வகை  |  odb

சேவைக்கென ஒன்றாகக் கட்டப்பட்டோம்

கிராமங்களில், களஞ்சியம் கட்டுதல் என்பது ஒரு கூட்டுமுயற்சி. விவசாயி தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்தோ அதைக் கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் கிராம மக்கள் ஒன்றாய் கூடும்போது, வேலை விரைவாக முடியும். முன்னரே மரச்சாமான்களை ஆயத்தப்படுத்தி, கருவிகளை தயார் செய்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மொத்த கிராம மக்களும் காலமே இணைந்து வந்து, வேலைகளை பிரித்துக்கொண்டு, ஒரு களஞ்சியத்தைக் கட்டியெழுப்ப முழுவீச்சில் செயல்படுவர். சிலசமயம் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.
திருச்சபையைக் குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பைக் குறித்தும் தேவனுடைய பார்வையை விளக்க இது ஒரு நல்ல உதாரணம். “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 12:27) என வேதம் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, தேவன் நம் எல்லாரையும் தனித்தனியே தெரிந்துகொண்டு, நம்முடைய விசேஷமான திறமைகளில் நம்மை ஈடுபடச் செய்து, ஒன்றாய் இசைந்திருக்கும் சரீரத்தின் (எபேசியர் 4:16) பாகங்களாக வடிவமைக்கிறார். சமுதாயத்தில், நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” (கலாத்தியர் 6:2) ஊக்குவிக்கப்படுகிறோம்.

இருப்பினும் நாம் பெரும்பாலும் தனித்தே செயல்படுகிறோம். நமக்கு தேவையானவைகளை நாமே வைத்துக்கொள்கிறோம், சூழ்நிலைகளை நாமே கையாளப் பார்க்கிறோம். அல்லது பாரத்தோடு இருக்கும் மற்றவரின் தேவையை சந்தித்து தோள் கொடுக்கத் தவறுகிறோம். ஆனால் நாம் மற்றவர்களோடு இணைந்திருப்பதையே தேவன் விரும்புகிறார். நாம் பிறர் உதவியை கேட்கும்போதும், பிறர் தேவைக்காக ஜெபிக்கும்போதும் அற்புதமான காரியங்கள் நடக்குமென தேவன் அறிந்துள்ளார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்துகொள்ளும்போதே நமக்கென தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியும். மேலும் ஒரே நாளில் களஞ்சியத்தைக் கட்டுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக் குறித்த அவருடைய ஆச்சரியமான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

சாட்சி குறியீடுகள்

“அது தெரிகிறதா?” என என்னைக் கேட்டவாறே, என் தாத்தாவின் பழைய கடிகாரத்தை பழுதுபார்த்தவர் அதிலிருந்த சிறிய, நுட்பமான ஒரு குறியீட்டை ஒளிரும் வெளிச்சத்தில் காட்டினார். “சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பழுதுபார்த்த ஒருவர் இதைக் குறித்திருக்கலாம், இதை “சாட்சிக் குறி” என்பர். இக்கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நான் அறிவதற்கு இது உதவுகிறது” என்றார்.

பழங்காலங்களில் பழுது கையேடுகள், தொழில்நுட்ப குறிகள் இல்லாததால், இதுபோன்ற நகரும் பாகங்களில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய, நுட்பமான “சாட்சி குறிகள்” அதை எதிர்காலத்தில் பழுதுபார்ப்பவர்களுக்கு உதவியது. அது நேரத்தை மிச்சமாக்கும் செயல் மட்டுமல்ல. எதிர்காலத்தில் அதை பழுதுபார்ப்பவர்களுக்கு செய்யப்படும் ஒரு தயவான உதவி.

மற்றவர்களுக்கு உதவிசெய்வதின் மூலம் இந்த உடைக்கப்பட்ட உலகத்தில் நம்முடைய “சாட்சிக் குறியை” விட்டுச் செல்லுமாறு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலர், “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15:2) என்று எழுதுகிறார். இதுவே நமக்கு பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவனின் (வச. 6) நல்ல உதாரணம். இது பரலோகத்திலும் பூலோகத்திலும் ஒரு நல்ல குடிமகனாய் வாழ்வதைக் குறிக்கிறது.
நம் “சாட்சி குறிகள்” அற்பமாய் தோன்றலாம், ஆனால் யாரோ ஒருவரின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை அது உண்டாக்கும். ஊக்குவிக்கும் வார்த்தைகள், தேவையின்போது செய்யப்படும் பண உதவி, கரிசணையோடு பிறர் குறைகளைக் கேட்பது போன்ற இரக்கச் செயல்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். தேவனுக்கென ஒரு குறியீட்டை நீங்கள் யாரோ ஒருவருடைய வாழ்வில் இன்று உண்டாக்க தேவன் உங்களுக்கு உதவுவாராக.

தேவனின் தூதரகம்

லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.

மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்? 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.