என்னுடைய மகன் சேவியர் சிறுவனாக இருந்த போது, என்னுடைய கணவன் தன்னுடைய வேலையின் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. சேவியரின் தந்தை அவனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்ட போதும், சில கடினமான இரவுகளில் அவனை ஆறுதல் செய்ய அந்த தொலைபேசி அழைப்பு மட்டும் போதுமானதாக இல்லை. அவன் தன்னுடைய தந்தையைத் தேடிய போதெல்லாம் அவனைச் சமாதனாப்படுத்த, அவன் தூங்கச் செல்லுமுன், எங்களுடைய புகைப்பட ஆல்பத்தை அவனிடம் கொடுப்பேன். நாங்கள் இணைந்து செலவிட்ட நேரங்களை அவனுக்கு நினைவுபடுத்தி, அவனிடம், “இது உனக்கு நினைவிருக்கிறதா? எனக் கேட்பேன்.

அந்த நினைவுகள் என்னுடைய மகனின் ஏக்கத்தை நீக்கி, “ எனக்கு ஒரு நல்ல தந்தையிருக்கிறார்” என அவனைச் சொல்லும்படி வைத்தது.

சேவியர் தன் தந்தையைப் பார்க்க முடியாத போதெல்லாம், அவருடைய அன்பை நினைவுகூர விரும்புகிறான் என நான் புரிந்து கொண்டேன். நான் கடினமான சூழல்களில் இருக்கும் போதும் தனிமையில் தவிக்கும் போதெல்லாம் நானும் என்னுடைய பரலோகத் தந்தை என்னை நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஏங்குகிறேன்.

தாவீது தன்னுடைய பகைவரிடமிருந்து மறைந்து வனாந்தரத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தபோது தேவனை நோக்கி தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் (சங். 63:1) தேவனோடு தனக்குள்ள தனிப்பட்ட உறவினை எண்ணி, அவருடைய எல்லையில்லா வல்லமையையும், தன்னை திருப்திப்படுத்தும் அவருடைய அன்பையும் எண்ணி அவரைப் போற்றுகின்றார் (வச. 2-5). அவருடைய மிகவும் கஷ்டமான இரவுகளிலும் தேவனுடைய அன்பின் அரவணைப்பைச் சார்ந்து கொண்டு, அவரில் மகிழ்ச்சியாயிருந்தார் (வச. 6-8).

நம்முடைய இருண்ட நேரங்களில் தேவன் நமக்குத் துணையாயில்லையோ என ஏங்கும் வேளைகளிலும், நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம், அவரோடுள்ள நம்முடைய தனிப்பட்ட அநுபவங்களின் மூலமாகவும், வேதத்தில் நாம் காணும் அவருடைய கிரியைகள் மூலமாகவும் நம்முடைய நல்ல தந்தை நம்மீது வெவ்வேறு வழிகளில் செலுத்துகின்ற அளவற்றை அன்பினை உறுதிப்படுத்திக்கொள்வோம்.