
அவர் அறிவார்
யமுனா தன் செவிலியர் பணியை மும்பையில் துவங்கவிருந்தாள். வேலைவாய்ப்பு குறைவாயிருந்த தன் கிராமத்தைக் காட்டிலும் தன் குடும்பத்தைப் பராமரிக்க இது அவளுக்கு ஏதுவாயிருந்தது. அவள் புறப்படுவதற்கு முந்தின நாள் இரவில், தன் ஐந்து வயது மகளைப் பராமரிக்கும் தன்னுடைய சகோதரிக்கு சில ஆலோசனைகளைக் கொடுத்தாள். “ஒரு ஸ்பூன் சர்க்கரைக் கொடுத்தால்தான் அவள் மருந்து சாப்பிடுவாள்; அவள் கொஞ்சம் கூச்சப்படுவாள்; தன் நண்பர்களுடன் சகஜமாய் விளையாடுவாள்; ஆனால் அவளுக்கு இருட்டைக் கண்டால் பயம்...”
மறுநாள் ரயிலின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, யமுனா தேவனை நோக்கி, "ஆண்டவரே, என்னைப் போல் என் மகளை யாரும் புரிந்துகொள்ள முடியாது. நான் அவளோடு இருக்க முடியவில்லை. நீர் அவளோடு கூட இரும்” என்று ஜெபித்தாள்.
நாம் நேசிக்கும் மக்களை நாம் நன்கு அறிவோம். அவர்கள் நமக்கு அதிகம் பிடித்தவர்கள் என்பதினால் அவர்களைக் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருப்பது இயல்பு. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாம் அவர்களோடு இருக்கமுடியாவிட்டால், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோவென்று நாம் கவலைப்படுகிறோம,காரணம் அவர்களை நம்மைப்போல யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
சங்கீதம் 139இல், எல்லோரைக் காட்டிலும் நம்மை தேவன் நன்கு அறிவார் என்று தாவீது உணர்த்துகிறார். நம் அன்புக்குரியவர்களையும் அவர் ஆழமாக அறிந்திருக்கிறார் (வச. 1-4). அவரே அவர்களையும் உண்டாக்கினார் (வச. 13-15), ஆகவே அவர்கள் தேவையையும் நன்கு அறிந்திருக்கிறார். அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வை அவர் அறிந்திருக்கிறார் (வச. 16). அவர்களோடே கூட இருக்கிறார், அவர்களைக் கைவிடமாட்டார் (வச. 5, 7-10).
மற்றவர்களுக்காய் நீங்கள் கவலைப்படும்போது அவர்களை நன்றாய் அறிந்திருக்கிற, ஆழமாய் நேசிக்கிற தேவனுடைய பொறுப்பில் ஒப்படைத்துவிடுங்கள்.

எங்கள் பிதாவே
ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.

