ஆயிரம் புள்ளிகள் விளக்கு
அமெரிக்காவின் வடமேற்கு அலபாமாவில் உள்ள டிஸ்மல்ஸ் கேன்யன் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒருவகையான புழுக்கள் குஞ்சுபொரித்து, பளபளக்கும் புழுக்களாக மாறி, இரவில் இந்த பளபளப்பான புழுக்கள் ஒரு நீலநிறமான ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் அதுபோன்று ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான ஒளியை தோற்றுவிக்கின்றன.
பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்தவர்களை அவ்விதமாய் ஒளிரும் புளுக்காய் கருதுகிறார். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8). ஒருசில வேளைகளில் என்னுடைய இந்த சிறிய விளக்கு எவ்விதம் ஒளிதரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு தனிநபரின் விளக்கு அல்ல என்று பவுல் சொல்லுகிறார். அவர் நம்மை “வெளிச்சத்தின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார் (வச. 8). மேலும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,” தேவன் நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றியிருக்கிறார் என்றும் சொல்லுகிறார் (கொலோசெயர் 1:12). உலகத்திற்கு ஒளியாயிருப்பது என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாய் இணைந்து செயல்படுத்துகிற ஒரு கூட்டு முயற்சி. அதை ஒளிரும் புளுக்களாய், “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசியர் 5:19) தேவனை மகிமைப்படுத்தும்படியாய் பவுல் வலியுறுத்துகிறார்.
நாம் சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஜீவியத்தின் சாட்சியை நினைவுகூருவது என்பது இருண்ட சூழ்நிலையில் ஒளிரும் ஒரு விளக்கைப் போன்று தெரியலாம். ஆனால் நாம் தனியாள் இல்லை. தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரயாசப்படுவோம். ஒளிகொடுக்கும் புளுக்கள் ஒன்றாக இணைந்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு ஈர்ப்போம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
“மோசேயைப் போன்று நீங்கள் எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தீர்” ஜமீலா ஆச்சரியப்பட்டார். பாகிஸ்தானில் செங்கல்சூளை முதலாளிக்கு அவர்கள் செலுத்தவேண்டிய அதிகப்படியான பணத்தை திரும்பச்செலுத்த வசதியில்லாத காரணத்தினால், அதே சூளையில் கொத்தடிமையாக அவளும் அவரது குடும்பமும் பணியாற்றினர். அவர்களின் சம்பாத்தியத்தின் பெரும்பகுதி வட்டியை செலுத்துவதற்கே செலவாகியது. அவர்களின் கடன் தொகையை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் பரிசாக பெற்றபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிக்கு நன்றி செலுத்துகையில், கிறிஸ்துவின் விசுவாசியான ஜமீலா, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் மோசேயை பயன்படுத்திய உதாரணத்தை சுட்டிக்காண்பித்தார்.
இஸ்ரவேலர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எகிப்தியர்களால் ஒடுக்கப்பட்டனர். கடுமையான சூழ்நிலையில் உழைத்தனர். தேவனிடம் உதவி கேட்டு மன்றாடினர் (யாத்திராகமம் 2:23). ஆனால் அவர்களது பணிச்சுமை அதிகரித்தது. ஏனெனில் புதிய பார்வோன், செங்கற்கள் செய்வது மட்டுமல்லாது அவற்றை சுடுவதற்கு தேவையான வைக்கோலை சேகரிக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தினான் (5:6-8). இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி கூக்குரலிட்டபோது, தேவன் அவர்களுடைய தேவனாய் இருக்கும் உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (6:7). இனி அவர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களை ஓங்கிய கையினால் மீட்பதாக வாக்குப்பண்ணுகிறார் (வச. 6).
தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தார் (அதி. 14). இன்றும் சிலுவையில் தன்னுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விரிந்த கரத்தினால் தேவன் நம்மை மீட்கிறார். நம்மை ஒருகாலத்தில் அடிமைப்படுத்தி வைத்திருந்த பாவத்திலிருந்து நாம் இன்று விடுதலையாக்கப்பட்டுள்ளோம். நாம் இனி அடிமைகள் இல்லை, சுதந்தரவாளிகள்!

தேவ பிரசன்னத்தின் முக்கியத்துவம்
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.
இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிடட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).
நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழக்;கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.

