இளம் ஐசக் வாட்ஸ் (Issac Watts) தன்னுடைய சபையின் பாடல்கள் நிறைவற்றதாக இருப்பதை எண்ணி வருந்தினான். அப்பொழுது அவனுடைய தகப்பன் சிறப்பான பாடல்களை உண்டாக்குமாறு அவனுக்கு அன்பாக ஆணையிட்டார். அப்படியே ஐசக் செய்தான். “என் அருள் நாதா இயேசுவே” (When I survey the wondrous cross) என்னும் அவருடைய பாடல் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அப்பாடல் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அப்பாடலின் ஆராதனை ததும்பும் மூன்றாவது சரணம் கிறிஸ்துவின் சிலுவைக் காட்சிக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது.

கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே!

உலக வரலாற்றின் மிக மோசமான தருணமாகிய சிலுவைக் காட்சியை வாட்ஸ் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அன்று அச்சிலுவையின் அருகே நின்றிருந்தவர்களோடு நாமும் சற்று நேரம் சிலுவையின் அருகே செல்வோமாக. தம்முடைய சரீரத்தில் சொரசொரப்பான பெரிய ஆணிகள் பாய்ந்து, சிலுவையில் அறையப்பட்டிருந்த தேவகுமாரனாகிய இயேசு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சில மணிநேர சித்திரவதைகளுக்குப் பின்பு, அவ்விடமெங்கிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இருள் சூழ்ந்தது. அண்டசராசரங்களின் தேவனாகிய கர்த்தர் இறுதியாக கடும் வேதனை அடைந்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவ்விடமெங்கிலும் நிலநடுக்கத்தின் ஆரவார சத்தம் ஒலித்தது. அதேவேளை பட்டணத்திலுள்ள ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கல்லறைகள் திறந்து, அதிலிருந்த மரித்தோர் உயிர்பெற்று பட்டணத்திலே உலாவினார்கள் (மத். 27:51-53). இச்சம்பவங்களை எல்லாம் கண்ட அதிபதி “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்!” என ஒப்புக்கொண்டான் (வச. 54).