மீண்டும் துடி
2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.
நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம், ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?......தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).
நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.
என்ன வேண்டுமானாலும் செய்
சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.
ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).
ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).
தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.
கத்தி தேவதை
ஐக்கிய இராஜியம்(Uk) எங்கும் கத்தி குற்றங்கள் பெருகின போது, பிரிட்டிஷ் இரும்பு வேலை மையம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. இ ந்த மையம், உள்ளூர் காவல் துறையோடு இணைந்து, இருநூறு வைப்புப் பெட்டிகளை உருவாக்கி, தேசமெங்கும் வைத்து, பொது மன்னிப்பு பிரச்சாரத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடாமல் ஒரு லட்சம் கத்திகளை ஒப்படைத்தனர், அவற்றுள் சிலவற்றில் இன்னமும் இரத்தக் கறை இருந்தது. பின்னர் அவை கலைஞரான ஆல்ஃபி பிராட்லியிடம் கொடுக்கப் பட்டன. அவர் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்து, சிலவற்றில் கத்திக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளம் நபர்களின் பெயர்களைப் பதித்தார், சிலவற்றில், முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த, வருத்தத்தை தெரிவிக்கும் செய்திகளைப் பதித்தார். பின்னர், அனைத்து 100,000 ஆயுதங்களும் பற்ற வைக்கப் பட்டு, கத்தி தேவதை உருவாக்கப் பட்டது, இருபத்தியேழு அடி உயரம் கொண்ட இந்த தேவதை உருவம், மின்னக் கூடிய இறக்கைகளையும் கொண்டிருந்தது.
நான் இந்த தேவதை சிலைக்கு முன்பாக நிற்கும் போது, இதன் மூலம் எத்தனை ஆயிரம் காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என வியப்படைந்தேன். ஏசாயாவின் புதிய வானம், புதிய பூமியின் தரிசனத்தை நினைத்துப் பார்த்தேன் (ஏசா. 65:17). அங்கு இளம் வயதில் பாலகர்கள் மரிப்பதில்லை (வச. 20), குற்றங்களை உருவாக்கும் ஏழ்மையில் அவர்கள் வளர்க்கப்படுவதில்லை (வச, 22-23), கத்தி குற்றங்கள் நடைபெறும் இடமாக அது இருப்பதில்லை, ஏனெனில் எல்லா பட்டயங்களும் ஆக்கப் பூர்வமான வேலைக்குப் பயன்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன (2:4).
அந்த புதிய உலகம் இங்கே இல்லை, அது வரும் வரையிலும் நாம் ஜெபிக்கவும், பணி செய்யவும் கடவோம் (மத்.6:10). தேவன் வாக்களித்துள்ள எதிர்காலத்தின் ஒரு காட்சியை அந்த கத்தி தேவதையும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றாள். பட்டயங்கள் மண் வெட்டிகளாயின, ஆயுதங்கள் கலைப் பொருட்களாயின. வேரென்ன மீட்பின் திட்டங்கள் மூலம் எதிர் காலத்தைப் பற்றிய காட்சியை இன்னும் கொஞ்சம் தர முடியும்?
