வகை  |  odb

சிருஷ்டியில் தேவனைக் காணுதல்

கென்னி, கடவுள் நம்பிக்கை இழந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் விட்டுச் சென்ற சபையின் முன் நின்றார். அவர் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார். எப்படி? சிருஷ்டிப்பில் அவர் பார்த்த அழகு மற்றும் வடிவமைப்பு மூலம் தேவன் அவரது உள்ளத்தில் பேசியிருந்தார். இயற்கை உலகில் காணப்பட்ட தேவனின் பொதுவான  வெளிப்பாட்டின் சாட்சியின் மூலம் கென்னி மீண்டும் ஒருமுறை தேவனைக் குறித்துப் பிரமித்தார், மேலும் அவர் இப்போது வேதத்தில் பிரேத்யேகமாக வெளிப்பட்டிருக்கும் தேவ ஞானத்தை ஏற்றுக்கொண்டார். அவரது கதையைப் பகிர்ந்து கொண்ட பிறகு, கென்னி சபையின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரது தந்தை, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, இயேசுவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

யோபு, வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு, யோபுவின் விசுவாசமும் அசைந்தது. அவர் கூறினார், “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.” (யோபு 30:20). தேவன் "பெருங்காற்றிலிருந்து யோபுக்கு” (38:1) பதிலளித்தார், அவர் யோபுவை பாராமல் இல்லையென்றும்  மாறாகத் தேவனின் அற்புதமான, கருக்கலான சிருஷ்டிப்பைக் கருத்தில் கொள்ள யோபுவின் பார்வைதான் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். "பூமியின் அஸ்திவாரம்" மற்றும் "விடியற்காலத்து நட்சத்திரங்கள்" (வ. 4, 7) மற்றும் இடையில் காணப்படும் அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் நீர் (வவ. 8-41), என்று அனைத்தும் யோபு நம்பக்கூடிய ஒருவரைச் சுட்டிக்காட்டியது, ஆச்சரியமான அன்பும் வல்லமையும் கொண்ட தேவனே அவர். யோபு பதிலாக, "என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது" (42:5) என்றார்.

சந்தேகங்கள் கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை அச்சுறுத்தும் போது, ​​தேவனின் சிருஷ்டியின் மகத்துவத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். நாம் பார்ப்பதற்கு மனமிருந்தால், அவர் அதில் தன்னை வெளிப்படுத்துகிறார்.

 

பெத்லகேமென்னும் சிற்றூர்

பிலிப்ஸ் ப்ரூக்ஸ், பெத்லகேமுக்குச் சென்ற பிறகு, பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலான, "ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லஹேம்" என்பதின் வரிகளை எழுதினார். அமெரிக்காவில் உள்ள ஒரு சபையின் போதகரான ப்ரூக்ஸ், அவருடைய அனுபவத்தால் மிகவும் நெகிழ்ந்து, தனது ஞாயிறு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எனக்கு நினைவிருக்கிறது.. கிறிஸ்துமஸுக்கு முந்தின இரவு, பெத்லகேமின் பழைய தேவாலயத்தில், இயேசு பிறந்த இடத்திற்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது, மணிக்குமணி ​​​​சபை முழுவதும் தேவனைத் துதிக்கும் அற்புதமான பாடல்களால் ஒலித்துக்கொண்டிருந்தபோது, ​​மீண்டும் மீண்டுமாக இரட்சகர்  பிறப்பின் 'அற்புதமான இரவை' பற்றி ஒருவருக்கொருவர் சொன்னதை, எனக்கு நன்கு தெரிந்த குரல்களைப் போல என்னால் கேட்க முடிந்தது"

1868 ஆம் ஆண்டில், ப்ரூக்ஸ் தனது சிந்தனைகளை ஒரு கவிதையாக வடித்தார், அவருடைய சபையின் இசைக்குழு அமைப்பாளர் அதற்கு இசை அமைத்தார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகும் தணியாத தாக்கத்தினூடே அமைதியையும் சமாதானத்தையும் இந்தப் பாடல் அறிவித்தது: “பெத்லகேமென்னும் சிறிய நகரமே, நீ அமைதலாய் உறங்குவதை நாங்கள் காண்கிறோம் . . இத்தனை காலத்தின் நம்பிக்கையும், அச்சங்களும் இன்றிரவு உன்னில் சந்திக்கிறது"

