ஆலய நுழைவாயிலில் இரண்டு புகைப்படங்களை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, அவற்றைப் பெருமையுடன் தன் நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். முதலாவது புகைப்படம் அவளது தாய்நாடாகிய புருன்டியில் (Burundi) எடுக்கப்பட்ட அவளுடைய மகளின் படம். இரண்டாவது புகைப்படம் அம்மகளுக்கு பிறந்த அவளது மகனின் புகைப்படம். ஆனால் அப்புகைப்படத்தில் மகள் இல்லை. ஏனெனில், அவனை பிரசவிக்கும் பொழுது அவள் இறந்துவிட்டாள்.

அப்பொழுது அங்கு வந்த அவளுடைய தோழி அப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு உடனே அம்மூதாட்டியின் முகத்தை அன்பாய் தன் கரங்களில் ஏந்தி கண்ணீரோடு, “எனக்குத் தெரியும். எனக்கு தெரியும்,” எனக் கூறினாள்.

அவளுக்குத் தெரியும்தான். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை அவள் அடக்கம் செய்தாள்.

நம்முடைய வலி வேதனைகளை தானும் அனுபவித்தவர்கள் கூறும் ஆறுதல் விசேஷமானது. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இயேசு கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தன் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்,” என்று கூறினார்: ஆனால் அவ்வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், “நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்,” என்னும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினார் (யோவா. 16:20). இன்னும் சில மணி நேரங்களில், இயேசுவின் கைதும், சிலுவை மரணமும் அவருடைய சீஷர்களை நிலைகுலையச் செய்யும். ஆனால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியிருந்த அவர்கள் இயேசுவை உயிரோடு கண்டவுடன் எதிர்பாராத மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேசியாவைக் குறித்து, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசா. 53:4). நம்முடைய இரட்சகர் நம்முடைய
வலி, வேதனைகளை அறிந்தவர் மட்டுமன்று அவைகளை அனுபவித்தவரும் கூட. அவர் எல்லாவற்றையும் அறிவார். அவரே நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். ஒரு நாள் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.