ஆமோஸ், கர்வம் உள்ள ஒரு ஊதாரி, டேனி சுயசந்தேகத்தால் உடைக்கப்பட்ட தனிமையானவன். எப்படியோ இந்த விசித்திரமான அறிவாளிகள் நண்பர்களாயினர். சுமார் 10 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக சிரித்து, கற்று மகிழ்ந்தனர். ஒரு நாள் இவர்களின் வேலைக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் டேனி, ஆமோஸின் சுயநலமான போக்கை சகிக்க கூடாமல் தாங்கள் இதற்கு மேல் நண்பர்களாய் இருக்க முடியாது என்று கூறினார்.

மூன்று நாட்கள் கழித்து, ஆமோஸ் ஒரு கொடுமையான செய்தியோடு தொலைபேசியில் அழைத்தார்; மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர், மேலும் அவர் உயிர்வாழ ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தனர். டேனியின் உள்ளம் உடைந்தது,”நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எண்ணினாலும் சரி, நாங்கள் நண்பர்கள்” என்று கூறினார்.

பவுல் சற்றே கடினமான தொலைநோக்குப் பார்வையாளர், மேலும் பர்னபா மென்மையான இருதயம் கொண்ட ஊக்குவிப்பாளர். ஆவியானவர் இவர்கள் இருவரையும் இணைத்து அருட்பணி பயணத்தில் ஒன்றாக அனுப்பினார் (அப்போஸ்தலர் 13:2-3) அவர்கள் பிரசங்கித்து சபைகளை நிறுவினார்கள். மார்க்குவின் பிரிவினால் உண்டான கருத்து வேறுபாடுமட்டில் ஒன்றாக இருந்தார்கள். பர்னபா, மார்க்குவிற்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்க மனதாய் இருந்தார். ஆனால் பவுல், அவர் இனி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றார். ஆகவே இருவரும் பிரிந்தனர் (அப்போஸ்தலர் 15:36-41).

இறுதியில் பவுல் மார்க்குவை மன்னித்தார். மூன்று நிருபங்களை அவருடைய வாழ்த்துகளோடு ஆரம்பித்தோ அல்லது அவரை பாராட்டி நிறைவோ செய்துள்ளார் (கொலோசெயர் 4:10; 2தீமோத்தேயு 4:11; பிலேமோன் 1:24). ஆனால் பர்னபாவிற்கு என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை. பவுலோடு இந்த வாழ்வில் ஒப்புரவாகும் வரை அவர் வாழ்ந்தாரா? அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்.

உங்களின் இன்றைய சூழ்நிலை எப்படியோ, யாருடனாகிலும் உங்களுக்கு உறவில் பிரிவு இருந்தால் ஒப்புரவாக முயலுங்கள். அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று சொல்வதற்கும், காண்பிப்பதற்கும் இதுதான் நேரம்.