மத்தேயு 2 இல், நமது இரட்சகர் பெத்லகேமில் பிறந்ததைப் பற்றி மத்தேயு எழுதினார். " கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்" (வ. 1) பெத்லகேமுக்கு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது (மீகா 5:2 ஐப் பார்க்கவும்), இயேசுவைக் கண்டு, "மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (மத்தேயு 2: 10)

இன்று, நாம் இயேசுநாதரின் திருவருள் தோற்றத்தைக் கொண்டாடுகையில், நம் இரட்சகரின் பிறப்பு பற்றிய மகிமையான செய்தி நமக்கும் தேவை. பாடல் நமக்கு நினைவூட்டுவது போல, அவர் "நம்முடைய பாவங்களைத் துரத்திவிட்டு உள்ளே பிரவேசிக்கவும்" மற்றும் "நம்மில் பிறக்கவும்" வந்தார். அவரில் நாம் சமாதானம் காண்கிறோம்.

 

தேவன் அனைத்தையும் அறிவார்

தேவன் மெய்யாகவே அனைத்தையும் அறிந்தவர். ஆனால் ஒரு பத்திரிகை கட்டுரையின்படி, நமது அலைபேசி தகவல்கள் மூலம் அரசாங்கம் நம்மைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறது. அலைபேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் "மீத்தரவை" உருவாக்குகிறார்கள், அது "மின்னணு தகவல் தடயங்களை" விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு தனித்தனியான தரவுகளும் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், அதை ஒன்றிணைத்து பகுப்பாய்வு செய்யும் போது, ​​அது "வடிவமைக்கப்பட்டதிலேயே  மிகச் சக்திவாய்ந்த புலனாய்வுக் கருவிகளில் ஒன்றாக" மாறுகிறது. நமது மீத்தரவைக் கண்டுபிடிப்பதன் மூலம், எந்த நேரத்தில் நாம் எங்கிருந்தோம் அல்லது எங்கு இருக்கிறோம் என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கலாம்.

தேசியப் பாதுகாப்பு மையத்தின் இந்த மின்னணு பகுப்பாய்வை விட உன்னதமானதாக, தேவனுடனான உறவில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதனை அவரறிவார் என்று தாவீது கூறினார். சங்கீதம் 139 இல், நம்முள் இருப்பவற்றை ஆராய்ந்து அறிந்திருக்கிற (வ.1) தேவனிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறார். சங்கீதக்காரன், "தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்" (வ.23) என்று எழுதினார். அவர் நம்மைப் பற்றிய அனைத்தையும் அறிந்தும் (வ.2-6), எங்கும் நிறைந்தும் இருக்கிறார் (வ.7-12), மேலும் நம் “உள்ளிந்திரியங்களை” (வ.13-16) படைத்தும், அறிந்தும் உள்ளார். அவருடைய ஆலோசனைகள் நமது மனுஷீகமான புரிதலை விட உயர்ந்தவை (வ.17-18), நாம் நம் சத்துருக்களை எதிர்கொள்ளுகையிலும் அவர் நம்முடன் இருக்கிறார் (வ.19-22).

தேவனை அனைத்தையும் அறிந்தவராக, எப்போதும் இருப்பவராக, சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால்; நாம் எங்கு இருந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதனால் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர் சரியாக அறிவார். ஆனால் அவருடைய வழிகளில் நடக்க நமக்கு உதவும் ஒரு அன்பான தகப்பன் அவர். இன்று வாழ்க்கை பாதையில் அவரைப் பின்தொடர்வோம்.

 

தேவனுக்கு திருப்பி கொடுத்தல்

ஒரு வருடம், எங்கள் சபையின் தலைவர்கள் எங்கள் வழக்கமான வாராந்திர காணிக்கைகளுக்கு மேலாக, ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தைக் கட்டுவதற்குச் சபையாரிடம் கேட்டனர். இது எங்கள் கூடுகையில் உள்ள குடும்பங்களுக்கு ஊழியம் செய்யப் பயன்படும். ஊனத்துடன் வாழ்வதால் உண்டாகும் மருத்துவச் செலவுகளை ஜெபத்துடன் பரிசீலித்த பிறகு, “நாம் இதைச் செய்யக் கூடுமா?” என்று என் கணவரைக் கேட்டேன். அவர் தலையசைத்தார். அவர், "நாம் கொடுப்பதெல்லாம் ஏற்கனவே தேவனுக்குரியவையே, அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவார்" என்றார். தேவன் செய்தார்! பத்தாண்டிற்குப் பிறகு, எங்கள் சபை குடும்பங்கள் இன்றும் அவ்விடத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளனர்.