உனக்கு மிக அருகிலேயே
ஒவ்வொரு நாளும், எருசலேமிலுள்ள ஒரு தபால் நிலையத்தில், விநியோகிக்க முடியாத, குவியலான கடிதங்களைப் பிரிப்பதில் வேலையாட்கள் ஈடுபட்டுள்ளனர். எப்படியாகிலும் அவற்றை அதனதன் பெறுநரிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகின்றனர். அநேகக் கடிதங்கள், “தேவனுக்கு கடிதங்கள்” என்ற பெட்டியை அடைகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான, இத்தகைய கடிதங்கள் வருகின்றன, அவற்றில் விலாசம் தேவனுக்கு அல்லது இயேசுவுக்கு என்றிருக்கும். இவற்றை என்ன செய்வது என்று அறியாது, திகைத்தனர், வேலையாட்கள் அவற்றை எடுத்துச் சென்று, எருசலேமின் மேற்குப் பக்க சுவரிலுள்ள கற்களுக்கு இடையேயுள்ள மற்ற கடிதங்களோடு வைத்தனர். அதிலுள்ள அநேகக் கடிதங்களில் வேலைக்காகவும், தனக்கு கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டும் எனவும் அல்லது நல்ல சுகத்திற்காகவும் வேண்டி, எழுதப் பட்டிருக்கும். சிலர் பாவமன்னிப்பை கேட்கின்றனர், வேறு சிலர் நன்றியைத் தெரிவிக்கின்றனர். ஒரு மனிதன், மரித்துப் போன தன்னுடைய மனைவி கனவில் வர வேண்டும், ஏனெனில் தான் அவளைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கேட்கிறார். ஒவ்வொரு அனுப்புனரும், தங்களின் கடிதம் தேவனைச் சேர்ந்து விட்டால், தேவன் கவனிப்பார் என்று நம்புகின்றனர்.
இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தின் வழியே பயணம் செய்கையில் அநேகச் செய்திகளை கற்றுக் கொண்டனர். அவற்றில் ஒன்று, அவர்களின் தேவன் மற்ற தேவர்களைப் போல தூரத்தில் இருப்பவர் அல்ல, செவிடானவரும் அல்ல, ஒரே இடத்தில் தான் இருப்பார், நீண்டபயணம் செய்வதாலோ, அல்லது பன்னாட்டு மெயில் மூலமாகவோதான் அவரை அடையக் கூடும் என்பதாகவும் அல்ல, “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாய் இருக்கிறார்” (உபா. 4:7). இது ஒரு புரட்சிகரமான செய்தியல்லவா! மற்றவர்கள் இவ்வாறு கூற முடியுமா?
தேவன் எருசலேமில் மட்டும் வாழவில்லை, நாம் எங்கிருந்தாலும், அவர் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார், சிலர் இந்த உண்மையை இன்னமும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர், அந்த கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும், “தேவன் உன்னருகில் தான் இருக்கிறார், அவரிடம் பேசு” என்று பதில் அனுப்பினால், அவர்களும் உண்மையைக் கண்டுபிடிக்கக் கூடுமே.
மீண்டும் நண்பர்களாயினர்
ஒரு நாள், ஒரு தாயும் அவளுடைய இளம் மகளும் ஆலயத்தில் அமர்ந்திருந்தனர். ஆராதனையின் போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு, வெளிப்படையாக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் படி வாய்ப்பு கொடுக்கப் பட்டது. அவ்வாறு செய்ய, ஒவ்வொரு முறையும் யாரேனும் முன்னோக்கிச் செல்லும் போது, அந்த சிறுமி கரங்களைத் தட்ட ஆரம்பித்து விடுவாள். ஆராதனை முடிந்ததும், அவளுடைய தாய், “நான் மிகவும் வருந்துகிறேன், ஒப்புரவாகுதலின் மூலம் நாம் தேவனுக்கு நண்பர்களாகின்றோம் என நான் என்னுடைய மகளிடம் சொல்லியிருந்தேன், அதனாலேயே அவள் அனைவரையும் உற்சாகப் படுத்தினாள்” என்று சபையின் தலைவர்களிடம் தெரிவித்தாள்.
