நல்ல முடிவு
என்னுடைய கணவரும் மகனும் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி தங்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதின் கடைசி காட்சிகளை பார்க்கும்போதே, அடுத்த படத்தைத் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரியமான எட்டு படங்களை கண்டுபிடித்தனர். பொறுமையிழந்த நான், ஏன், ஏதாவது ஒரு படத்தை தேர்வுசெய்து அதை முதலிலிருந்து பார்க்கலாமல்லவா என்றேன். அதற்கு என் கணவர், “நல்ல முடிவுக் காட்சி யாருக்கு தான் பிடிக்காது?” என்று புன்முறுவலோடு சொன்னார்.
நானும் எனக்கு பிடித்தமான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நல்ல முடிவை எதிர்பார்த்து தான் காத்திருப்பேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் வேதாகமத்திலும், எனக்கு பரீட்சையமான, பிடித்த கதைகள், எளிதில் புரியும் வேதப்பகுதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜீவனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையின் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்று உறுதியளிக்கிறார்.
“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார் (வெளி. 22:13). மேலும் அவர், அவருடைய ஜனங்கள் நித்திய வாழ்;க்கையை சுதந்தரிப்பர் என்றும் (வச. 14), “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை” (வச. 18-19) கூட்டவும் குறைக்கவும் கூடாது என்றும் கூறுகிறார்.
வேதத்திலுள்ள எல்லா காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது முடியாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தான் சொன்னபடி நிச்சயமாய் திரும்பி வருவார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் பாவத்தை அழித்து, கோணலானவைகளை நேராக்கி, எல்லாவற்றையும் புதிதாக்கி, நம்முடைய அன்புள்ள ராஜாவாய் என்றும் அரசாளுகிறார். இது தற்போது நம்மை புதிய ஆரம்பத்திற்குள் நடத்தும் அழகான முடிவு!
அனைவருக்கும் சொந்தம்
இலுதெரா என்னும் கரிபியன் தீவில் மனிதர்களால் கட்டப்பட்ட ஒரு மேம்பாலம் இருக்கிறது. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதின் ஒருபுறம் அட்லாண்டிக் கடலின் நீலநிற தண்ணீரும் மறுபுறம் கரிபியக் கடலின் தண்ணீரும் வேறொரு நிறத்தில் வித்தியாசமாய் தெரியும். கற்களினால் இயற்கையாய் அமைந்திருந்த அந்த வளைவு புயல் காற்றினால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. தற்போது பார்வையாளர்களுக்காய் அந்த பாலத்தின் மீது அமைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல் பாதை, “பூமியின் குறுகலான இடம்” என்று அழைக்கப்படுகிறது.
நித்திய ஜீவனுக்கு போகிற பாதை குறுகலானது என்றும் “அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் வேதம் சொல்லுகிறது (மத். 7:14). வாசல் குறுகலானது என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே பரிசுத்த ஆவியின் துணையோடு, ஒரு பாலமாய் செயல்பட்டு பாவமுள்ள மனுஷீகத்தை தேவனிடத்தில் ஒப்புரவாக்க முடியும் (யோவான் 10:7-9; 16:13). எல்லா தேசங்களிலிருந்தும், மக்கள் கூட்டத்திலிருந்தும், மற்றும் சமுதாயம் எங்கிலுமிருந்தும் விசுவாசிகள் பரலோகத்தில் பிரவேசித்து ராஜாதி ராஜாவின் முன் பணிந்து, அவருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் ஆராதனை செய்வார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது (வெளி. 5:9). பிரிந்திருக்கிற அனைத்து தேவ ஜனங்களின் ஒற்றுமையை இந்த சித்திரம் பிரதிபலிக்கிறது.
