லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.

மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்?