சின்னப் பொய்களும் பூனைக்குட்டிகளும்
புதிதாய் பிறந்த பூனைக்குட்டிகளிடமிருந்து விரைந்தோடிய நான்கு வயது எலியாசை (Elias) அம்மா கவனித்தார். பூனைக்குட்டிகளைத் தொடக்கூடாது என்று ஏற்கனவே அவனுக்கு சொல்லி இருந்தார். ஆனால் எலியாஸ் ஓடியதைப் பார்த்து, “நீ அந்த பூனைக்குட்டிகளைத் தொட்டாயா?” என்று கேட்டார்.
“இல்லை!” என நல்லபிள்ளை போல் கூறினான். ஆகவே வேறு விதமாக ஒரு கேள்வி கேட்டார்கள். “அவை மென்மையாக இருந்தனவா?” அதற்கு அவன் “ஆமாம்” என கூறியது மட்டுமின்றி “அந்த கருப்பு பூனைக்குட்டி ‘மியாவ்’ என கத்தியது,” என்றும் கூறினான்.
குழந்தைகள் ஏமாற்றும் பொழுது நாம் சிரிக்கிறோம். ஆனால் எலியாசின் கீழ்ப்படியாமை மனித குலத்தின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்கு வயது சிறுவனுக்கு ஒருவரும் பொய் சொல்ல கற்றுத்தர வேண்டியதில்லை. “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்,” என தாவீது தன்னுடைய புகழ்பெற்ற பாவ அறிக்கையில் எழுதியுள்ளான் (சங். 51:5).
அப்போஸ்தலனாகிய பவுல், “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணமும் எல்லாருக்கும் வந்தது” எனக் கூறியுள்ளார் (ரோம. 5:12). வருத்தமளிக்கும் இச்செய்தி இராஜாக்களுக்கும், நான்கு வயது சிறுவர்களுக்கும், உங்களுக்கும், எனக்கும் சமமாய் பொருந்தும். ஆனால் சோர்ந்து போக வேண்டாம். மிகுந்த நம்பிக்கையளிக்கும் செய்தியும் உண்டு. மனுஷனுடைய பாவ சுபாவம் வெளிப்படும்படியாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. “மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று,” என பவுல் எழுதியுள்ளார் (ரோம. 5:20).
நாம் தவறு செய்தவுடன் நம் மீது பாய்ந்து வந்து நம்மைத் தண்டிக்க தேவன் காத்திருக்கவில்லை. நமக்கு கிருபை பாராட்டி, நம்மை மன்னித்து, சீர்ப்படுத்துவதே அவருடைய நோக்கம். நாம் செய்ய வேண்டியதென்னவெனில் பாவத்தை அசட்டைபண்ணாமலும், அதை விரும்பாமலும் விசுவாசத்தோடு அவரிடத்தில் மனந்திரும்பக்கடவோம்.
சந்தேகத்தின் இறப்பு
“சந்தேகத் தோமா” என்று நம்மால் அழைக்கப்படும் தோமாவுக்கு (யோவா. 20:24-29) இந்த அடைமொழி உண்மையில் நியாயமானதல்ல. சொல்லப்போனால் கொல்லப்பட்ட நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்ற செய்தியை நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம்? உண்மையில் அவரை “தைரிய தோமா” என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால், இயேசு அனைத்தையும் அறிந்தவராய் தாமாகவே மரணத்தை நோக்கிச் சென்றபொழுது நடந்த சம்பவங்களில் தோமா மிகச்சிறந்த தைரியத்தை வெளிப்படுத்தினார்.
லாசரு மரித்த பொழுது, “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” (யோவா. 11:7) என்று இயேசு கூறியதற்கு சீஷர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?” என்றார்கள் (வச. 8). ஆனால் தோமாவோ, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்,” என்றான் (வச. 16).
தோமாவுடைய செய்கைகளைக் காட்டிலும் அவனது நோக்கங்கள் உன்னதமானதாய் இருந்தன. ஏனென்றால், இயேசுவைக் கைது செய்த பொழுது, மற்ற சீஷர்களோடு தோமாவும் இயேசுவை விட்டு விலகி ஓடிப்போனான் (மத். 26:56). பேதுருவும், யோவானும் மாத்திரம் இயேசுவை அழைத்துச்சென்ற பிரதான ஆசாரியரின் மண்டபம் வரை சென்றனர். ஆனால் யோவான் மாத்திரமே இயேசுவை சிலுவை வரை பின்பற்றிச் சென்றான்.
