இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்
ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, சிலர் "போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்" என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.
தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, "நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்" (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே" என்றான் (வ. 29).
போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்
1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் "வந்து எங்களுக்கு உதவுங்கள்!" இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.
"வந்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள "மக்கெதோனியா அழைப்பிலிருந்து" வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10) அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.
எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

நித்திய மரபு
அமெரிக்காவின் பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது, ஸ்ட் பெளவுல் எனப்பட்ட மணல் புயல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்துகையில், கன்சாஸின் ஹியாவதாவில் வசிக்கும் ஜான்மில்பர்ன் டேவிஸ் தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க முடிவு செய்தார். குழந்தைகள் இல்லாத அவர் தானே சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். டேவிஸ், சேவை அல்லது பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, பெரும் செலவில், அவர் தனக்கு ஒரு சிலையும் மற்றும் தனது இறந்த மனைவியின் பதினொரு பெரிய சிலைகளை உள்ளூர் கல்லறையில் நிறுவ ஏற்பாடு செய்தார்.
"கன்சாஸில் என்னை வெறுக்கிறார்கள்" என்று டேவிஸ் பத்திரிகையாளர் எர்னி பைலிடம் கூறினார். மருத்துவமனை, நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற பொது வசதிகளை கட்டுவதற்கு அவர் நிதியளிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் விரும்பினர். ஆனால் அவர் சொன்னது என்னவென்றால், "இது என் பணம், நான் விரும்பியபடி செலவிடுகிறேன்."
சாலொமோன் ராஜா, அவருடைய காலத்தின் பெருஞ்செல்வந்தராக இவ்வாறு எழுதினார், "பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை" என்றும் "பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்" (பிரசங்கி 5:10–11). செல்வத்தின் கெடுக்கும் போக்குகளை சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலும் செல்வத்தின் சோதனையைப் புரிந்துகொண்டு, இயேசுவுக்குக் கீழ்ப்படிய தன் வாழ்க்கையை முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்தார். ரோமானிய சிறைச்சாலையில் மரணதண்டனைக்காகக் காத்திருந்த அவர், ஜெயம்பெற்றவராக, "நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்…. ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத்தேயு 4:6-7) என்று எழுதினார்.
நமக்காக நாம் சிலை வைப்பதும் அல்லது சேர்த்து வைப்பதும் நீடிக்காது. ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்துவுக்காக கொடுப்பதே நீடிக்கும். எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்டுபவர் அவரே.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்
பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். "ஏன் இப்படி செய்தாய்?" என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், "எனக்கு பசித்தது" என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.
ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், "அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்" (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, "புசித்துக் குடித்து" மற்றும் "தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்" (வ. 34).
நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை "நன்மைகளால்" (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். "என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.
நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.
அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், "எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்" (வ.7) எனலாம்.
ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை "விசாலத்திலே" (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.