சேவை மனப்பான்மை
மெக்சிகோவில் உள்ள ஒரு ஊழிய ஸ்தாபனம் ஒவ்வொரு மாதமும் உள்ளூர்வாசிகளுக்கு, சுமார் 11000கி எடை உணவை இலவசமாய் கொடுத்து உதவுகிறது. அதின் தலைவர், “எவராயினும் இங்கே வரலாம். நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் இருக்குமிடத்திலேயே அவர்களை சந்திக்கிறோம். அவர்களின் நடைமுறைத் தேவைகளை சந்திப்பதின் மூலம் அவர்களின் ஆவிக்குரிய தேவையை சந்திப்பதே எங்கள் இலக்கு” என்கிறார். கிறிஸ்தவர்களாய் தேவன் நமக்குக் கொடுத்தவைகளை தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து, மக்களை தேவனிடம் வழிநடத்தவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். தேவனை மகிமைப்படுத்தும் சேவை மனப்பான்மையை நாம் எப்படி வளர்க்கமுடியும்?
தேவன் நமக்குக் கொடுத்த வரங்களை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்று அவரிடம் கேட்பதின் மூலம் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம் (1 பேதுரு 4:10). தேவன் நமக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்கு அளிக்கையில், “அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும்” (2 கொரிந்தியர் 9:12).
மற்றவர்களுக்கு சேவை செய்வது இயேசுவின் ஊழியத்தில் முக்கிய அம்சம். அவர் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கி, பசித்தோருக்கு உணவளித்தபோது, பலரும் தேவனுடைய நற்குணத்தையும், அன்பையும் ருசித்தனர். நம் ஜனத்தின் மீது அக்கறை கொள்கையில், நாம் அவருடைய சீஷராகிறோம். நம்முடைய கிரியைகளின் மூலம் தேவ அன்பை நாம் பிரதிபலிக்கும்போது, ''மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள்'' (வச. 13) என்று அவருடைய ஞானமான யோசனை நமக்கு நினைவூட்டுகிறது. சேவை என்பது சுயதிருப்திக்கானது அல்ல; மாறாக, பிறர் தேவனுடைய அன்பை அறியவும், அவருடைய நாமத்தை தரித்தவர்கள் மூலம் அவர் செய்யும் அதிசயமான நடத்துதலை பிறர் பார்க்கவுமே.

வீட்டிற்காக ஏங்குதல்
“ஆனி ஆஃப் கிரீன் கேபிள்ஸ்” என்ற கதையின் முக்கிய கதாபாத்திரமான ஆனி, குடும்பத்திற்காய் ஏங்கினாள். அநாதையாக்கப்பட்ட அவளுக்கு வீடு திரும்பும் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் வயது முதிர்ந்த மாத்யூ மற்றும் அவருடைய சகோதரி மரில்லா ஆகிய இருவரும் அவளுக்கு ஆதரவு கரம் நீட்ட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் வீடு திரும்பும் பாதையில் ஆனி, தான் அதிகம் பேசியதைக் குறித்து அவரிடத்தில் மன்னிப்புக் கோரினாள். “நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசு, எனக்கு ஆட்சேபனையில்லை” என்று மாத்யூ பதிலளித்தார். இந்த வார்த்தைகள் ஆனியின் காதில் தேனை பாய்ச்சியது. அவளை யாரும் விரும்பமாட்டார்கள், அவள் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் வீடு சேர்ந்தவுடன், அவர்களின் 'வீட்டு பண்ணை வேலைக்கு ஒரு சிறுவன்தான் வரப்போகிறான்' என்று அவளுடைய சகோதரர்கள் எண்ணியதை அறிந்து, அவளுடைய நம்பிக்கை சிதைகிறது. அவளை திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆனால், அவளை அவர்களுடைய குடும்பத்தின் அங்கத்தினராய் ஏற்றதால், அன்பான குடும்பத்திற்காய் ஏங்கிய ஆனியின் கனவு நனவாகிறது.
நாம் விரும்பப்படாதவர்களாகவும், தனிமையானவர்களாகவும் உணர்ந்த தருணங்கள் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் கிறிஸ்துவிலுள்ள இரட்சிப்பால், தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராய் சேர்ந்தபோது, அவரே நமக்கு பாதுகாப்பான வீடாக மாறினார் (சங்கீதம் 62:2). அவர் நம்மில் களிகூர்ந்து, நம்முடைய கவலைகள், சோதனைகள், வேதனைகள், மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து அவரிடம் பேச அழைக்கிறார். "நாம் தேவனில் இளைப்பாறுதல் அடைய முடியும்”, “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்றும் சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 5,8).
தயக்கம் வேண்டாம். தேவனிடத்தில் எவ்வளவு பேச விரும்புகிறீர்களோ, பேசுங்கள். அவர் தவறாய் நினைக்கமாட்டார். அவர் நம் மனதை குறித்து மகிழ்கிறார். அவரில் உங்களுக்கொரு அடைக்கலத்தை கண்டுகொள்வீர்கள்.