லாசருவின் உயிர்தெழுதலைக் கண்டும் கூட (யோவா. 11:38-44) தோமாவால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் மரணத்தை வென்று உயிர்தெழுந்துவிட்டார் என்று விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் சந்தேகப்பட்ட அற்ப மனுஷனாகிய தோமா உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டவுடன், “என் ஆண்டவரே! என் தேவனே!” என வியப்புடன் உரத்த சத்தமிட்டான் (யோவா. 20:28). அதற்கு இயேசு அளித்த பதில் சந்தேகித்தவனுக்கு நம்பிக்கையையும், நமக்கு அளவற்ற ஆறுதலையும் அளிக்கிறது. “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார் (வச. 29).
என்ன விசேஷம்?
நான்கு வயதுள்ள ராஜூவின் மகிழ்ச்சியான முகம், அவன் அணிந்திருந்த தலைக் கவசம் கொண்ட டீ-ஷர்ட்டின் உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. அத்தலைக் கவசம் ஒரு முதலை தன் கூர்மையான பற்களுடைய வாயைப் பிளந்து, அவன் தலையை விழுங்குவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது! அவனை அவ்வுடையில் பார்த்ததும், அவன் தாயின் உள்ளம் சோர்ந்து போயிற்று. ஏனெனில் நீண்ட நாட்களுக்குப்பின் தாங்கள் சந்திக்கப் போகும் ஒரு குடும்பத்தின் முன் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த விரும்பினாள்.
தன் மகனிடம், “ராஜூ இந்த உடை இவ்விசேஷத்திற்கு ஏற்றதல்ல,” எனக் கூறினாள்.
ஆனால் ராஜூவோ, “அப்படி ஒன்றும் இல்லை. இது பொருத்தமான உடைதான்” என்றான்.
“அப்படியா, இந்த உடைக்குப் பொருத்தமான அந்த விசேஷம் என்ன?” என அவள் கேட்டதற்கு, “உங்களுக்கு தெரியுமே, அவ்விசேஷம் நம் வாழ்க்கைதான்” என்றான். இப்படி ஒரு பதிலுக்கு கட்டாயம் அவன் அந்த டீ-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
“மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை” (பிர. 3:12) என்கிற வசனத்தின் சத்தியத்தை அம்மகிழ்ச்சிகரமான சிறுவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். பிரசங்கியின் புத்தகம்
மனுஷக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகமே அன்றி, தேவனுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகம் அன்று. இதை அறியாமல் அப்புத்தகத்தை தவறாய் புரிந்துகொண்ட அநேகர் சோர்ந்து போவதும் உண்டு. அப்புத்தகத்தை எழுதிய சாலொமோன் ராஜா, “வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?”
(வச. 9) என்கிறார். ஆனாலும் அப்புத்தகம் முழுவதிலும் நம்பிக்கையின் ஒளி வீசக் காணலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (வச. 13) என்றும் சாலொமோன் எழுதியுள்ளார்.
நாம் மகிழ்ந்து களிகூரும்படி நமக்கு நன்மையானவற்றை அருளுகிற தேவனையே நாம் சேவிக்கிறோம். அவர் செய்வதெல்லாம் “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பான கட்டளைகளை கைக்கொண்டால், ஒரு நோக்கமுள்ள அர்த்தமுள்ள மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ கிருபையளிப்பார்.
மாம்சத்துக்குரியவன்
ஆங்கிலேய எழுத்தாளர் ஈவ்லின் வாக் (Evelyn Waugh) பிரயோகிக்கும் வார்த்தைகள் அவருடைய குணத்தில் உள்ள குறைகளை உறுதி செய்வது போலிருக்கும். இறுதியாக அந்த நாவலாசிரியர் கிறிஸ்தவனாக மாறினாலும் போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெண் அவரைப் பார்த்து, “நீங்கள் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு எப்படி உங்களால் இப்படி நடந்துகொள்ள முடிகிறது?” என கேட்டாள். அதற்கு அவர், “ஒரு வேளை நீங்கள் கூறும் அளவிற்கு மோசமானவனாகவே இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், கிறிஸ்தவம் இல்லையெனில், நான் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்,” என பதிலளித்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்த உள்ளார்ந்த போராட்டத்தை வாக் போராடி கொண்டிருந்தார். பவுல், “நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை,” எனக் கூறுகிறார் (ரோம. 7:18). மேலும், “நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ...மாம்சத்துக்குரியவனாய் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (வச. 14). அதையே இன்னும் விவரித்து, “உள்ளான மனுஷனுக்கேற்றப்படி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் அதற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை காண்கிறேன். இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என கேட்கிறார் (வச. 22-24). பின்பு வெற்றிக்களிப்புடன், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,” (வச. 25) என்று தேவன் அளிக்கும் விடுதலையை அறிவிக்கிறார்.