அந்தச் சிறுமியின் மனதில், சுவிசேஷத்தைக் குறித்து ஒரு எளிய கருத்தை, அவளுடைய தாயார் கொடுத்திருந்தது நல்லது தான். முன்பு தேவனுக்கு சத்துருக்களாக இருந்த நாம், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம், தேவனோடு கூட ஒப்புரவானோம் (ரோம. 5:9-10). இப்பொழுது நாம் தேவனுக்கு நண்பர்களாக இருக்கின்றோம். முன்பு இந்த நட்புறவை முறிப்பதற்கு நாம் தான் காரணமாயிருந்தோம் (வ.8), எனவே, ஒப்புரவாகுதலை முழுமையாக்க, நாம் தான் மனந்திரும்ப வேண்டும். அந்த சிறுமியின் செயல் மிகவும் பொருத்தமானது, ஒரேயொரு பாவி மனந்திரும்பினாலே பரலோகம் முழுவதும் ஆர்ப்பரிக்கின்றது (லூக். 15:10) .அந்தச் சிறுமியும் தான் அறியாமலேயே பரலோகத்தின் ஆர்ப்பரிப்பை கரகோஷத்தினால் பிரதிபலித்தாள்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஒப்புரவாகுதலின் வேலையை, “ஒருவன் தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை (யோவா. 15:10) என்பதாகத் தெரிவிக்கின்றார். அவர் நம்மீது கொண்டுள்ள நட்பின் காரணமாக, நிறைவேற்றிய தியாகச் செயலின் விளைவாக, நாம் இப்போது தேவனோடு நண்பர்களாக இருக்கின்றோம், அவர், “இனி நான் உங்களை ஊழியக்காரன் என்று சொல்லுகிறதில்லை,… நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்” (15:15) என்றார்.
முன்பு தேவனுக்குப் பகைவராக இருந்த நாம் இப்போது அவருக்கு நண்பர்களாக இருக்கிறோம். இந்த எண்ணம் நம்மை வியக்கச் செய்கின்றது, இது கைத் தட்டுவதற்கு உகந்தது.
மரண வரிசையிலும் மகிழ்ச்சி
1985 ஆம் ஆண்டு, அன்டொனி ரே ஹின்டன் என்பவர், இரண்டு உணவக மேலாளர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார், அவர் இக்குற்றத்தைச் செய்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டார். அவர், இந்த கொலைகள் நடந்த போது, அவ்விடத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்தார், ஆனாலும் அவர் குற்றவாளியென தீர்க்கப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவருடைய விசாரணையின் போது, ரே தன் மீது பொய் குற்றம் சாட்டியவர்களை மன்னித்தார், தனக்கு இந்த அநீதி இழைக்கப் பட்ட போதும், தனக்குள் மகிழ்ச்சியிருப்பதாகக் கூறினார். “என்னுடைய மரணத்திற்குப் பின், நான் பரலோகத்தை அடைவேன், நீ எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்பார்.
சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்த ரே ஹின்டனுக்கு வாழ்க்கை கடினமாயிருந்தது. சிறைச்சாலையின் விளக்குகள் ஒளிர்ந்து, மற்றவர்களுக்கு மின் நாற்காலியில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காட்டியது, தனக்கும் நடைபெறக் காத்திருப்பதை அது தெரிவித்தது. பொய்யைக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு ரே உட்படுத்தப்பட்டார், ஆனால் அதின் முடிவுகள் புறக்கணிக்கப்பட்டன. அவர் சந்தித்த அநேக அநீதச்செயல்களில் ஒன்று அவரை மீண்டும் விசாரணைக்குட்படுத்தியது.
கடைசியாக, 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், ரேயின் மீதிருந்த தீர்ப்பை மாற்றியது. அவர் ஏறத்தாள முப்பது ஆண்டுகளாக, சாவின் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதற்கு அவருடைய வாழ்வு ஒரு சாட்சியாக அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் மீது அவருக்கிருந்த விசுவாசம், அவருடைய சோதனைகளுக்கு அப்பால் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது (1 பேது. 1:3-5), அவருக்கிழைக்கப்பட்ட அநீதத்தின் மத்தியிலும் அசாதரணமான மகிழ்ச்சியை அநுபவித்தார் (வச. 8). “நான் சிறைச்சாலையில் இருந்தபோதும், எனக்குள் இருந்த இந்த மகிழ்ச்சியை அவர்களால் எடுத்துவிட முடியவில்லை” என்று ரே விடுதலையான போது கூறினார். இந்த மகிழ்ச்சி, தேவன் மீது அவருக்கிருந்த உண்மையான விசுவாசத்தை நிரூபித்தது (வச. 7-8).