நம்முடைய பாவத்தினால் தேவனிடத்திலிருந்து நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்துவோடுள்ள தனிப்பட்ட உறவின் மூலம், இந்த குறுகலான ஒப்புரவாகுதலின் பாதை வழியாய் பரலோகத்தின் நித்தியத்திற்குள் பிரவேசிக்க, தேவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வரவேற்கப்படுகிறான். இயேசுவின் சிலுவை தியாகம், உயித்தெழுதல் மற்றும் பரமேறி செல்லுதல் இன்றும் என்றும் எல்லோருக்கும் பகிர செண்டிய நற்செய்தி சத்தியங்கள் ஆகும்.
கிறிஸ்துவில் விலையேறப்பெற்ற வாழ்வு
தொலைந்த என் நிச்சயதார்த்த மோதிரத்தை, கண்களில் நீர்வழிய கண்மூடித்தனமாய் தேடினேன். மெத்தைகளை புரட்டிப்பார்த்து, இங்கும் அங்கும் எல்லா மூலைகளிலும் தேடிய என்னுடைய கணவர் ஆலன், “பரவாயில்லை, நாம் வேறொன்றை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.
“நன்றி,” என்று சொன்னேன். “ஆனால் அதின் விலைமதிப்பைத் தாண்டி, அதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பு இருக்கிறது.” அதை மற்றொன்றைக்கொண்டு ஈடுசெய்யமுடியாது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்தேன். “தேவனே, தயவுசெய்து அதை கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும்.”
ஒருசில நாட்களுக்குபின், அந்த விலைமதிப்பற்ற மோதிரத்தை என்னுடைய ஸ்வெட்டர் ஒன்றின் பாக்கெட்டில் கண்டெடுத்தேன். “நன்றி இயேசுவே” என்று மகிழ்ச்சியடைந்தேன். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்த தருணத்தில், வேதாகமத்தில் வெள்ளி நாணயத்தை தொலைத்த ஸ்திரீயைக் குறித்த உவமை எனக்கு நினைவுக்கு வந்தது (லூக்கா 15:8-10). தொலைந்த வெள்ளி நாணயத்தைத் தேடிய ஸ்திரீயைப் போல, தொலைந்த மோதிரத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. எங்களுடைய விலைமதிப்புள்ள ஒன்றைத் தேடும் எங்களின் முயற்சி தவறல்ல. இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தி, தான் சிருஷ்டித்த ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துகிறார். ஒரு பாவியின் மனந்திரும்புதலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகிறது.
தொலைந்துபோன பொருளைத் தேடுவதுபோன்று, மற்றவர்களுக்காக வாஞ்சையோடு ஜெபிக்கிற நபராய் மாறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒருவர் மனந்திரும்பி, தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புவிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும்போது, தொலைந்துபோன நம்மை விடாமல் தேடிக் கண்டுபிடித்ததின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்கமுடியும். நம்மை தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு நாம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்.
விட்டுச்சென்ற கருணை
மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.
அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.
நம்பிக்கையோடு காத்திருத்தல்
விடுமுறை நாட்களை கழிக்கச் சென்ற இடத்தில் எங்களுக்கு உதவிபுரிய ரொஜிலியோ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, தேவன் அவருக்கு கலி என்னும் பேர்கொண்ட இரக்ககுணமுள்ள, விசுவாசத்தில் உறுதியான மனைவியை கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபின்பு, மனநலிவு நோயினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய சகோதரியின் குழந்தையையும் சேர்த்து பராமரிக்கவேண்டிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு பின்பு, வயது முதிர்ந்த ரொஜிலியோவின் மாமியாரையும் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியமும் நேரிட்டது.
