நமக்கு ஒரு ராஜா இருக்கிறார்
ஒரு காரியம் எனக்குச் சாதகமாக போகாத போது நான் காயப்படுத்தும் வார்த்தைகளால் என் கணவனைத் தாக்கினேன். வேத வார்த்தைகள் மூலம் என் பாவமான அணுகுமுறையை என் கணவன் சுட்டிக் காட்டிய போது, பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தை நிராகரித்தேன். என்னை ஒட்டிக்கொண்ட இந்த பெருமையை நான் விடமுடியாமல் வைத்திருப்பது, தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும், அல்லது என் திருமணத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்கும் உகந்ததா? இல்லவே இல்லை. அனால், நான் தேவனிடமும் என் கணவனிடமும் மன்னிப்பு கேட்பதற்கு முன்பாக நிறைய காயங்களை ஏற்படுத்தி விட்டேன். புத்தியுள்ள அலோசனைகளைத் தள்ளி, என்வாழ்வில், என்னைத் தவிர நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என வாழ்ந்ததின் விளைவு இது.
ஒரு காலத்தில் இஸ்ரவேலர் எதையும் எதிர்க்கின்ற அணுகுமுறையை கையாண்டனர். மோசே மரித்தபின் யோசுவா இஸ்ரவேலரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினான். அவனுடைய தலைமைத்துவத்தில் இஸ்ரவேலர் தேவனைச் சேவித்தார்கள் (நியா. 2:7). ஆனால், யோசுவாவும் அவன் சந்ததியாரும் மரித்தபின், இஸ்ரவேலர் தேவனையும் அவர் அவர்களுக்குச் செய்த யாவற்றையும் மறந்தனர் (வச. 10). அவர்கள் தேவனைச் சார்ந்து நின்ற தலைவர்களைத் தள்ளி, பாவத்தை தழுவிக் கொண்டனர் (வச. 11-15).
பின்னர் தேவன் ராஜாக்களைப் போல செயல்படும் நியாயாதிபதிகளை எழுப்பினார் (வச. 16-18). அப்பொழுது நிலைமை சற்று முன்னேறியது. ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது, இஸ்ரவேலர் அந்நிய தேவர்களைப் பின்பற்றினார்கள். தாங்கள் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்hதவர்கள் என வாழ்ந்தபோது அழிவைத் தேடிக் கொண்டார்கள் (வச. 19-22). இப்படிப்பட்ட நிலைமைக்குள் நாம் வரலாகாது, நாம் நம்மை தேவனுடைய ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும் நித்திய அரசாட்சிக்கும் ஒப்புக் கொடுத்து இயேசுவைப் பின்பற்றி வாழுவோம். ஏனெனில், அவரே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிற நியாயதிபதி ராஜாதி ராஜா
விலையேறப் பெற்ற ஆராதனை
எனது உடல் நலக் குறைவினால் நான் நடக்க முடியாமல் தடைபட்டபோது, நான் எனது எழுத்தின் மூலம் தேவனை ஆராதிக்கவும், அவருக்குப் பணிசெய்யவும் முற்பட்டேன். ஆனால், எனக்கு அறிமுகமான ஒருவர் எனது எழுத்துக்களில் ஒரு பலனையும் தான் காணவில்லை என்று கூறியபோது நான் மிகவும் மனச் சோர்வுற்றேன். நான் தேவனுக்குக் கொடுக்கும் ஒரு சிறிய காணிக்கையின் முக்கியத்துவத்தை நான் உணராதிருந்தேன்.
நாம் தேவனை ஆராதிப்பதின் நோக்கத்தையும் நாம் அவருக்குக் கொடுக்கும் நம் ஊழியத்தின் மதிப்பையும் அவரே நீர்ணயிக்க முடியும் என்பதனை, ஜெபத்தின் மூலமாயும், வேத வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதன் மூலமாயும் என் கணவன், உறவினர்கள், நண்பர்களின் ஊக்கத்தாலும், உறுதியாகத் தெரிந்து கொண்டேன். மற்ற மக்களின் கருத்துகள் இதனைத் தீர்மானிக்க முடியாது. எனக்குத் திறமைகளைத் தந்த என் தேவனிடம் தொடர்ந்து என் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுமாறும், அவர் தருகின்ற வரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்புகளையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
இயேசுவுக்குக் கொடுப்பதில் நாம் வைத்துள்ள தரத்திற்கு அவர் முற்றிலும் மாறுபட்டவர் (மாற். 14:41-44). ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியினுள் ஐசுரியவான்கள் அதிகமாகப் போட்டார்கள். ஒரு ஏழை விதவை சில காசுகளைப் போட்டாள். “அதன் மதிப்;பு மிகக்குறைவு” (வச. 42). அவளுடைய பங்களிப்பு சுற்றியிருந்தவர்களுக்கு முக்கியமற்றதாக இருந்த போதும் (வச. 44), காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரையும் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள் என தேவன் வெளிப்படுத்துகின்றார் (வச. 43).
