வகை  |  odb

உங்களுக்கு உதவி தேவைப்படும்போது

அது ஒரு திங்கட்கிழமை காலை நேரம். என்னுடைய நண்பர் தீபக் அலுவலகத்தில் இல்லை. அவர் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஒரு மாத காலமாய் வேலை இல்லாமையினால் சிரமப்பட்டார். கோவிட்-19 தொற்று காரணமாக அவருடைய நம்பிக்கை தகர்க்கப்பட்டு, எதிர்காலத்தைக் குறித்த பயம் அவரை ஆட்கொண்டது. அவருடைய குடும்பத்தை அவர் தாங்கவேண்டும் என்று அவர் எண்ணினார். உதவிக்கு எங்கு போவது? 

சங்கீதம் 121:1இல் எருசலேமுக்கு பரதேசப் பயணம் மேற்கொண்ட சங்கீதக்காரன் தனக்கு ஒத்தாசை எங்கிருந்து வரும் என்ற அதே கேள்வியை கேட்கிறான். சீயோன் பர்வதத்தில் இருக்கும் பரிசுத்த நகரத்திற்கு போகும் பயணமானது நீண்ட ஆபத்தான பயணம். பல மலைகளை கடக்கவேண்டியிருக்கும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும் ஏறத்தாழ அவர்கள் சந்திக்கும் சவால்களைப் போன்றதே, வியாதி, உறவுமுறை பிரச்சனைகள், துயரம், வேலையில் மன உளைச்சல் என்பன. தீபக் பணத்தேவை மற்றும் வேலையில்லாமை ஆகிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும் என்று நம்முடைய இருதயத்தை தேற்றிக்கொள்ள முடிகிறது (வச. 2). 

அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்  (வச. 3,5,7-8), நம்முடைய தேவை என்ன என்பது அவருக்குத் தெரியும். பார்த்துக்கொண்டிருத்தல் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட “ஷாமர்” என்னும் எபிரெய வார்த்தைக்கு “பாதுகாத்தல்” என்று பொருள். உலகத்தை உண்டாக்கிய தேவன் நமக்கு பாதுகாவலராயிருக்கிறார். அவருடைய பாதுகாப்பில் நாம் இருக்கிறோம். “தேவன் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்தார்: சரியான தருணத்தில் எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்கச் செய்தார்” என்று சமீபத்தில் தீபக் சாட்சி சொல்லக்கேட்டேன்.

நாம் தேவனை நம்பி ஒவ்வொரு அடியிலும் அவருக்கு கீழ்ப்படியும்போது, நாம் தேவனுடைய ஞானம் மற்றும் அன்பு என்னும் பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டிருக்கிறோம் என்பதை நாம் பார்க்க முடியும்.

இறங்குமிடம்

மான் குடும்பத்தை சேர்ந்த, இம்பாலா என்று அழைக்கப்படும் ஒருவகையான மான் இனம், பத்து அடி உயரம், முப்பது அடி நீளம் வரை தாவக்கூடியது. அது வாழும் ஆப்பிரிக்க காடுகளில், இந்த சுபாவம் அதற்கு தேவைதான். ஆனால் மிருகக்காட்சிசாலைகளில் இவ்வகை இம்பாலா மான்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் மதிற்சுவர்களின் உயரம் வெறும் மூன்று அடிதான் இருக்குமாம். இந்த அளவிற்கு உயரம் தாண்டக்கூடிய மான்களை குறுகிய சுவருக்குள் எப்படி அடைத்து வைக்கமுடியும்? இது எப்படி சாத்தியமாகிறது என்றால், இம்பாலா மான்கள் தரையிரங்கும் இடத்தை பார்க்க இயலாவிடில், அது தாவ முயற்சிக்காதாம். மூன்று அடி உயரமுள்ள சுவர்கள், தூரத்தை பார்க்கவிடாமல் அதின் பார்வையை மறைப்பதால், அந்த சுவரின் மறுபக்கத்தில் இருப்பதென்ன என்பது அதற்குத் தெரியாது, அதினால் அது தாவ முயற்சிக்காதாம்.

மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. நாம் அடுத்த அடி எடுத்து வைக்குமுன்னரே விளைவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசுவாச வாழ்க்கையும் சிலவேளைகளில் அப்படியிருக்கிறது. கொரிந்து சபைக்கு பவுல் எழுதும்போது, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:7) என்று நினைவூட்டுகிறார்.

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும்படிக்கு இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அதற்காக அதின் விளைவை நாம் முன்கூட்டியே அறியமுடியும் என்று அர்த்தமல்ல. விசுவாசத்தில் வாழ்வதென்பது, தேவனுடைய சித்தத்தை நாம் அறியமுடியாவிட்டாலும், அவருடைய நன்மையான நோக்கத்தை நம்பி நடப்பதென்பதுதான். வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறும்வேளைகளில் அவருடைய மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைக்கமுடியும். வாழ்க்கை நம்மை எங்கு தூக்கி எறிந்தாலும் “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க” நாடுவோம் (2 கொரிந்தியர் 5:9).

