ஒரு வருடம், எங்கள் சபையின் தலைவர்கள் எங்கள் வழக்கமான வாராந்திர காணிக்கைகளுக்கு மேலாக, ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தைக் கட்டுவதற்குச் சபையாரிடம் கேட்டனர். இது எங்கள் கூடுகையில் உள்ள குடும்பங்களுக்கு ஊழியம் செய்யப் பயன்படும். ஊனத்துடன் வாழ்வதால் உண்டாகும் மருத்துவச் செலவுகளை ஜெபத்துடன் பரிசீலித்த பிறகு, “நாம் இதைச் செய்யக் கூடுமா?” என்று என் கணவரைக் கேட்டேன். அவர் தலையசைத்தார். அவர், “நாம் கொடுப்பதெல்லாம் ஏற்கனவே தேவனுக்குரியவையே, அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவார்” என்றார். தேவன் செய்தார்! பத்தாண்டிற்குப் பிறகு, எங்கள் சபை குடும்பங்கள் இன்றும் அவ்விடத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளனர்.
1 நாளாகமம் 29 இல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசும் ஆலயத்தைக் கட்டப்போகிறவருமான தனது மகன் சாலமோனை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தாவீது ராஜா காட்டினார் (வ.1-5). எல்லோரும் அதைப் பின்பற்றி, “மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்” மற்றும் ” சந்தோஷப்பட்டார்கள்” (வ.6, 9). தாவீது தேவனைப் புகழ்ந்து, “வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்” என்று அறிவித்தார் (வ.11). அவர்: “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.” (வ.6) என்று ஜெபித்தார்.
தேவன் நமக்குச் செய்த, அளித்த அனைத்தையும், குறிப்பாக இயேசுவுடனான தனிப்பட்ட உறவென்னும் பரிசை நாம் கருதும்போது, சகல நன்மைகளையும் அருளுபவருக்கு நமது ஆராதனையைச் செலுத்தி, தேவனுக்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் நமது நன்றியையும் அன்பையும் காட்டலாம்!
அனைத்தும் தேவனுடையவை என்பதை ஏற்றுக்கொள்வது, கொடுப்பதைக் குறித்த உங்கள் கண்ணோட்டத்தை எப்படி மாற்றுகிறது? கொடுப்பதன் மூலம் உங்கள் நன்றியை வெளிப்படுத்துவது எவ்வாறு உங்களை மாற்றும்?
அன்பு தேவனே, நீர் தாராளமாகவும் உன்மையாகவும் கொடுப்பதற்காக உமக்கு நன்றி.