நம்முடைய பாவத்தை உணர்ந்து, நமக்கு இரட்சகர் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, விசுவாசத்தோடு கிறிஸ்துவண்டை வரும்பொழுது, நாம் அக்கணமே புதிய சிருஷ்டி ஆகிறோம். ஆனால் நம்முடைய மனம் புதிதாவது ஒரு வாழ்நாள் பயணம். அதை சீஷனாகிய யோவான் கண்டுணர்ந்து, “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்,” எனக் கூறினார் (1 யோவா. 3:2).
பெருகிய அன்பு
காரெனின் (Karen) சபையிலே உள்ள ஒரு பெண்மணிக்கு அமியோடிரேபிக் லேட்டரல் ஸெலேராசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்னும் வியாதி கண்டறியப்பட்ட பொழுது, எல்லாம் மோசமாக காட்சியளித்தது. இந்த கொடூரமான வியாதி நரம்பு மண்டலத்தையும், சதைகளையும் பாதித்து, இறுதியாக பக்கவாதத்தை விளைவிக்கும். வீட்டிலேயே வைத்து மருத்துவ வசதி அளிக்கும் அளவிற்கு அவர்கள் மருத்துவக் காப்பீடு செய்யவில்லை. ஆனால் அவளுடைய கணவருக்கோ அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர மனமில்லை.
ஒரு நர்ஸாக காரென் தன்னுடைய திறமையை கொண்டு உதவும்படியாக அப்பெண்ணின் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால், தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அப்பெண்ணிற்கும் உதவி செய்வதின் சிரமத்தை விரைவாகவே உணர்ந்தாள். ஆகவே, சபையிலுள்ள மற்றவர்களுக்கு அப்பெண்ணை கவனித்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை கற்றுத்தர ஆரம்பித்தாள். அவ்வியாதியின் ஏழாண்டு காலக்கட்டத்தில், காரென், 31 தன்னார்வ உதவியாளர்களை பயிற்றுவித்தாள். அவர்கள் அக்குடும்பத்தை அன்பாலும், ஜெபத்தாலும், நடைமுறை உதவிகளினாலும் சூழ்ந்து கொண்டனர்.
“தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும்” (1 யோவா. 4:21) என்று சீஷனாகிய யோவான் கூறுகிறார். அப்படிப் பட்டதான அன்பை வெளிக்காட்டும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக காரென் விளங்குகிறாள். தன்னுடைய திறமையோடும், இரக்கத்தோடும் கஷ்டப்படுகிற தன்னுடைய தோழிக்காக உதவும்படியாக குடும்பமாகிய சபையை ஒன்றுதிரட்ட நோக்கம் கொண்டாள். தேவையோடு இருந்த ஒருவர் மேலிருந்த அவளுடைய அன்பு, மற்றவர்களும் உதவியில் பங்குகொண்ட பொழுது பெருகியது.
என் வாழ்வின் கதை
நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் உள்ள மாட்டுத்தொழுவத்தில், பிறந்த பச்சிளம் குழந்தையை யாரோ விட்டுவிட்டுச் சென்றனர். நிச்சயமாக கண்டெடுக்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணியில் சுற்றி அக்குழந்தையை ஓர் இளம் பெண் மனம் நொந்து விட்டுவிட்டிருக்க வேண்டும். அவளை நாம் எளிதில் நியாயம் தீர்க்கலாம், ஆனால் அக்குழந்தைக்கு வாழ ஓர் வாய்ப்பளிக்கப் பட்டிருப்பதை எண்ணி நன்றி கூறலாம்.
என் வாழ்வில் இச்சம்பவம் வெறும் கதையல்ல. நான் ஒரு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை. என் பிறப்பை பற்றிய சம்பவங்கள் எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு போதும் கைவிடப்பட்டவனாக உணரவேயில்லை. எனக்கு இரண்டு தாயார். இருவரும் நான் நன்கு வாழவேண்டும் என்று எண்ணினர். ஒரு தாய் எனக்கு உயிர் கொடுத்தார்கள்; மற்றவர் அவரது வாழ்க்கையை எனக்குள் விதைத்தார்கள்.