அடைக்கல மக்கள்
பில் மற்றும் சாண்டி, அகதிக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்து அதில் இருவரை தங்களுடைய வீட்டில் தங்கவைத்துக்கொள்ள மனம்திறந்தனர். அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த பிறகு, அவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்று அமைதியாய் யோசித்தனர். அவர்கள் இங்கே தங்குவதற்கு மனரீதியாய் ஆயத்தமாய் இருக்கிறார்களா? அவர்களுடைய மொழி, கலாச்சாரங்கள் ஆகியவைகள் வேறு என்றாலும், அவர்கள் இந்த விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கு அடைக்கலமான மக்களாக மாறினார்கள்.
ரூத்தின் கதையைக் கேட்டு போவாஸ் நெகிழ்ச்சியடைந்தார். அவள் தன்னுடைய சொந்த ஜனத்தை விட்டுவிட்டு, நகோமிக்கு ஆதரவாய் செயல்படுவதற்கு முன்வந்த கதையைக் கேள்விப்பட்டு, போவாஸ் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” (ரூத் 2:12) என்று அவளுக்காக ஜெபித்து அவளை ஆசீர்வதித்தான்.
ஒரு நாள் இரவில் ரூத் போவாஸ_டைய வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவனுடைய ஆசீர்வாதத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறாள். தன் கால்களில் ஏதோ ஒருவகையான அசைவை உணர்ந்த போவாஸ் “நீ யார்” என்று கேட்கிறான். அதற்கு ரூத், “நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (3:9).
வஸ்திரத்தின் ஓரம் என்பதற்கும் செட்டைகள் என்பதற்கும் எபிரெயம் ஒரே வார்த்தையையே பயன்படுத்துகிறது. போவாஸ் ரூத்தை மணந்துகொள்வதின் மூலம் அவளை சுதந்தரவாளியாக்குகிறான். அவர்களுடைய கொள்ளுபேரனாகிய தாவீது அந்த கதையை தன்னுடைய பாடலில் பரதிபலிக்கிறான்: “தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்கீதம் 36:7).

நம்பகமானதும் பெலவீனமானதும்
“ஏய், போ ஃபாங்!” என்று என்னும் திருச்சபை சிநேகிதன் ஒருவன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதில் “இந்த மாததத்தில் நடைபெறும் பராமரிப்புக் குழுவில், நாம் அனைவரும் யாக்கோபு 5:16 சொல்லுவதுபடி செய்ய முயற்சிக்கலாம். அவ்வாறு செய்வதின் மூலம் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாய் பகிர்ந்துகொண்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்கக்கூடும் என்று சொன்னார்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு ஒரு கணம் தெரியவில்லை. எங்கள் பராமரிப்புக் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், நாங்கள் ஒருபோதும் எங்கள் வலிகள் மற்றும் வேதனைகளை ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பெலவீனமாய் இருப்பது பயமுறுத்தக்கூடிய காரியம்.
ஆனால் நாமெல்லாரும் பாவிகள்; நம் அனைவருக்கும் போராட்டங்கள் இருக்கிறது என்பதே உண்மை. நம் அனைவருக்கும் இயேசு தேவை. தேவனுடைய ஆச்சரியமான கிருபைகளைக் குறித்தும், கிறிஸ்துவை நாம் எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோம் என்பதைக் குறித்தும் பேசுவது, கிறிஸ்துவில் தொடர்ந்து நம் நம்பிக்கையை வைப்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளே இல்லை என்பதுபோல் நடிப்பதை நிறுத்திக்கொள்வோம்.
“சரி, நாம் அதைச் செய்யலாம்” என்று பதிலளித்தேன். ஆரம்பத்தில் அது எனக்கு விகற்பமாய் தோன்றியது. ஆனால் ஒருவர் மனந்திறந்து பேச ஆரம்பித்த பின்பு, மற்றவர்களும் அதே வழியை பின்பற்றத் துவங்கினர். ஒருசிலர் எதையும் பேசாமல் மௌனம் காத்தாலும், அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. அந்த பராமரிப்புக் குழுவின் இரண்டாம் பகுதியை “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” என்னும் யாக்கோபு 5:16ன் ஆலோசனையின் பிரகாரம் நிறைவுசெய்தோம்.
அன்றைய தினத்தில், கிறிஸ்துவின் ஐக்கியம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசத்தின் நிமித்தம், நாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக செயல்பட்டு, நம்முடைய பெலவீனத்திலும் போராட்டங்களிலும் மற்றவர்களின் உதவியையும் நாடமுடியும்.