கெய்த், காய்கறிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்போது மனச்சோர்வுற்றவராய் தென்பட்டார். பார்கின்சன் வியாதியின் ஆரம்ப அறிகுறிகளினால் அவருடைய கைகள் நடுங்கிற்று. அவருடைய வாழ்க்கையின் தரம் எப்போதிலிருந்து குறையத் தொடங்கியது? அவருடைய மனைவியும் பிள்ளைகளும் இதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகின்றனர். அவருடைய இந்த மங்கலான நினைவுகளை அங்கே ஏற்பட்ட வெடிச் சிரிப்பு சத்தம் குறுக்கிட்டது. உருளைக் கிழங்கு வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு சிறுவனை சக்கர நாற்காலியில் வைத்து ஒருவர் கூட்டிவந்திருந்தார். அவர் குனிந்து அந்த சிறுவனின் காதுகளில் ஏதோ ஒன்றை கிசுகிசுக்க, அவனால் அந்த சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. அவனுடைய நிலைமை கெய்த்தின் நிலைமையைக் காட்டிலும் மிக மோசமான ஒன்றாய் இருந்தது. இருந்தாலும், அவர்களால் முடிந்தவரை மகிழ்ச்சியை அனுபவித்துக்கொண்டிருந்தனர். 

அப்போஸ்தலர் பவுல் வீட்டுக்காவலில் சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டு, தம்முடைய தீர்ப்புக்காய் காத்திருக்கும் தருவாயில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் சூழ்நிலை நிலவவில்லை (பிலிப்பியர் 1:12-13). பேரரசன் நீரோ, வன்முறைக்கும் கொடுமைக்கும் பெயர்போன ஒரு கொடுங்கோலன். எனவே பவுல் கவலைப்படுவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், அவர் இல்லாததால் மற்ற பிரசங்கிமார்கள் அதை தங்களுடைய புகழை பறைசாற்றுவதற்கு சாதகமாய் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்பதும் பவுலுக்குத் தெரியும். அவர்கள் பவுலின் சிறையிருப்பில் அவருடைய “உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து” (வச. 17) செயல்பட்டனர். 

ஆகிலும் பவுல் மகிழச்சியாயிருப்பதை தெரிந்துகொண்டார். பிலிப்பியர்களுக்கும் அந்த மாதிரியை பின்பற்றும்பொருட்டு அறிவுறுத்தினார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (4:4). நம்முடைய சூழ்நிலைகள் இருள்சூழ்ந்ததாய் தென்படலாம். ஆனால் இயேசு நம்மோடிருக்கிறார். அவர் ஒரு மகிமையான எதிர்காலத்தை நமக்காய் வாக்குப்பண்ணியிருக்கிறார். தம்முடைய கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்த இயேசு, அவரைப் பின்பற்றுகிறவர்களை அவரோடு வாழ அழைத்துச் செல்வதற்கு மீண்டும் வருவார். இந்த புதிய ஆண்டை நாம் மகிழ்ச்சியோடு துவக்குவோம்!