யாத்திராகமத்தில் இப்படிப்பட்ட ஓர் அன்பான தாயாரை நாம் பார்க்கலாம். இஸ்ரவேலரில் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி பார்வோன் ராஜா கட்டளையிட்டான் (1:22). அதனால் மோசேயுடைய தாயார் அவளால் இயன்ற வரை அக்குழந்தையை ஒளித்து வைத்தாள். ஆனால் மூன்று மாதம் ஆன பின்பு குழந்தையை ஒர் தண்ணீர் புகாத கூடையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட்டாள். இளவரசியால் அக்குழந்தை மீட்டெடுக்கப்பட்டு, பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பின்னர் யூத மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படியான தேவ திட்டம் நன்றாகவே நிறைவேறியது.
செய்வதறியாது தவிக்கும் ஓர் இளம் தாய் தன் குழந்தை வாழும்படியாக முயற்சித்தால், தேவன் அங்கிருந்து செயல் படத் தொடங்குவார். ஏனெனில் எண்ணி முடியாத மிகவும் ஆச்சரியப்படதக்க வழிகளில் செயல்படுவது தேவனுடைய இயல்பு.
பணம்
என்னுடைய உத்தியோகத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு சேவையாகவே கருதினேன். அப்பொழுது நல்ல சம்பள உயர்வுடன் கூடிய ஒரு வேலையை வேறு ஒரு நிறுவணம் எனக்கு வழங்கியது. அந்த வேலையின் மூலம் நிச்சயமாக என்னுடைய குடும்பம் பொருளாதார ரீதியிலே பயன் பெறலாம். ஆனால் ஒரு பிரச்சனை. நான் வேறு வேலை தேடவில்லை, ஏனெனில் நான் செய்து கொண்டிருந்த வேலையை நான் மிகவும் நேசித்தேன். அதையும் தாண்டி அது என் அழைப்பாக உருவாகிக் கொண்டிருந்தது.
ஆனால் பணம்...
எழுபது வயதை கடந்த என் தகப்பனாரை தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை விவரித்தேன். பக்கவாதத்தினாலும், பல வருடங்களின் மன அழுத்தத்தினாலும் கூர்மையாக இருந்த மூளையின் வேகம் இன்று குறைந்திருந்தாலும், சட்டென்று தெளிவான ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. அதாவது, “பணத்தை பற்றி எண்ணாதே. அப்பொழுது நீ என்ன முடிவெடுப்பாய்?”
ஒரு நொடியிலே, என் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வேலையை விடுவதற்கு பணம் மட்டுமே காரணமாக இருந்திருக்கும்! நன்றி அப்பா!
மலைப் பிரசங்கத்தின் பெரும்பாலான பகுதியை இயேசு பணத்தையும், அதன் மேல் உள்ள நம்முடைய வாஞ்சையை குறித்தும் பிரசங்கித்தார். ஐஸ்வரியத்தை திரட்டுவதைக் குறித்து ஜெபிக்க கற்றுக்கொடுக்காமல், “வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11), என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். பூமியிலே பொக்கிஷங்கள் சேர்த்து வைப்பதைக் குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய படைப்பின் மேல் அவர் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதை பறவைகள் மற்றும் பூக்கள் மூலம் விவரித்தார் (வச. 19-31). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (வச. 33) என்று இயேசு கூறினார்.
பணம் முக்கியமானது தான். ஆனால் நம்முடைய முடிவுகளைப் பணம் தீர்மானம் செய்யக் கூடாது. கடினமான நேரங்களும், பெரிய தீர்மானங்களும் நம்முடைய விசுவாசத்திலே நாம் வளருவதற்கான சந்தர்பங்களாகும். நம்முடைய பரம பிதா நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.
வானம் பார்ப்பவன்
வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் உள்ள பிரச்சனைகளால் கவலையுற்ற மாட் (Matt), தன்னை ஆசுவாசப்படுத்தக் கொஞ்ச நேரம் வெளியில் சென்று நடந்து விட்டு வர முடிவு செய்தான். மாலை நேரத் தென்றல் வா என்றது. எல்லையற்ற வானம், நீல நிறத்திலிருந்து கருவண்ணமாக மாறிய பொழுது, அடர்ந்த பணிமூட்டம் நிலத்தின் மேல் படர்ந்தது. மின்ன ஆரம்பித்த நட்சத்திரங்கள் கிழக்கிலே உதிக்கும் சந்திரனின் வருகையை அறிவித்துக்கொண்டிருந்தன. அந்தத் தருணத்தை ஆவிக்குரிய ஒரு தருணமாக மாட் உணர்ந்தான். “அவர் அங்கு இருக்கிறார். தேவன் அங்கு இருக்கிறார். மேலும் இக்காரியங்களும் அவரிடம் உள்ளது” என்று எண்ணினான்.