ஒருவேளை இந்த விதவையின் கதையில் பொருளாதார கொடையைக் குறித்துக் சொல்லியிருந்தாலும் நாம் அவருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு செயலும் அவரை ஆராதிக்கும் ஒரு வெளிப்பாட்டையும், அன்பின் கீழ்படிதலையும் குறிக்கும். அவர் நமக்கு ஏற்கனவே தந்து விட்டிருக்கிற தாலந்துகளை மனப்பூர்வமாக, தாராளமனதுடன், தியாகத்தோடு அவருக்குக் கொடுப்பதே அந்த விதவையைப் போன்று நாமும் தேவனை கனப்படுத்துவதாகும். நமது சிறந்த நேரத்தை, தாலந்துகளை அல்லது காணிக்கையை இருதயத்தின் அன்பினால் தேவனுக்குக் கொடுக்கும் போது விலையேறப் பெற்ற காணிக்கைகளால் நாம் அவரைப் போற்றுகின்றோம்.
நிரம்பி வழியும் கனி!
இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.
நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.
எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).
நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.
குற்ற உணர்வு போய்விட்டது!
சிறுமியாயிருக்கையில், என் வீட்டின் அருகிலிருந்த பரிசுப் பொருட்கள் கடைக்கு எனது தோழியை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளது செய்கை என்னை அதிர்ச்சிகுள்ளாக்கிற்று. வண்ணமிக்க சிறு பென்சில்களை அள்ளி எனது பையிள் திணித்த அவள் அவைகளுக்காக பணம் செலுத்தாமல் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு வாரமாக குற்ற உணர்வு என்னை வாதித்தது. எனது அம்மாவிடம் சென்று கண்ணீரோடு என் தவறை அவரிடம் அறிக்கையிட்டேன்.
எனது தோழி தவறு செய்தபோது அதை எதிர்க்காதற்காக மனம் வருந்திய நான், திருடப்பட்ட பொருட்களை அந்தக் கடையில் கொடுத்து, இனி ஒருபோதும் நான் திருடமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். தன் கடைக்கு இனிமேல் நான் வரக்கூடாதென கடை உரிமையாளர் கூறினார். ஆனால் எனது அம்மா என்னை மன்னித்துவிட்டபடியாலும், நடந்ததைச் சரிசெய்ய உரியதை நான் செய்துவிட்டேன் என அவர் உறுதிசெய்ததாலும் அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
இராஜாவாகிய தாவீதும் அறிக்கையிடுவதால் கிடைக்கும் மன்னிப்பை அதிகம் சார்ந்திருந்தான் (சங். 32:1-2) அவனது எலும்புகள் உலர்ந்துபோகுமட்டும் (வச. 3). அவன் பத்சேபாள் மற்றும் உரியாவுக்கெதிரான தனது பாவத்தை மறைத்துவைத்தான் (2 சாமு. 11-12). ஆனால் தாவீது தனது தவறுகளை மறைக்க மறுத்தபோது தேவன் அவனது குற்ற உணர்வை எடுத்துப் போட்டார் (வச. 5). தேவன் அவனை இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப் பாடல்களால் அவனைச் சூழ்ந்து கொண்டார் (வச. 7). “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்பதினால் தாவீது அகமகிழ்ந்தான் (வச. 10).
பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடும்போது, நமது பாவங்களுக்கான விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது ஜனங்களின் மாறுத்தரங்களை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் சமாதானத்தையும் நாம் பெற்று மகிழ தேவன் நமக்கு வல்லமை அளிக்கிறார். நமது பாவம் என்றென்றும் மறைந்துபோனதை தேவன் உறுதிப்படுத்துகிறார்.
தேவ அன்பைப் பிரதிபலித்தல்!
எனது தாயார் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவருக்கு பராமரிப்பு அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. மிகவும் கடினமான நாட்களில்கூட எனது தாயார் படுக்கையிலிருந்து இறங்கி நடக்குமுன் வேதாகமத்தை வாசித்து, பிறருக்காக ஜெபித்தார்கள் அவரது நற்செயல்களும் பிறரை உற்சாகப்படுத்தி அவர்களுக்காக ஜெபிப்பதும் இடைவிடாமல் நடந்து கொண்டேயிருந்தது. பரலோக வீட்டிற்கு தேவன் அவர்களை அழைத்துக் கொண்ட நாள் வரைக்கும் தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் தேவனுடைய அன்பை அவர் பகிர்ந்துகொண்டார்.