மரண வரிசையிலுமா மகிழ்ச்சி? இதன் நுணுக்கத்தை அறிந்து கொள்வது கடினம் தான். இது நம்மை தேவனுக்கு நேராகத் திருப்புகின்றது. அவரை நாம் கண்களால் காணமுடியாவிட்டாலும், அவர் நம்மோடு இருக்கின்றார், நம்முடைய துன்ப நேரங்களில் நம்மைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்.
தேவனளவு பெரிய அன்பு
டொமினிக்கன் குடியரசுக்கு உட்பட்ட சான்டோ டொமிங்கோ என்ற இடத்திலுள்ள ஒரு பின்தங்கிய வசிப்பிடத்தை நான் பார்வையிட்டேன். அங்குள்ள வீடுகள் எல்லாம் வளைவுகளோடு அமையப்பெற்ற இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன, அதில் மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்தன. நான், அங்குள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்களோடு நேரடியாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றேன். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம், மது பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களை விடுவித்தல் ஆகியவற்றில், ஆலயங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து கலந்துரையாடினேன்.
ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த, அபாயகரமான ஏணி வழியாக ஏறி, ஒரு தாயாரையும் அவளுடைய மகனையும் பேட்டி எடுத்தேன். ஒரு சில நிமிடங்களில் ஒருவர் வேகமாக வந்து, “நாம் இப்பொழுதே இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்”, கொடிய கைக் கோடாரிகளைப் பயன்படுத்தும் ஒரு கூட்டத்தின் தலைவர், நம்மைத் தாக்குவதற்கு கூட்டத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறார், என்றார்.
நாங்கள் அடுத்த மக்கள் கூட்டத்தைச் சந்திக்கச் சென்றோம். அங்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. அதற்கான காரணத்தைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன். அங்கு நான் ஒவ்வொரு வீடாகச் சந்தித்தபோது, ஒரு கூட்டத்தின் தலைவன் வெளியே எங்களுக்குப் பாதுகாவலாக நின்றான். அவருடைய மகளின் படிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை அங்குள்ள சபையினர் பார்த்துக்கொள்கின்றனர், விசுவாசிகள் அவளுக்கு ஆதரவாக நின்றதால், அவன் எங்களுக்குக் காவலாக நின்றான்.
மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு ஒப்பிடமுடியாத ஒரு வகை அன்பினைக் குறித்து விளக்குகின்றார். இவ்வகை அன்பு தகுதியானவர்களை மட்டும் அணைத்துக்கொள்ளும் அன்பல்ல, தகுதியற்றவர்களிடம் காட்டப்படும் அன்பு (மத். 5:43-45), உறவினர்களையும் நண்பர்களையும் தாண்டி, பதிலுக்கு நம்மீது அன்பு செலுத்த முடியாத நபர்களிடம் காட்டப்படும் அன்பு (வச. 46-47). இதுவே மிகப்பெரிய தேவஅன்பு (வச. 48), அனைவரையும் ஆசிர்வதிக்கும் அன்பு.
சான்டோ டோமிங்கோவிலுள்ள விசுவாசிகள் இந்த அன்பை செயலில் காட்டிய போது, அருகிலுள்ளவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. கடினப்பட்ட இருதயங்கள், தங்களை ஏற்றுக்கொண்டவர்களின் மீது கரிசனைகாட்ட ஆரம்பித்தன. இந்த மிகப் பெரிய தேவஅன்பு பட்டணங்களுக்குள் வரும் போதும் இத்தகைய மாற்றத்தைக் காணலாம்.
மர்மமான உதவியாளர்கள்
தசைநார் தேய்வு என்ற நோயினால் லீலா வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நாள், அவள் இரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, அதிகமான படிகளை ஏற வேண்டியதிருந்தது. அங்கு நகரும் மின் படிகளும் இல்லை. அவளுக்கு கண்ணீர் வர இருந்த வேளையில், திடீரென ஒரு மனிதன் அங்கு வந்து, அவளுடைய பைகளைச் சுமந்து கொண்டு, அவளும் மெதுவாக படியில் ஏறும் படி உதவினார். அவள் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.
