“தாத்தா அங்கே பாருங்கள், மரங்கள் தேவனை நோக்கிக் கையசைக்கின்றன” என என் பேரன் கவனித்துச் சொன்னது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. புயலுக்கு முன் வீசும் காற்றில் வளைந்த மரக்கிளைகளைப் பார்த்து அவன் அப்படிச் சொன்னான். இதுபோன்ற கற்பனைத்திறன் கொண்ட விசுவாசம் என்னிடம் உள்ளதா? என்று என்னை நானே கேட்கவும் தூண்டப்பட்டேன்.

‘மோசேயும், எரியும் முட்புதரும்’ வேதாகம சம்பவத்தை எலிசபெத் பாரெட் பிரவுனிங் எனும் கவிஞர் இவ்வாறு கூறுகிறார்: “மண்ணை விண் நெருங்கும்போது, தேவனுக்குமுன் எல்லா முட்புதருமே ஜுவாலிக்கும், ஆனால் அதை நோக்குகிறவன் மட்டுமே பாதரட்சைகளைக் கழற்றுவான்”. நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலுமே தேவனின் கைவண்ணம் ஒளிருகிறது. தேவன் இந்தப் பூமியை ஒரு நாள் புதுப்பிக்கையில், இதுவரைக் கண்டிராததை நாம் காண்போம்.

தேவன், ஏசாயாவின் மூலம், இந்த நாளைக் குறித்துத்தான் அறிவிக்கிறார் “நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.” (ஏசாயா 55:12). பாடும் பர்வதங்கள்? கைகொட்டும் மரங்கள்? ஏன் இது சாத்தியமில்லை? பவுலும், “அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” (ரோமர் 8:20) எனக் குறிப்பிடுகிறார்.

கூப்பிடுகிற கற்களைக் குறித்து இயேசு ஒருமுறை பேசினார் (லூக்கா 19:40). இயேசுவின் இந்த வார்த்தைகள், தன்னிடம் இரட்சிப்பிற்காக வருபவர்கள் அடையப்போகும் எதிர்காலத்தைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை எதிரொலிக்கிறது. தேவன் மட்டும் செய்யக்கூடிய காரியங்களை கற்பனை செய்யும் விசுவாசத்துடன், அவரையே நோக்கிப்பார்க்கையில், அவருடைய முடிவில்லா ஆச்சரியங்களைக் காண்போம்.