தேவனோடு 40 நாட்கள் இரவும் பகலும் இருந்தபின் மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கினான் (யாத். 34:28). ஆண்டவருடன் கொண்ட மிக நெருக்கமான உறவு அவனது தோற்றத்தை மிகவும் மாற்றியதை அவன் உணரவில்லை (வச. 29). ஆனால் மோசே ஆண்டவருடன் பேசியதை இஸ்ரவேலர்கள் கண்டு கொண்டனர் (வச. 30-32). தொடர்ந்து ஆண்டவரைச் சந்தித்த மோசே தன்னைச் சுற்றி வாழ்ந்த மக்களை வழிநடத்த முடிந்தது (வச. 33-35).
தேவனோடு நாம் கொள்ளும் உறவு காலப்போக்கில் நம்மை எப்படி மாற்றுகிறதென்பதை நாம் அறியாமலிருக்கலாம். மோசேயின் முகப் பிரகாசத்தைப்போல நமது தோற்றம் வெளிப்படையாய் மாறாமலிருக்கலாம். ஆகிலும், தேவனுடன் நாம் நேரம் செலவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய் நமது வாழ்வை அவரிடம் அர்ப்பணிக்கும்போது தேவ அன்பை நாம் பிரதிபலிக்கக் கூடும். அவரது பிரசன்னம் நம்மிலும் நம் மூலமாகவும் வெளிப்படும்போது மற்றவர்களை நம்மண்டை அவர் நெருக்கமாக அழைத்துக் கொள்வார்.
பிரிவுகளை அழித்தல்
எனக்கும் என் கணவனுக்கும் இடையே அன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் எனது மனதில் புயல்போல் மோதி அடித்துக் கொண்டிருந்தபொழுது, அன்றையத்தினமே நான் முடிக்க வேண்டிய ஒரு எழுத்து வேலையைக் குறித்த மன உளைச்சலும் என்னை ஆட்கொண்டது. எனது கணினியில் விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த சுட்டும் குறியையே (Cursor) நான் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். எனது விரல்நுனிகள் கணினியில் விரல் கட்டைகளின் மீது (Keyboard) இருந்தன. அவள் தனக்குள்ளாக “கர்த்தாவே எனது கணவர் செய்ததும் தவறுதானே” என்று கூறிக்கொண்டாள்.
எனது கணினியின் திரை இருண்ட பொழுது, அதிலிருந்த எனது கடுகடுப்பான முகத்தின் பிம்பத்தைப் பார்த்தேன். நான் ஒத்துக்கொள்ளாத எனது தவறு, நான் செய்யவிருந்த வேலையை செய்யவிடாமல் தடுத்து மேலும் என் கணவனோடும், என் தேவனோடும் இருந்த உறவையும் பாதித்தது.
நான் எனது பெருமையை விட்டுவிட்டு, எனது கைபேசியை வேகமாக எடுத்து என் கணவனிடம் மன்னிப்புக் கேட்டேன். எனது கணவனும் அவருடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்ட பொழுது, எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்புரவினால் என் மனதில் உண்டான சமாதானத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். உடனே என் தேவனுக்கு நன்றி கூறி நான் எழுதி முடிக்க வேண்டிய கட்டுரையையும் விரைவில் எழுதி முடித்துவிட்டேன்.
இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பாவத்தினால், மன வேதனையையும், தேவனோடு மறுபடியும் ஒப்புரவாகுதலினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார்கள். எரிகோவிற்கு எதிராக அவர்கள் தொடுத்த யுத்தத்தின் முடிவில் எரிகோவிலிருந்த எந்த ஒரு சாபத்தீடான பொருளையும் எடுத்து ஐசுவரியத்தை சேர்க்கக் கூடாது என்று யோசுவா எச்சரித்தான். ஆனால், ஆகான் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்து தனது கூடாரத்தின் கீழ் ஒளித்து வைத்தான் (7:1). அவனது பாவம் வெளிப்படுத்தப்பட்டு அவன் தண்டிக்கப்பட்ட பின்புதான் (4-12) இஸ்ரவேல் மக்கள் தேவனோடு ஒப்புரவாகி, அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர்களால் அனுபவிக்க முடிந்தது.
