
பகுத்தறிவை நிராகரித்தல்
ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி ஒரு பெண் வாகன ஓட்டியிடம் அவளை ஏன் நிறுத்தினார் என்று தெரியுமா என்று கேட்டார். “தெரியாது” என்று அவள் திகைப்புடன் பதிலளித்தாள். “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டினார். “இல்லை இல்லை!” என்று அவள் நிராகரித்து, தன்னுடைய மொபைல் போனை எடுத்துக் காண்பித்து, நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை, மின்னஞ்சல் அனுப்பினேன்” என்றாளாம்.
வாகனம் ஓட்டும்போது குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது என்ற சட்டம் இருப்பதால், மின்னஞ்சல் அனுப்பலாம் என்பது அர்த்தமில்லை. சட்டத்தின் நோக்கம் குறுஞ்செய்தி அனுப்புவதை தடுப்பதல்ல; மாறாக, இது கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டுவதை தடுப்பதேயாகும்.
இயேசு அவருடைய நாட்களின் மார்க்கத்தலைவர்களை மோசமான சட்ட ஓட்டைகளை உருவாக்கியதாக குற்றஞ்சாட்டினார். “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது," என்று அவர் கூறினார். அதற்கு “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (மாற்கு 7:9-10) என்ற கட்டளையை மேற்கோள்காட்டினார். மத பக்தி என்ற போர்வையின் கீழ், இந்த பணக்கார தலைவர்கள் தங்கள் குடும்பங்களை புறக்கணித்தனர். அவர்கள் தங்கள் பணம், “தேவனுக்கு உரியது” என்று வெறுமனே அறிவித்தனர். ஆனால் வயதான காலத்தில் தகப்பனுக்கும் தாய்க்கும் உதவ வேண்டிய அவசியமில்லையென்று கருதினர். “நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்” (வச. 13) என்று அவர்களின் இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை இயேசு கண்டுபிடித்தார். அவர்கள் தேவனை மதிக்கவில்லை; தங்கள் பெற்றோரை அவமதித்தனர்.
பகுத்தறிவு மிகவும் நுட்பமானது. அதன் மூலம் நாம் பொறுப்புகளைத் தவிர்க்கிறோம், சுயநல நடத்தைகளை விளக்குகிறோம், தேவனின் நேரடி கட்டளைகளை நிராகரிக்கிறோம். அது நம் நடத்தையை விவரிக்கிறது என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தம் பிதாவின் நல்ல அறிவுரைகளுக்குப் பின்னால் ஆவியானவரின் வழிகாட்டுதலுக்காக நம்முடைய சுயநலப் போக்குகளை பரிமாறிக்கொள்ள இயேசு நமக்கு வாய்ப்பளிக்கிறார்.

தாராள குணமும் மகிழ்ச்சியும்
தாராள மனப்பான்மைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள், அப்படி செய்யாதவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு உளவியலாளர், “கொடுப்பதை ஒரு மனிதாபிமான கடமையாக நினைப்பதை விட்டுவிட்டு, அதை மகிழ்ச்சியின் ஆதாரமாக கருதத் தொடங்குவோம்” என்று கூறுகிறார்.
கொடுப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மையென்றாலும், நம்முடைய மகிழ்ச்சியை இலக்காய் வைத்து நாம் கொடுக்கிறோமா? என்று கேள்வியெழும்புகிறது. நம்மை மகிழ்விக்கக்கூடியவர்களிடத்தில் மட்டும் நம்முடைய தயாள குணத்தை பிரதிபலித்தால், நமது உதவி தேவைப்படும் கடினமான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு என்ன செய்வது?
கொடுக்கும் இந்த குணாதிசயத்தை வேதம் இன்னொரு கோணத்தில் மகிழ்ச்சியோடு தொடர்புபடுத்துகிறது. தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன் சொந்தச் செல்வத்தைக் கொடுத்த பிறகு, தாவீது ராஜா இஸ்ரவேலரையும் நன்கொடை அளிக்க வலியுறுத்தினான் (1 நாளாகமம் 29:1-5). ஜனங்கள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் என்று மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வந்தனர் (வச. 6-8). ஆனால் அவர்களின் மகிழ்ச்சி என்ன என்பதை கவனியுங்கள்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்" (வச. 9). நம்முடைய சுய மகிழ்ச்சிக்காய் கொடுக்கும்படிக்கு வேதம் ஒருபோதும் நமக்கு கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு தேவையைப் பூர்த்திசெய்ய மனப்பூர்வமாகவும் முழுமனதுடன் கொடுக்க உற்சாகப்படுத்துகிறது. மகிழ்ச்சி அதைத் தொடர்கிறது.
நிர்வாகத் தேவைகளை விட சுவிசேஷ தேவைக்காய் நிதி திரட்டுவது எளிது என்பது மிஷனரிகளுக்கு தெரியும். ஏனென்றால் ஊழியப்பணிக்காக கொடுப்பதற்கு கிறிஸ்தவர்கள் பொதுவாக முன்வருவார்கள். மற்றவர்களின் தேவைகளுக்கும் நாம் தாராளமாய் செயல்படவேண்டும். ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இயேசு தன்னுடைய ஜீவனையே கொடுத்தார் (2 கொரிந்தியர் 8:9).