வாழ்நாள் பாடம்

ஷிபுமோனும் எலிசபெத்தும் கேரள மாகாணத்தின் பசுமையான ஊரிலிருந்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து, பாம்பு பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அவ்வளவு யாரும் சென்றதில்லை. ஆனாலும் அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலைத் தொடரக்கூடாது என்பதற்காக இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

 யோய்தா என்னும் பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று. ஆனால் அதற்கு தேவனுக்கான வாழ்நாள் அர்ப்பணம் என்று அர்த்தம். நேர்த்தியாக ஆட்சி செய்த யோவாஸ் ராஜாவின் நாட்களில் இவன் ஆசாரிய ஊழியம் செய்தான் - யோய்தாவிற்காய் நன்றி. யோவாஸ் ஏழு வயதாயிருக்கும்போது, அவரை ராஜாவின் ஸ்தானத்திற்கு அபிஷேகம் பண்ணியது ஆசாரியனாகிய இந்த யோய்தா (2 இராஜ. 11:1-16). ஆனால் இது அதிகார பறிப்பு இல்லை. யோவாஸின் முடிசூட்டு நிகழ்வில் யோய்தா, “அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கை பண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும்” செய்தான் (வச. 17). அவன் தேசத்தின் மீது சீர்திருத்தத்தை ஏற்படுத்தினான். “யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்” (2 நாளாகமம் 24:14). அவனுடைய அர்ப்பணிப்பிநிமித்தம், “அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்” (வச. 16).

தேவனை மையமாய் வைக்கும் இந்த வாழ்க்கை முறையை, “ஒரே பாதையில் நிலையான கீழ்ப்படிதல்” என யூஜின் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். புகழ், பதவி மற்றும் சுயநலத்தினால் கறைபடிந்திருக்கிற உலகத்தில் இவ்வகையான கீழ்ப்படிதல் அவசியப்படுகிறது.

சத்தியத்தை பறைசாற்றுதல்

கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில், முதியவர்கள் பலர் தங்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிலிருந்து மீளுவதற்கு அவர்கள் புதிய வழியை கண்டுபிடித்தனர். முதியவர்களில் பலர் சமூக ஊடகங்களின் உதவியோடு தங்கள் பேரப்பிள்ளைகளோடு தங்களுடைய உறவை வலுப்படுத்தினர். காணொலி ஊடகங்கள் வாயிலாக பலர் குடும்ப ஜெபங்களையும் செய்தனர். வேதாகமத்தின் சத்தியத்தை பெற்றோரும், முதியவர்களும் அடுத்த தலைமுறையினருக்கு நேர்த்தியான வழியில் கொடுப்பதென்பது, தங்களுடைய சந்ததிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழியாகும். உபாகமம் 4இல், “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும்,” “அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும்” (வச. 10) என மோசே ஜனங்களை எச்சரிக்கிறார். மேலும் இந்த

காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொல்லுவதின் மூலம் அவர்கள் தேவனை கனப்படுத்துவார்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் சத்தியத்தின்படி வாழ்வார்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

நம்முடைய குடும்ப உறவுகளை நம்முடைய மகிழ்ச்சிக்காய் தேவன் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில், அவ்வுறவு தேவனுடைய ஞானத்தை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவும் “நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக(வும்)” (2 தீமோத்தேயு 3:16-17) வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி, செல் அழைப்பு, காணொலி மூலம் அல்லது நேரடியாகவோ, அடுத்த தலைமுறையினருக்கு நாம் தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் தேவனை ருசிபார்க்க நாம் உதவுகிறோம்.

இரு வீடுகள்

வீடுகளின் ஸ்திரத்தன்மையை பரிசோதிக்கத் தீர்மானித்த பொறியாளர்கள், மூன்று வகையான வீடுகளைக் கட்டி, அதை 8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் மூலம் பரிசோதித்தனர். அதில் களிமண் சுவர்களால் கட்டப்பட்ட வீடு முற்றிலும் அழிந்துபோனது. மண் சாந்து மற்றும் செங்கல் சுவர்களால் கட்டப்பட்ட வீடும் விழுந்துபோனது. ஆனால் நல்ல தரமான சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடானது பலத்த விரிசல்களோடு அப்படியே நின்றது. “இதில் நீங்கள் எந்த வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியோடு பொறியாளர் இந்த ஆய்வினை நிறைவுசெய்தார். 

தேவனுடைய இராஜ்யத்தின் மேன்மையைக் குறித்த இயேசுவின் போதனையின் இறுதியில், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று குறிப்பிடுகிறார். பலத்த காற்று வீசியபோதும் அந்த வீடு நிலைத்து நின்றது. ஆனால் அதற்கு முரணாக, தன்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26) என்றும் குறிப்பிடுகிறார். பெருங்காற்று வீசியபோது, புயலின் கோரத்தை தாங்க முடியாமல் அந்த வீடானது விழுந்துபோனது.  

இயேசு மக்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார்: கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நிலையான அஸ்திபாரத்தில் வீட்டைக் கட்டுவது அல்லது சுய வழியில் வீட்டைக் கட்டுவது. நாம் சரியானதைத் தெரிந்தெடுக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகளின் மீதும் கட்டுகிறோமா? அல்லது சுய வழியில் கட்டுகிறோமா? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு நம்முடைய ஜீவியத்தை கிறிஸ்துவின் மீது கட்ட முற்படுவோம்.