மீட்புப்பணி
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பண்னை விலங்குகள் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வல ஊழியர்கள், 34 கிலோ எடைகொண்ட அழுக்கு கம்பளி தோலுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆட்டை மீட்டனர். அந்த ஆடானது ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கண்டறிந்தனர். அதின் மேலிருக்கும் இறுகிய கம்பளித் தோலை கவனமுடன் வெட்டியெடுத்தனர். அதின் பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டு புஷ்டியான ஆகாரத்தை சாப்பிட, அதின் கால்கள் வலுவடையத் துவங்கியது. அதை மீட்டவர்களுடனும் சரணாலயத்தில் இருந்த மற்ற விலங்குகளுடனும் அது பழகுவதை மிகவும் ஆரோக்கியமாய் எண்ணியது.
சங்கீதக்காரன் தாவீது, அதிக பாரத்தைச் சுமந்து தொலைக்கப்பட்டவராய், மீட்பின் அவசியத்தை எதிர்பார்த்திருக்கும் வேதனையை புரிந்துகொண்டான். சங்கீதம் 38இல், தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறான். அவன் தனிமைப்படுத்தப்பட்டவனாய், கைவிடப்படுதலையும் ஆதரவற்ற நிலைமையையும் அனுபவித்தான் (வச. 11-14). ஆகிலும் அவன் விசுவாசத்தோடு, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்” என்று ஜெபித்தான். தாவீது அவனுடைய இக்கட்டான சூழ்நிலையையும் மாம்ச பெலவீனத்தையும் மறுக்கவில்லை (வச. 16-20). ஆகிலும் அவனுடைய தேவன் சரியான நேரத்தில் அவனுக்கு சகாயஞ்செய்ய இறங்குவார் என்று நம்பியிருந்தான் (வச. 21-22).
நாம் சரீரப்பிரகாரமான, மன ரீதியான, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாரங்களால் அழுத்தப்படுவதாக உணரும்போது, தேவன் நம்மை உண்டாக்கியதிலிருந்து தீர்மானித்திருந்த மீட்புப்பணியின் மூலம் நம்மை மீட்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கி, “என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்” (வச. 22) என்று விண்ணப்பித்து மன்றாடலாம்.

சிறிய துவக்கம்
1883இல் ப்ரூக்ளைன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டபோது, அதுவே “உலகத்தின் எட்டாம் அதிசயம்” என்று கருதப்பட்டது. ஒரு கோபுரத்திலிருந்து அடுத்த முனையிலிருக்கும் கோபுரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு கேபிள் கம்பியானது அதைத் தாங்குவதற்கு போதுமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய கேபிள், மற்ற மூன்றையும் ஒன்றாக இணைக்கும் வரை கூடுதல் கம்பிகள் முதலில் சேர்க்கப்பட்டன. கடைசியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட துத்தநாகப்பூச்சி பூசப்பட்ட கம்பிகள் இணைக்கப்பட்டு, அந்த தொங்குபாலத்தை அதின் நாட்களில் தாங்குவதற்கு ஏற்ற விதத்தில் அமைந்தது. சாதாரணமான ஒன்றிலிருந்து துவங்கி ஆச்சரியமான ஒரு படைப்பாய் இந்த பரூக்ளின் பாலம் மாறியது.
இயேசுவின் வாழ்க்கை வெகு சாதாரணமாய் துவங்கியது. ஒரு சிறிய பட்டணத்தில் வைக்கோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த குழந்தை பிறந்தது (லூக்கா 2:7). இந்த எளிமையான பிறப்பை மீகா தீர்க்கதரிசி, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்” (மீகா 5:2; காண்க மத்தேயு 2:6). எளிமையான துவக்கத்தைக்கொண்ட இந்த ராஜா மற்றும் மேய்ப்பர் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (மீகா 5:4).
இயேசுவின் வாழ்க்கை வெகு எளிமையாய் துவங்கியது. அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையானது, “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,” தன்னை தாழ்த்தி, ஒரு குற்றவாளியாய் சிலுவையில் மரிக்க அனுமதிக்கப்பட்டது (பிலிப்பியர் 2:8). அவருடைய விலையேறப்பெற்ற அந்த தியாகத்தினால் தேவனுக்கும் நமக்கும் இருந்த இடைவெளியை அவர் பூர்த்திசெய்து, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளினார். இந்த பண்டிகை நாட்களில், கிறிஸ்து என்னும் தேவனுடைய இந்த விலையேறப்பெற்ற பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவரை விசுவாசிக்கக்கூடுமானால், அவர் செய்த நன்மைகளுக்காய் அவரை தாழ்மையாய் துதியுங்கள்.

மகிழ்ச்சியை தேர்வுசெய்!
ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார்.
நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம்.

வலிமையாக நிரைவேற்றுதல்
இந்தியாவின் முதுமையான தடகள வீராங்கனையாக மன் கவுர் என்ற பெண் தனது 103 ஆம் வயதில், போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும்விதமாக ஈட்டி எறிதல், குண்டெறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டர் ஓட்டம் என நான்கு பிரிவுகளில், கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியமானது, தான் 2017 ஆம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப்பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டில் ஓடியது, எவ்வாறு சிறப்பாக முடிக்க வேண்டுமென்பதைக் காட்டியது.
அப்போஸ்தலன் பவுலும், இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வாழ்வின் இறுதி நாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். "நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது." (2 தீமோத்தேயு 4:6) என்று எழுதினார். பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்" (வ.7) என்றார். தமது வியத்தகு சாதனைகளைக் கருத்தில்கொண்டோ, தான் ஏற்படுத்திய அகன்ற தாக்கத்தை எண்ணியோ (அவை ஆச்சரியமானவைதான்) அவருக்கு இத்தகைய நம்பிக்கை வரவில்லை. மாறாக, அவர் தனது விசுவாசத்தைக் காத்துக்கொண்டதை (வ.7) அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன், இயேசுவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்பதுன்பங்களின் மத்தியிலும் தம்மை அழிவினின்று மீட்டவரைப் பின்பற்றினார். தனது உண்மையுள்ள வாழ்வைக் கௌரவப்படுத்தும் விதமாக, "நீதியின் கிரீடத்தோடு" (வ.8) இயேசு ஆயத்தமாய் நின்றுகொண்டிருப்பதை அறிந்திருந்தார்.
பவுல், இந்த கிரீடம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று சொல்லாமல் , "அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." (வ.8) என்று வலியுறுத்துகிறார். ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாமும்கூட, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் கிரீடமளிக்க ஆவலாய் இயேசு நிற்பதை நினைவில்கொள்வோம். சிறப்பாக ஓட்டத்தை முடிக்க வாழ்வோம்.

அமளியினூடே கிருபை
நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.
பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.
இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.
அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.