தேவன் பராமரிக்கும்படி அவர்களுடைய பொறுப்பில் கொடுத்த உறவுகளை அவருடைய மனைவியின் பொறுப்பில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, ரொஜிலியோ அதிகமான நேரம் வேலை பார்க்க முடிந்தது. கணவன் மனைவியாய் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பும், உறவுகளை பராமரிக்கும் அவர்களின் கரிசணை குணமும் என்னை ஈர்த்ததைக் குறித்து அவரிடம் தெரிவித்தபோது, “அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேவை செய்வதும் என்னுடைய மகிழ்ச்சி” என்று ரொஜிலியோ புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
ரொஜிலியோவின் வாழ்க்கை, பரந்த மனப்பான்மையோடு வாழ்தலின் மேன்மையையும் சுயநலமில்லாமல் உதவுவதின் மூலம் தேவனை சார்ந்திருத்தலையும் உறுதியளிக்கிறது. பவுல் அப்போஸ்தலர், “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்… நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்; பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12:10-13) என்று தேவஜனத்தை ஊக்கப்படுத்துகிறார்.
நம்மால் அல்லது நாம் நேசிக்கிறவர்களால் மேற்கொள்ள முடியாத பிரச்சனைகளுக்குள் இந்த வாழ்க்கை நம்மை நடத்தலாம். ஆனால் தேவனுக்காய் காத்திருக்கும் இந்த நாட்களில் தேவன் நமக்கு கொடுத்துள்ள அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, நாம் தேவனுடைய தெய்வீக அன்போடு இணைந்துகொள்கிறோம்.
ரகசியமாகக் கொடுப்பவர்
உடல் ஊனமுற்ற வீரரான கிறிஸ்டோபரைப் பொறுத்தவரை, அன்றாட நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாகிவிட்டது. அவைகளை செய்து முடிக்க அதிக நேரம் பிடித்தது. அது அவரது வலியை அதிகரித்தது. ஆனாலும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பொருட்டு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு வாரமும் அவர் தனது தோட்டத்தில் கடினமாக உழைப்பதை வழிப்போக்கர்கள் பார்ப்பார்கள்.
ஒரு நாள் கிறிஸ்டோபருக்கு ஒரு கடிதமும் அவரது தோட்ட வேலைகளில் அவருக்கு உதவ ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் அறியப்படாத நன்கொடையாளரிடமிருந்து வந்திருந்தது. தேவைப்படுபவருக்கு ரகசியமாய் உதவுவதின் பாக்கியத்தை பெறுவதின் மூலம் கொடுத்த அந்த நபர் திருப்தியடைந்தார்.
இயேசு நாம் கொடுப்பது அனைத்துமே இரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நாம் கொடுக்கும்போது நம்முடைய நோக்கங்களை சரிபார்க்க அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 6:1). அவர் மேலும் சொன்னார்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” (வச.2). நாம் மனமுவந்து கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பாராட்டுக்களை பெறுவதற்கோ அல்லது சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கோ மக்கள் முன் நல்ல செயல்களை செய்வதை தவிர்க்க அவர்களை ஊக்குவிக்கிறார் (வச. 3).
நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து கிடைத்தது என்பதை நாம் உணரும்போது, நம்முடைய முதுகில் யாரும் தட்டி கொடுக்கவோ அல்லது மற்றவர்களின் புகழைப் பெறவோ நாம் விரும்பமாட்டோம். ரகசியமாய் உதவிசெய்வதில் திருப்தியுள்ளவர்களாய் இருக்கமுடியும். நமக்கு நன்மைகளை பெருகச்செய்யும் எல்லாம் அறிந்த தேவன், தாராளமாய் கொடுப்பவர்கள் மீது பிரியமாயுள்ளார். அவருடைய ஒப்புதலின் வெகுமதியை எதுவும் தடுக்க முடியாது.
புதுப்பிக்கப்பட்ட பார்வை
எனது இடது கண்ணில் வலி மிகுந்த ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, எனது மருத்துவர் பார்வை பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். நம்பிக்கையுடன், நான் எனது வலது கண்ணை மூடி, விளக்கப் படத்தின் ஒவ்வொரு வரியையும் எளிதாகப் படித்தேன். என் இடது கண்ணை மூடிக்கொண்டு படிக்க முயன்றபோது, நான் திணறினேன். நான் ஒருவிதத்தில் குருடனாக இருந்துள்ளேன் என்பதை எப்படி அறியாமல் போனேன்?