ஆகானைப்போல் நாமும் “நமது கூடாரத்திற்குள் பாவத்தை ஒளித்து வைப்பதினால்” நம்முடைய இருதயம் தேவனை விட்டு விலகுவதோடு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் எப்பொழுதும் முக்கியமாகக் கருதுவதில்லை. இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை இட்டு, நாம் பாவிகள் என்பதை ஒத்துக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக்காக மன்றாடுவது, தேவனோடும், பிறரோடும் உண்மையான உறவைக் கட்டுவதற்கான சிறந்த ஆரம்பமாக உள்ளது. நமது அன்பான சிருஷ்டிகரும், நம்மை அன்றாடம் போஷிக்கிறவருமான தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதின்மூலமாக அவருக்கு ஊழியம் செய்வதோடு, அவரது பிரசன்னத்தையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்.
தேவ வார்த்தையை கிரகித்து
எங்கள் மகன் சேவியர் பாலகனாய் இருந்தபோது, ‘மான்டெரி பே’ நீர்வாழ் உயிரினக் காட்சிசாலைக்கு குடும்பமாக சென்றிருந்தோம். நாங்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், உட் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய சிற்பத்தை என் மகனுக்கு காட்டி, “அதோ பார், முதுகில் கூன் உள்ள திமிங்கலம்,” எனக் கூறினேன்.
அப்பொழுது அவன் தன் கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “பிரமாண்டமானது,” எனக் கூறினான்.
உடனே என் கணவர் என்னை திரும்பிப் பார்த்து, “இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?” எனக் கேட்டார். எனக்கும் என்ன சொல்வதேன்று தெரியாமல், “ஒருவேளை நாம் அவ் வார்த்தையை பேசும்போது அவன் கவனித்திருக்கலாம்,” என பதிலளித்தேன். நாங்கள் திட்டமிட்டு என் மகனுக்கு கற்றுத்தராதபோதும், எங்கள் மகன் பல வார்த்தைகளை கிரகித்துள்ளான் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இளைய தலைமுறையினர் வேதவசனத்தை அறிந்துகொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும், திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்களுக்கு அதை கற்றுத் தருமாறு தன் ஜனத்தை தேவன் ஊக்குவிப்பதை உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் காணலாம். இஸ்ரவேலர் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடையும்போது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பயபக்தியோடு தேவனை தொழுதுகொள்ள கற்றுக்கொள்வார்கள். மேலும் முழுமையாய் அவரை நேசிக்கவும், கீழ்ப்படியவும், அவரை அறிகிற அறிவினால் கிட்டிச்சேரும் பொழுது, அதற்குறிய நற்பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள் (வச. 2-5).
திட்டமிட்டு நம்முடைய இருதயத்தையும் மனதையும் வேத வசனத்தினால் நிரப்பும்பொழுது (வச:6), நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியிலும் தேவனுடைய அன்பையும் சத்தியத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர நன்கு ஆயத்தமாயிருப்போம் (வச. 7). நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மாதிரியாக இருந்து, இன்றும் நமக்கு பொருந்தக்கூடிய தேவனுடைய நிலையான சத்தியத்தை, அதன் அதிகாரத்தை, அவர்கள் கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் கனப்படுத்தவும், அவர்களை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துவோமாக (வச 8-9).
நம்முடைய இருதயத்தின் நிறைவால், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களிலிருந்து இயல்பாக பொங்கி வழியும்பொழுது, நாம் ஒரு விசுவாச பாரம்பரியத்தை, தலைமுறை தலைமுறைதோறும் கடந்து செல்லும்படியாக விட்டுச் செல்லலாம் (4:9).
ஆறுதலின் பாத்திரமாய்
என் தோழி, தான் வீட்டிலேயே செய்த சில மண்பாண்டங்களை எனக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தாள். அப்பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்திருக்க கண்டேன். அதில் ஒரு பாத்திரம், பல பெரிய துண்டுகளாகவும், சில்லுகளாகவும், தூசியும் மண்ணும் கலந்த உருண்டைகளாகவும் நொறுங்கிப்போயிருந்தது.
ஆனால், உடைந்துபோன அப்பாத்திரத்தை என் கணவர் பசையிட்டு ஒட்டிய பிறகு, அழகான பாத்திரமாக மாறிற்று. பல விரிசல்களை கொண்ட அவ்வழகிய பாத்திரத்தை, அனைவரும் காணும்படி நான் அலமாரியிலே வைத்தேன். ஒட்டப்பட்ட அப்பாத்திரத்தில் உள்ள விரிசல்களைப் போலவே, பல கடினமான சமயங்களை நான் கடந்து வந்த போது ஏற்பட்ட வடுக்கள், எனக்கும் உண்டு. நான் அச்சூழ்நிலைகளைக் கடந்து வரவும், இன்றும் பலத்தோடு நிற்கவும், தேவனே உதவி செய்தார். துன்ப வேளையில் தேவன் என் வாழ்விலும் என் மூலம் மற்றவர்களுக்கும் செய்த நன்மைகளை நான் பிறரிடம் பகிர்வதின் மூலம், துன்பப்படுகிற அநேகருக்கு நான் ஆறுதலளிக்கும் பாத்திரமாக இருக்க முடியும் என்பதை அப்பாத்திரம் எனக்கு நினைவூட்டியது.
