அன்புடன் அளிக்கப்பட்ட ஈவு
க்வென்டோலின் ஸ்டுல்கிஸ் தனது திருமண த்திற்கு, தான் அதிகமாக விரும்பிய ஆடையை அணிந்திருந்தார். பிறகு அவள் தான் அறியாத ஒரு நபருக்கு அதைக் கொடுத்துவிட்டாள். தூசிபடிய ஒரு அலமாரியில் இருப்பதைவிட மேலான நோக்கம் ஆடைக்கு உண்டு என்று ஸ்டுல்கிஸ் நம்பினார். மற்ற மணப்பெண்களும் இதற்கு இசைந்தனர். தற்போது ஏராளமான பெண்கள் திருமண ஆடைகளை நன்கொடையாக வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். ஒரு நன்கொடையாளர் "இந்த ஆடை ஒரு மனைகளிடமிருந்து வேறு ஒரு மணமகளுக்கென்று தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன்; மேலும் மேலும் இது பயன்படுத்தப்படுவதால் தேய்ந்து, கிழிந்து போய் அதன் வாழ்க்கையின் இறுதியில் சிதைந்து போகிறது" என்கிறார்..
தாராளமாகக் கொடுக்கும் குணம், உண்மையில் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். எழுதப்பட்டதுபோல, "வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." (நீதிமொழிகள் 11:24-25)
அப்போஸ்தலன் பவுல் புதிய ஏற்பாட்டில் இக்கொள்கையைப் போதித்தார். அவர் எபேசுவின் விசுவாசிகளிடம் விடைபெறுகையில், அவர்களை ஆசிர்வதித்தார் (அப்போஸ்தலர் 20:32) மற்றும் உதாரத்துவமாகக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டினார். பவுல் தனது நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். "இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்." (வ. 35).
நம் வாழ்வில் உதாரத்துவமாய் கொடுத்தல் தேவனைப் பிரதிபலிக்கிறது. "அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். . . . (யோவான் 3:16). அவர் நம்மை வழிநடத்திட, அவருடைய மகிமையான முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.

கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது.
இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26).
நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும்.

நட்சத்திர வீரரின் தாழ்மை
ஒரு போட்டிக்குப் பின், ஒரு கல்லூரி கூடைப்பந்து நட்சத்திர வீரர், காகிதம் மற்றும் உணவுக் குப்பைகளை அகற்றிய துப்புரவாளர்களுக்கு உதவினார். இதை ரசிகர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதை, எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஒருவர் கூறுகையில், [அந்த வீரன்] "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகுந்த தாழ்மையான மனிதர்களில் ஒருவர்" என்றார். எந்த ஒரு கூடைப்பந்து வீரரும் தன் அணியின் வெற்றியை சகவீரர்களுடன் இணைந்து கொண்டாடுவது சகஜம். அதற்கு மாறாக, அவர் இப்படிப்பட்ட கைமாறு கிடைக்காத சேவைக்கு முன்வந்தார்.
தாழ்மையின் விசேஷித்த குணம் இயேசுவில் காணப்பட்டது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:7). இயேசு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் மனமுவந்து இதைச் செய்தார். பூமியில் அவருடைய ஊழியத்தில் போதிப்பது, குணப்படுத்துவது, அனைவரையும் நேசித்து அவர்களை இரட்சிக்க மரித்து உயிரோடு எழுவது ஆகியவை அடங்கும்.
நம்மை மிகவும் அற்பமான வேலையை செய்யும்படி உந்தலாம், இருப்பினும் இந்த தாழ்மை பிறருக்கான நமது அணுகுமுறையில் கலந்து வெளிப்படுமானால், அது இன்னும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும். மெய்யான தாழ்மை என்பது நம் உள்ளார்ந்த சுபாவமாகும். இது நமது செயல்களை மட்டுமல்லாமல், நமது முக்கியத்துவங்களையும் மாற்றும் "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” (வ.3) தூண்டுகிறது.
எழுத்தாளரும், பிரசங்கியாருமான ஆண்ட்ரூ முரே, "தாழ்மை என்பது பரிசுத்தத்தின் மலர்ச்சியும் அழகும்" என்று கூறினார் அவருடைய ஆவியின் வல்லமையால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலித்திட, நம் வாழ்வும் இவ்வழகைப் பிரதிபலிக்கட்டும். (வ.2:5).

கிறிஸ்துவுக்குள் பூரணமாய் சரணடைதல்
1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.
பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.
தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய தோன்றும்.
அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக.

இயேசு நம் ராஜா
உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.
ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.
ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார்.