இயேசு இங்கே இருக்கிறார்
வயது சென்ற என்னுடைய அத்தை, முகத்தில் புன்னகையுடன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் கிடந்தார். அவரது நரைத்த தலைமுடி அவர் முகத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுருக்கங்கள் அவருடைய கன்னங்களை மூடியிருந்தன. அவர் அதிகம் பேசவில்லை, ஆனால் என் பெற்றோருடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் சொன்ன சில வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “நான் தனிமை அடைவதில்லை, இயேசு என்னுடன் இருக்கிறார்" என்று அவர் முனுமுனுத்தார்.
அன்று ஒரு தனி பெண்மணியாய் நின்ற என் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவரது குழந்தைகள் தொலைதூரத்தில் வசித்து வந்தனர். அவரது தொண்ணூறாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் படுத்தபடுக்கையானார். ஆனாலும் அவர் தனிமையில் இல்லை என்று அவரால் சொல்லமுடிந்தது.
“நிச்சயமாக நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை என் அத்தை நம்பியதுபோல நாமும் நம்பவேண்டும். உலகத்தில் போய் தன்னுடைய சுவிசேஷத்தை மக்களுக்கு பறைசாற்றுபடியாகவும், தான் அவர்களோடே இருப்பதாகவும் தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட (வச. 19) இயேசுவின் ஆவி தன்னுடன் இருப்பதாக என்னுடைய அத்தை நம்பினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடனும் நம்முடனும் இருப்பார் என்று இயேசு வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:16-17).
அந்த வாக்குறுதியின் பலனை என் அத்தை அனுபவித்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் படுக்கையில் படுத்திருந்தபோது, பரிசுத்த ஆவி அவருக்குள் இருந்தது. ஆவியானவர் தம்முடைய சத்தியத்தை, என் அத்தையின் மூலம் ஒரு இளம் மகளாய் இருக்கக்கூடிய எனக்கு பகிர்ந்துகொள்ள உதவிசெய்தார்.

நேர்பட பேசு
“எனக்கு அன்பான சிநேகிதனே, சில சமயங்களில் நீங்கள் இருப்பதைவிட பரிசுத்தமாக காண்பித்துக்கொள்ளுகிறீர்கள்."
இந்த வார்த்தைகள் நேர்மையுடனும் மென்மையான புன்னகையுடனும் சொல்லப்பட்டது. அதை என்னுடைய நெருங்கிய சிநேகிதரோ அல்லது நான் மதிக்கும் வழிகாட்டி போன்றவர்களைத் தவிர்த்து வேறு யாரிடமிருந்து வந்திருந்தாலோ, நான் ஒருவேளை வேதனைப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவை உண்மைதான் என்பதை அறிந்து நான் எனக்குள் சிரித்துக்கொண்டேன். சிலவேளைகளில் நான் என்னுடைய விசுவாசத்தை பிரதிபலிக்கையில், எனக்கு சற்றும் பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினேன். அது என்னுடைய நேர்மையின்மையை காட்டிக்கொடுத்தது. ஆனால் என்னுடைய சிநேகிதர், நான் யார் என்பதை நேர்மையுடன் மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ள எனக்கு உதவினார். நான் என் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட சிறந்த ஆலோசனையாய் இதை ஏற்றுக்கொள்கிறேன்.
“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்" (நீதிமொழிகள் 27:6) என்று சாலமோன் ஞானமாய் எழுதுகிறார். என் நண்பரின் ஆலோசனை அதை நிருபித்தது. அதை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், எனக்கு அவசியமான ஒன்றை என்னிடம் சொல்ல அவர் அக்கறை காட்டினார் என்பதை நான் மதிக்கிறேன். சில சமயங்களில் உங்களுக்கு பிடித்தான காரியங்களை மட்டும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறவர்களால் உங்களுக்கு பிரயோஜனம் இருக்காது. அது முக்கியமான சுபாவங்களில் உங்களுடைய வளர்ச்சியை தடுக்கக்கூடும்.
மனத்தாழ்மையுடனும் நேர்மையுடனும் அளவிட்டால், வெளிப்படையான பேச்சுகள் தயவானவைகள். தேவனுடைய தயவுள்ள இருதயத்தை பிரதிபலிக்க அவற்றை நாம் பெற்றுக்கொள்வோம், பிரதிபலிப்போம்.
