், தங்குவதற்கு இடமில்லாதவனாய் அந்த பட்டணத்திற்கு வந்திருந்தான். பதின்மூன்று நாட்களாக சிறிதளவு உணவு, உறக்கத்தோடு தெருவில் வாழ்ந்தான். இப்படியாக தேவன் அவனை தயாரித்து, பல ஆண்டுகளாக தேவையிலிருப்போருக்கு உதவும் படி வைத்துள்ளார்.

இயேசு இப்புவிக்கு வந்த போது, தான் இரட்சிக்கும்படி தேடி வந்த மக்களின் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தெரிந்து கொண்டார். “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய் இருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கு… அப்படியானார்” (எபி. 2:14). பிறப்பிலிருந்து மரணம் வரை, கிறிஸ்துவின் மனித அநுபவத்தில், பாவத்தைத் தவிர வேறு எதுவும் குறைவுபடவில்லை (4:15). அவர் பாவத்தை ஜெயித்ததினால், நாம் சோதனைக்குள்ளாகும் போது, அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.

எனவே, இயேசு இப்புவியின் பாடுகளுக்கு புதிதானவர் அல்ல, நம்மை இரட்சிக்கும்படி வந்தவர், நம்மோடு தொடர்பில் இருக்கின்றார், அவர் நம்மீது ஆழ்ந்த அக்கரையுள்ளவராய் இருக்கின்றார், நம்முடைய வாழ்வில் எது வந்த போதும், நம்மை நம்முடைய எதிரியான பிசாசானவனிடமிருந்து மீட்டவர் (2:14), நமது மிகப் பெரிய தேவையின் போது உதவுவதற்கு நம்மருகிலே இருக்கின்றார்.

தேவனைக் குறித்த பசி

இயேசுவைப் புதிதாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வேதாகமத்தை வாசிப்பதற்கு மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தன் கண்பார்வையையும், இரண்டு கரங்களையும் ஒரு வெடி விபத்தில் இழந்தார். ஒரு பெண் தன்னுடைய உதடுகளின் உதவியால் பிரெயில் எழுத்துக்களை வாசிக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட போது, அவரும் அதனைச் செய்ய முயற்சித்தார், ஆனால் உதடுகளின் முனையிலுள்ள உணர்வு நரம்புகளும் செயல் இழந்து விட்டன என்பதை அப்பொழுது கண்டுபிடித்தார். கடைசியாக பிரெயில் எழுத்துக்களை நாவின் நுனியினால் உணரமுடிகிறது என்பதைக் கண்ட போது, மிகவும் மகிழ்ந்தார்! வேதாகமத்தை வாசிக்க ஒரு வழியைக் கண்டு கொண்டார்.

தேவனுடைய வார்த்தையைப் பெற்ற போது, எரேமியா தீர்க்கதரிசி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார், யூதா ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைத் தள்ளிவிட்டதைப் போலல்லாமல் (எரே.8:9) எரேமியா, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே.15:16) என்கின்றார். எரேமியா கீழ்படிந்தார், அவருடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியடை ந்தார். ஆனாலும் அவருடைய கீழ்ப்படிதலின் நிமித்தம், தன்னுடைய சொந்த ஜனங்களாலேயே துன்புறுத்தப்பட்டார் (15:17).

நம்மில் சிலரும் இத்தகைய அநுபவங்களைச் சந்தித்திருக்கலாம். நாம் வேதாகமத்தை மகிழ்ச்சியோடு வாசிக்கின்றோம், ஆனால் தேவனுக்குக் கீழ்படியும் போது, துன்பங்களுக்கும், தள்ளிவிடுதலுக்கும் ஆளாகின்றோம். எரேமியாவைப் போன்று, நம்முடைய குழப்பங்களை தேவனிடம் கொண்டு வருவோம், தேவன் எரேமியாவிற்கு கொடுத்த வார்த்தையை மீண்டும் கூறி பதிலளிக்கின்றார். தேவன் அவரை தீர்க்கதரிசியாக அழைத்த போது கொடுத்த வார்த்தைகளை மீண்டும் கூறுகின்றார் (வச. 19:21; 1:18-19). தேவன் தன்னுடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நினைவுபடுத்துகின்றார், நாமும் இந்த நம்பிக்கையோடு இருப்போம், அவர் உண்மையுள்ளவர், ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டார்.