சிலர் இரவிலே வானத்தைப் பார்க்கும்பொழுது, இயற்கையைத் தவிர வேறொன்றையும் காண்பதில்லை. வேறு சிலர் வெகு தூரத்தில் குளிரால் உறைந்துபோன வியாழன் கிரகத்தை (Jupiter) போலவே தேவனையும் பார்க்கின்றனர். ஆனால், “அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர்” மற்றும் “அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசா. 40:22,26). அவர் அவருடைய படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிவார்.
நமக்கு சொந்தமான இந்த தேவன், “இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?” என்று தம்முடைய ஜனத்தைப் பார்த்துக் கேட்கிறார். அவர்களுக்காகப் பரிதவித்த தேவன், “இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?... சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 27-29) என்று தம்மை தேடி வருபவர்கள் பெறும் பயனைக் குறித்து அவர்களுக்கு ஞாபகபடுத்துகிறார்.
நம்முடைய சோதனைகளினால் எளிதில் நாம் தேவனை மறந்துவிடுகிறோம். ஒரு மாலை நேரத்தில் நடப்பதினால் நம்முடைய பிரச்சனைகள் மறைந்து விடாது. ஆனால், தேவன் அவருடைய நன்மையான சித்தத்திற்கு நேராகவே நம்மை வழி நடத்துகிறார் என்கின்ற நிச்சயத்தை பெற்றவர்களாய் நாம் இளைப்பாறலாம். “நான் இங்கு தான் இருக்கிறேன். உன்னை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
உணர்வுகளும் அடையாளங்களும்
எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் தேவனிடம் எப்போதும் அடையாளங்களைக் கேட்கும் பழக்கத்தில் இருந்தான். அது முற்றிலும் தவறல்ல. ஆனால் அவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரி என்பதற்கான அடையாளங்களை ஜெபத்தில் தேடினான். உதாரணமாக, அவன் “தேவனே நான் இந்தக் காரியத்தை செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்த அடையாளத்தைக் காட்டும். அப்பொழுது அது தான் தேவ சித்தம் என்று அறிந்து கொள்வேன்” என்று ஜெபிப்பான்.
இது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியே உணர்ச்சிப்பட்டு ஜெபித்து பதில் பெறும் பழக்கம் இருப்பதினால் அவன் முன்பு தான் நேசித்த பெண்ணுடன் மீன்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அந்த பெண்ணோ இது தேவன் விரும்பும் காரியம் அல்ல என்று திடமாக இருந்துவிட்டாள்.
இயேசுவுடன் வாழ்ந்த மதத் தலைவர்கள்கூட அவரிடம் அற்புத அடையாளங்களை எதிர்பார்த்தனர் (மத். 16:1). நீர் மேசியா என்றால் ஓர் அற்புதத்தினால் அதை நிரூபியும் என்று வழக்காடினர். அவர்கள் தேவனின் வழிக்காட்டுதலை தேடவில்லை; மாறாக, அவருடைய தெய்வீக அதிகாரத்தையே சோதித்தனர். “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்” (வச. 4) என்று இயேசு கூறினார். தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் பொருந்தாது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்து, அவர்கள் கண்முன் இருந்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் அதைவிட பெரிய அடையாளத்தைக் கேட்டதினால் இயேசு அப்படி கடுமையாக பேசினார்.
ஜெபத்தில் அவருடைய வழிகாட்டுதலை நாம் தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (யாக். 1:5). அவருடைய வார்த்தையினாலும் (சங். 119:105), ஆவியானவரின் வழி நடத்துதலினாலும் (யோவா. 14:26) நம்மை வழிநடத்துகிறார். நமக்கு நல்ல போதகர்களையும், ஞானம் நிறைந்த தலைவர்களையும் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவே நமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.
ஆகவே தேவனிடத்தில் தெளிவான பதிலை நாம் தேடுவது நல்லது. ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது போலவே அது இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஜெபத்தில் முக்கியமாக நேர்வது என்னவென்றால், நாம் தேவனுடைய மெய்யான இயல்பை அறிந்து அவருடன் உறவு கொள்வதே.