ஒரு விடுமுறையின் போது என் கணவனும், நானும் ஜார்ஜியாவிலுள்ள சட்டஹீச்சி நதியில், தட்டையான படகில் பயணம் செய்ய பதிவு செய்தோம். அந்த பயணத்திற்கும், சூரிய வெளிச்சத்திற்கும் ஏற்ற உடைகளையணிந்து, ஓர் அகலமான தொப்பியையும் வைத்துக்கொண்டேன். விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக, இந்த பயணத்தில் பாறைகளில் செங்குத்தாக விழுகின்ற நீரிலும் பயணம் செய்யவுள்ளோம் எனத் தெரிந்ததும் நான் மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்தேன். ஆனால் நல்ல வேளையாக, இத்தகைய பயணத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு தம்பதியினரோடு நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் என்னுடைய கணவணுக்கு பயணித்தலின் அடிப்படையைக் கற்றுக் கொடுத்ததோடு, எங்களைப் பத்திரமாக கரை சேர்ப்பதாகவும் வாக்களித்தனர். எனக்குத் தரப்பட்ட உயிர்காப்பு உடைக்காகவும் (Life Jacket) நன்றி சொல்லிக் கொண்டேன். நாங்கள் அந்த நதியின் சகதியான கரையை அடையும் வரை நான் பதறிக்கொண்டு அந்தப் படகிலிருந்த பிளாஸ்டிக் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டேன். நான் கரையில் கால் வைத்ததும் என்னுடைய உடையிலிருந்த நீரைப் பிழிந்து வெளியேற்றினேன். என்னுடை கணவனும் எனக்குதவினார். இந்த பிரயாணம் அவர்கள் விளம்பரத்தில் கொடுத்தது போல இல்லாமலிருந்தாலும் நாங்கள் நன்கு மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டோம்.

அந்த பிரயாணக் குறிப்பில், ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றிய அறிவிப்பு விடுபட்டிருந்ததைப் போலில்லாமல், இயேசு தன் சீடர்களுக்கு வரப்பேகிற கடினமான பயணத்தைக் குறித்து வெளிப்படையாக எச்சரித்திருந்தார். இயேசு அவர்களிடம் துன்பப்படுத்தப்படுவீர்கள். சாவுக்கும் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள் எனவும், இயேசு மரிக்கப்போகின்றார், மீண்டும் உயிர்தெழுவார் எனவும் தெரிவித்திருந்தார். அவர் தம்மைக் குறித்து நம்பிக்கைக்குரிய வார்த்தைகளைக் கொடுத்ததோடு, தான் அவர்களை ஒருவரும் மேற்கொள்ள முடியாத வெற்றிக்கும், அழியாத நம்பிக்கைக்கும் நேராக வழிநடத்துவதாகவும் உறுதியளித்தார் (யோவா. 16:33).

நாம் இயேசுவைப் பின்பற்றும் போது வாழ்வு எளிதாக இருக்குமாயின், அது மிகச் சிறந்ததாயிருக்குமே. ஆனால், அவர் சீடர்களிடம், அவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். துன்பங்கள் ஒருபோதும் தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை வரையறுக்கவோ, குறைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது ஏனெனில், இயேசுவின் உயிர்தெழுதல் நம்மை அழியாத வெற்றிக்கு நேராக வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.