பரிதாபத்திலிருந்து துதிக்குள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடைகள் வழங்கும் நிகழ்வில், குழந்தைகள், ஆர்வத்தோடும், நன்றியோடும், தங்களுக்குப் பிடித்தமான நிறமும், அளவுமுள்ள உடைகளைத் தேடியெடுத்தனர், இது, அவர்களுக்குத் தன்நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த முயற்சியை எடுத்த ஒருவர் கூறும் போது, புதிய உடைகளை அணிந்த குழந்தைகள், தாங்கள் சுற்றத்தாரால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதை உணர்ந்தனர், அந்தக் குளிர்ந்த கால சூழலில், அது அவர்களுக்கு வெப்பத்தைக் கொடுத்தது.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் ஒரு அங்கி தேவைப்பட்டது. அவர், தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும்… எடுத்துக் கொண்டு வா” (2 தீமோ. 4:13) என்கின்றார். ரோமர்களின் சிறைச்சாலையில் அகப்பட்டு, குளிரினால் கஷ்டப்பட்ட பவுலுக்கு வெப்பமும், ஒரு துணையாளரும் தேவைப் பட்டது. அவர் ஒரு ரோம நியாயாதிபதி முன் நின்ற போது “நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” என்பதாகப் புலம்புகின்றார் (வச. 16). இந்த ஊழியக்காரனின் உண்மையான, வேதனை தரும் வார்த்தைகள் நம் இருதயத்தை குத்துகின்றது.

ஆயினும், பவுல் தன்னுடைய வியத்தகு ஊழியத்தை முடித்தபின்னர், தன்னுடைய கடைசிக் கடிதத்தை முடிக்கும் போது, அவருடைய எண்ணங்கள் சுய பரிதாபத்திலிருந்து துதியாக மாறுகின்றதைக் காண்கின்றோம், “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப் படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (வச. 17) என்கின்ற வார்த்தைகள் நம்முடைய இருதயத்தைத் தேற்றுகின்றன.

நீயும் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கின்றாயா? வெப்பத்தைக் கொடுக்க சரியான உடையின்றி இருக்கின்றாயா? உன்னைத் தேற்றக் கூடிய நண்பர்களின்றி தவிக்கின்றாயா? தேவனை நோக்கிப் பார், அவர் உனக்கு வாழ்வளிக்கவும், உனக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவும், உன்னை மீட்டுக் கொள்ளவும் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். ஏன்? அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்ஜியத்தில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், நமக்குத் துணையாக இருக்கின்றார்.

சுகம் தரும் வார்த்தைகள்

சுகாதார பாதுகாப்பு வழங்குனர் தரும் உற்சாகமளிக்கும் வார்த்தைகள், நோயாளிகள் வேகமாக குணமடைய உதவியாயிருக்கின்றது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது சம்பந்தமான ஆய்வு நடத்திய தன்னார்வ நபர்கள், தோல் அலர்ஜியினால் ஏற்படும் ஊரல் கொண்டிருந்த நோயாளிகளின் விளைவுகளைக் குறித்து கண்டறிந்தனர். தங்கள் மருத்துவரிடமிருந்து ஊக்கம் தரும் வார்த்தைகளைப் பெற்ற நோயாளிகள், மற்றவர்களைக் காட்டிலும் குறைவான அளவே ஊரலையும், வேதனையையும் பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமொழிகளை எழுதியவர், ஊக்கம் தரும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். “இனிய சொற்கள் தேன் கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என எழுதுகின்றார். நேர் முகச்சிந்தனையுள்ள வார்த்தைகள் நமது உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, ஞானமுள்ள வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும் போது, அது காரியங்களை வாய்க்கப்பண்ணும் (வச. 20) என்கின்றார். நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க, அவை ஊக்கமளிப்பதோடு, நம் எதிர்காலத்தையும் சந்திக்க உதவியாயிருக்கும்.

ஏன், எப்படி ஞானமுள்ள வார்த்தைகள் நம் அனுதின வாழ்விற்கு பெலனையும், சுகத்தையும் கொண்டு வருகின்றது என்பதை நாம் முற்றிலும் அறியோம். ஆயினும், நம்முடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நம்முடன் பணிபுரிபவர்கள் தரும் ஊக்கமும், வழிகாட்டலும் சோதனைகளைச் சகிக்க பெலன் தருவதோடு, நம்மையும் வெற்றிக்கு நேராக வழிநடத்தும். நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது, வேத வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அழிப்பதோடு, சோதனைகளைச் சகிக்கவும், நாம் நினைக்க முடியாத சூழல்களையும் கூட கடந்து செல்லவும் நமக்கு பெலனளிக்கின்றன. தேவனே, உம்முடைய ஞானத்தினால் எங்களைப் பெலப் படுத்தியருளும், எங்களுடைய இனிய வார்த்தையினால் சுகத்தையும், நம்பிக்கையையும், நாங்கள் சந்திக்கின்றவர்களுக்கு வழங்கவும் எங்களுக்கு உதவியருளும்.