புதிய கண்ணாடியை அணிந்து, என் பார்வையை சரிசெய்யும்போது, தினசரி சோதனைகள் எப்படி என்னை கிட்டப்பார்வையுள்ளவனாய் மாற்றுகிறது என்பதை உணர்ந்தேன். என் கண்ணில்படுகிற என்னுடைய வேதனைகளையே நான் பார்க்க நேரிட்டது. என்னுடைய நித்தியமான தேவனைப்பற்றியும் அவருடைய உண்மைத்துவத்தையும் நான் பார்ப்பதில் நான் குருடனாகவே செயல்பட்டேன். அத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில், நம்பிக்கை என்பது பார்வைக்கு தெளிவாய் புலப்படவில்லை.
வேதனை, நிச்சயமற்ற தன்மை மற்றும் இழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதினால் தேவனின் நம்பகத்தன்மையை அங்கீகரிக்கத் தவறிய மற்றொரு பெண்ணின் கதையை 1 சாமுவேல் 1ம் அதிகாரம் சொல்கிறது. அன்னாளுக்கு பிள்ளையில்லாததினாலும் அவளுடைய கணவனின் மற்றொரு மனைவியாகிய பெனின்னாளின் மனமடிவாக்கும் பேச்சினாலும் சொல்லமுடியாத ஆழ்ந்த துயரத்தை சகித்தாள். அன்னாளின் கணவர் அவளை தேற்றினாலும், அவளால் திருப்தியாயிருக்கமுடியவில்லை. ஒரு நாள், அவள் மனகிலேசத்தினால் ஜெபித்தாள். ஆசாரியன் ஏலி அவளிடம் கேள்வி எழுப்பியபோது, அவள் தன்னுடைய நிலைமையை விளக்குகிறாள். அவள் கிளம்பும்போது, “ஏலி, சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்” (1 சாமுவேல் 1:17). அன்னாளின் நிலைமை உடனடியாக மாறவில்லை என்றாலும், அவள் நம்பிக்கையுடன் வெளியேறினாள் (வச.18).
1சாமுவேல் 2:1-2-ல் அன்னாளின் ஜெபம் அவளுடைய திசைமாற்றப்பட்ட கவனத்தைக் காட்டுகிறது. அவளுடைய பிரச்சனை மாறுவதற்கு முன்னமே, அன்னாளின் புதுப்பிக்கப்பட்ட பார்வை அவளுடைய பார்வையையும் அவளுடைய அணுகுமுறையையும் மாற்றியது. அவளுடைய கன்மலையும் நித்திய நம்பிக்கையுமான தேவனுடைய பிரசன்னத்தில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
ஒன்றாக வேலை செய்தல்
ஜோ ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தார், பெரும்பாலும் இடைவெளி எடுக்காமல். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றல் தேவைப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்த போது தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செலவிட குறைவான நேரமே இருந்தது. நாள்பட்ட மன அழுத்தததிற்கு பின்னர் ஜோவை மருத்துவமனையில் சேர்ர்க்க நேர்ந்தது, ஒரு நண்பர் அவருக்கு உதவ ஒரு குழுவை ஏற்பாடு செய்ய முன்வந்தார். தனது தொண்டு நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடுவதற்கு அவர் பயந்தாலும், ஜோ தனது தற்போதைய வேகத்தைத் தொடர முடியாது என்று அறிந்திருந்தார். அவர் தனது நண்பரையும் ... தேவனையும் நம்புவதற்கு ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நபர்களின் குழுவிற்கு பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார். தேவன் அனுப்பிய உதவியை அவர் மறுத்திருந்தால், தொண்டு நிறுவனமும் அவரது குடும்பத்தினரும் ஒருபோதும் இது போன்றதோரு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதை ஒரு வருடத்திற்கு பின்னர் ஜோ ஒப்புக்கொண்டார்.