நம்முடைய தேவன் இரக்கமும் ஆறுதலும் அளிப்பவராய் இருப்பதால், “இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” என அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை போற்றி துதிக்கிறார் (2 கொரி. 1:3). நாம் தேவனைப்போல மாறுவதற்கு, நம்முடைய சோதனைகளையும் பாடுகளையும் ஒரு கருவியாக தேவன் பயன் படுத்துகிறார். நம்முடைய சோதனை வேளையில், தேவன் நமக்களித்த ஆறுதலைக்கொண்டு, உபத்திரவத்தில் இருக்கும் அநேகருக்கு நாம் ஆறுதலளிக்கமுடியும் (வச. 4).
கிறிஸ்துவின் பாடுகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால், துயரத்தின் மத்தியிலும் நாம் ஆறுதலடைந்து, தேவன்மேல் நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பாடுகளை சகிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய அனுபவங்களைக் கொண்டு பாடுகள் மத்தியில் இருக்கும் அநேகருக்கு ஆறுதல் அளிப்பார் (வச 5-7). தேவன் நம்முடைய பாடுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கென்று மீட்டுக்கொண்டுள்ளார் என்பதை பவுல் அறிந்ததினால் ஆறுதலடைந்தது போல நாமும் ஆறுதலடைவோமாக. தேவன் நமக்களிக்கும் ஆறுதலின் பாத்திரத்தை துயரப்படுகிறவர்களோடு பகிர்ந்து, அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிப்போமாக.
எதுவும் பயனற்றதல்ல!
சரிரத்தில் மிகுந்த வலிவேதனைகளோடு, இயல்பாக இயங்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்துபோன செயல்பாட்டினால் மனமுடைந்து மிகவும் சோர்ந்துபோன வேளையில், “என் சரீரம் செயலற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தோன்றுகிறது”, என என் தோழியிடம் மனந்திறந்து கூறினேன்.
அப்பொழுது அவள் தன் கரத்தை என் கரம் மீது வைத்து, “நான் புன்னகையோடு உனக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுதும், உன் பேச்சை நான் கவனித்து கேட்கும் பொழுதும், உனக்குள் எவ்வித தாக்கத்தையும் நான் ஏற்படுத்துவதில்லை எனக் கூறுவாயா?”, எனக் கேட்டாள்.
அதைக் கேட்டு நான் சற்று தடுமாறி, என் சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து, “கண்டிப்பாக இல்லை”, என பதிலளித்தேன்.
அதற்கு என் தோழி, “இதைத்தானே நீ எனக்கும் மற்றவர்களுக்கும் செய்கிறாய். அப்படியிருக்க ஏன் உனக்கு தானே பொய்களைக் கூறிக்கொள்கிறாய்”, என பாசத்தோடு முறைத்தாள்.
தேவனுக்கென்று நாம் செய்வது எதுவும் பயனற்றது கிடையாது என்பதை தேவன் எனக்கு நினைவூட்டியதற்காக அவளுக்கு நன்றி செலுத்தினேன்.
நம்முடைய சரீரங்கள் இப்பொழுது பலவீனமுள்ளதாயிருந்தாலும், “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்,” என பவுல் உறுதியளிக்கிறார் (1 கொரி. 15:43). மேலும், கிறிஸ்தவுக்குள் மரித்தோர் மீண்டுமாய் உயிர்த்தெழுவார்கள் என தேவன் வாக்குபண்ணியுள்ளதால், அவர் நம்முடைய ஒவ்வொரு
காணிக்கையையும், எல்லா பிரயாசங்களையும் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்துவார் (58).
பலவிதமான நபர்களைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதினால், நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நம் சரீர இயக்கம் குறைந்துபோயிருந்தாலும், சோதனை வேளையிலும் நாம் வெளிப்படுத்தும் விசுவாசம், ஒரு புன்னகை, உற்சாகமூட்டும் வார்த்தை அல்லது ஒரு ஜெபம் யாவும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் செய்யும் எவ்வித பணியும் சாதாரணமானதுமன்று, பயனற்றதுமன்று.