1 நாளாகமம் 29 இல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசும்   ஆலயத்தைக் கட்டப்போகிறவருமான தனது மகன் சாலமோனை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தாவீது ராஜா காட்டினார் (வ.1-5). எல்லோரும் அதைப் பின்பற்றி, "மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்" மற்றும் " சந்தோஷப்பட்டார்கள்" (வ.6, 9). தாவீது தேவனைப் புகழ்ந்து, "வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்" என்று அறிவித்தார் (வ.11). அவர்: "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது." (வ.6) என்று ஜெபித்தார்.

தேவன் நமக்குச் செய்த, அளித்த அனைத்தையும், குறிப்பாக இயேசுவுடனான தனிப்பட்ட உறவென்னும் பரிசை நாம் கருதும்போது, ​​​​சகல நன்மைகளையும் அருளுபவருக்கு நமது ஆராதனையைச் செலுத்தி, தேவனுக்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் நமது நன்றியையும் அன்பையும் காட்டலாம்!

 

அறியாதவைகளை குறித்த பயம்

புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை 3 மணிக்கு, பயந்து விழித்தேன். வரப்போகும் ஆண்டு என்னைப் பயத்தால் மூழ்கடித்தது. குடும்பத்தில் உண்டான வியாதி, என்னை நீண்ட காலமாகச் சோர்வடையச் செய்திருந்தது, இப்போதோ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள் என்னைப் பயமுறுத்தியது. இன்னும் மோசமான விஷயங்கள் நடக்குமோவென்று நான் திகைத்தேன்.

அரங்கேறின மோசமான சம்பவங்கள் உண்டாக்கிய பயத்தை இயேசுவின் சீஷர்கள் புரிந்துகொண்டனர். அவர் மரிப்பதற்கு முந்தைய நாளே அவர்களின் எஜமானர் அவர்களை ஆயத்தப்படுத்தி உறுதியளித்திருந்தாலும், அவர்கள் இன்னமும் பயந்ததிருந்தனர். அவர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தப்பி ஓடினர் (மத்தேயு 26:56); பேதுரு அவரை மறுதலித்தார் (யோவான் 18:15-17, 25-27), அவர்கள் ஒளிந்துகொண்டனர் (20:19). இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்படுகையிலும், அவர் உபத்திரவப்பட்டபோதும் ஏற்பட்ட கிளர்ச்சியினால் உண்டான பயத்தனிமித்தம், அவர்கள் "திடன்கொள்ளுங்கள்" என்ற அவரது கட்டளைக்கும், "நான் உலகத்தை ஜெயித்தேன்" (16:33) என்ற அவரது வாக்குத்தத்தத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.

ஆனால் கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும், வாழ்வின் மீதும் மரணத்தின் மீதுமான அவருடைய அதிகாரத்தையும் வல்லமையையும் நிரூபித்தது. அவருக்கே இறுதி வெற்றி. நம்முடைய உலகத்தின் பாவ நிலைமை துன்பத்தைத் தவிர்க்க முடியாததாகச் செய்திருந்தாலும், ஞானமும் அன்பும் நிறைந்த நமது தேவனின் அதிகாரத்திற்கு அனைத்தும் கீழ்ப்பட்டவை என்ற சத்தியத்தில் நாம் இளைப்பாறலாம். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு உண்டு (16:32-33), அவருடைய சீடர்களோடுமிருந்தது, அதனால் நம்பிக்கையுடன் உலகிற்கு நற்செய்தியைப் பகிர்ந்தனர். தேவன் அனைத்தையும் ஆள்கிறார் என்ற வாக்குத்தத்தம், இந்தப் புத்தாண்டில் அவரை நம்புவதற்கும், எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாதபோதும் தைரியமாக இருப்பதற்கும், நம் உள்ளங்களைத் திடப்படுத்தட்டும்.