அன்பான சமூகத்தின் ஆதரவு இல்லாமல் வளர்ச்சி அடையும்படி தேவன் மக்களை வடிவமைக்கவில்லை. யாத்திராகமம் 18-ல் மோசே இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தினார். அவர் ஒரு ஆசிரியராக, ஆலோசகராக, ஒரு நீதிபதியாக தேவனுடைய மக்களுக்கு சேவை செய்ய முயன்றார். அவரது மாமனார் வந்து சந்தித்தபோது அவர் மோசேக்கு ஆலோசனைவழங்கினார்: “நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள். இது உமக்கு மிகவும் பாரமான காரியம். நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலேகூடாது” என்று எத்திரோ கூறினார்.(யாத்திராகமம் 18:18). விசுவாசமுள்ளவர்களுடன் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள மோசேயை அவர் ஊக்குவித்தார். மோசே உதவியை ஏற்றுக்கொண்டார், முழு சமூகமும் பயனடைந்தது.
நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, தேவன் தம்முடைய எல்லா மக்களிடமும் அவர்கள் மூலமாகவும் செயல்படுகிறார் என்று நாம் நம்பும்போது , உண்மையான இளைபாறுதலை காணலாம்.
அலைகள் மேல் சவாரி
என் கணவர் அடிவானத்தின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாறை மிகுந்த கடற்கரையில் உலாவும்போது, மற்றுமொரு மருத்துவ பின்னடைவால் கவலைக்கு உள்ளாகி நான் ஒரு பெரிய பாறையில் அமர்ந்தேன். நான் வீடு திரும்பும்போது என் பிரச்சினைகள் எனக்காகக் காத்திருக்கும் என்றாலும், அந்த தருணத்தில் எனக்கு அமைதி தேவைப்பட்டது. உள்வரும் அலைகள் கருப்பு, துண்டிக்கப்பட்ட பாறைகளுக்கு எதிராக மோதுவதை நான் உறுத்துப் பார்த்தேன். அலையின் வளைவுகளில், ஒரு இருண்ட நிழல் என் கண்களை கொள்ளை கொண்டது. எனது கேமராவில் உள்ள பெரிதாக்கி அருகில் காணும் (ஜூம்) முறையை பயன்படுத்தி, அந்த வடிவத்தை அலைகளின் மேல் அமைதியாக சவாரி செய்யும் கடல் ஆமை என அடையாளம் கண்டு கொண்டேன். அதன் தட்டையான கை போன்ற உறுப்புகள் அகலமாக விரிக்கப்பட்டும் இயக்கம் இல்லாமல் அசைவற்றும் இருந்தன. முகத்தை உப்பிடப்பட்ட மென்காற்றுக்குள் திருப்பி, நான் சிரித்தேன்.
“வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்” (சங்கீதம் 89:5). எங்கள் ஒப்பிடமுடியாத தேவன் ஆட்சி செய்கிறார். “தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது (தேவன்) அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்” (வச. 9). “பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்” (வசனம் 11). அவர் அனைத்தையும் உருவாக்கினார், அனைத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறார், அனைத்தையும் நிர்வகிக்கிறார், அனைத்தையும் அவருடைய மகிமைக்காகவும், நம் இன்பத்திற்காகவும் உருவாக்கியிருக்கிறார்.
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திவாரத்தில் நின்று - மாறாத நம்முடைய தந்தையின் அன்பு - நம்மால் “அவரின் முகத்தின் வெளிச்சத்தில் நடக்க” முடியும் (வச. 15). தேவன் பெரிதும் வல்லமையுள்ளவராகவும், நம்முடன் நடந்துகொள்வதில் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். நாம் “உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து” இருக்க முடியும் (வச. 16). நாம் என்ன தடைகளை எதிர்கொண்டாலும் அல்லது எத்தனை பின்னடைவுகளைச் தாங்கிக் கொண்டிருக்க நேர்ந்தாலும், அலைகள் உயர்ந்து விழும்போது தேவன் நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.