மைக்கேல், ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கு தாமதமாகிவிட்டது. ஓர் உறவின் மன முறிவினால் ஏற்பட்ட மனஅழுத்தம் ஒருபுறம், லண்டன் பட்டணத்தின் வாகன நெரிசல் மறுபுறம், இவற்றின் ஊடே கார் டயரில் காற்று இறங்கிவிட்டது. அவன் உதவியற்றவனாக, மழையில் நனைந்து கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்து வ ந்த ஒரு மனிதன், காரின் பொருள் வைக்கும் பகுதியைத் திறந்து, காரை உயர்த்தி, டயரை மாற்றினான். மைக்கேல் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.
யார் இ ந்த மர்மமான உதவியாளர்கள்? இரக்கமுள்ள அந்நியர்கள்? அல்லது அதையும் விட மேலானவர்களா?
பிரகாசமான தோற்றமும், இறக்கைகளும் கொண்ட உருவம் தான், நாம் தேவதூதர்களுக்கு கொடுத்து வைத்திருக்கும் பிரபலமான உருவம். இதில் சிறிதளவே உண்மையுள்ளது. சில தேவதூதர்கள் இவ்வாறு தோன்றுகின்றனர் (ஏசா 6:2; மத் 28:3), மற்றும் சிலர் நிலத்தில் கால் பதித்து வருவதோடு, உணவு உண்ணவும் தயாராயிருக்கின்றனர். (ஆதி 18:1-5). அவர்களை நாம் சாதாரண மக்கள் என தவறாகவும் கருதக் கூடும். (நியா 13:16). நாம் அந்நியரை உபசரிப்பதன் மூலம், சில வேளைகளில் தேவதூதரையும் உபசரிப்பதுண்டு என்று எபிரெயரை எழுதியவர் கூறுகின்றார். (13:2)
லீலாவுக்கும், மைக்கேலுக்கும் உதவியவர்கள் தேவதூதர்கள் தானா, என்பதை நாம் அறியோம். ஆனால், வேதாகமத்தின் அடிப்படையில் நாம் பார்க்கும் போது, அப்படியும் இருக்கலாம். தேவதூதர்கள் இப்பொழுதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் (எபி 1:14). அவர்கள் சாதாரணமாக நாம் தெருவில் பார்க்கும் மனிதர்களைப் போன்றும் வரலாம்.
மிகப் பெரிய கலைப்பும், மாற்றமும்
ராபர்ட் கோல்ஸ் எழுதிய, த கால் ஆஃப் சர்விஸ்(The Call of Service) என்ற புத்தகத்தில், சேவை செய்வதற்கான காரணங்களை ஆராயும் போது, ஒரு வயதான பெண்ணின் சேவையைப் பற்றி கூறுகின்றார். அவள் ஒரு பள்ளி பேருந்து ஓட்டுநர். ஒவ்வொரு நாளும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் அதிக கவனம் செலுத்துவாள், வீட்டுப் பாடத்தில், கேள்விகளைக் கேட்பாள், அவர்களுடைய வெற்றியைக் கொண்டாடுவாள், “இக்குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதை நான் காணவேண்டும்” என்று தன்னுடைய நோக்கத்தை வெளிப்படுத்துவாள். இதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது.
இவள் வாலிப்பெண்ணாக இருந்த போது, இவளுடைய அத்தையின் வார்த்தைகள், இவளுடைய உள்ளத்தைத் தொட்டிருக்கின்றது. “நம் தேவன் நம்மைப் பார்க்கும் படியாக, நாம் ஏதாவது செய்யவேண்டும், இல்லையென்றால், மிகப் பெரிய கலைப்பின் போது, நாம் காணாமல் போய் விடுவோம்” என்பதாக அவளுடைய அத்தை கூறியிருக்கின்றாள். நியாயத்தீர்ப்பின் நாளில் நடைபெறும் மிகப் பெரிய மாற்றத்திற்குப் பின், நாம் நரகத்தில் தள்ளுண்டு போய் விடக்கூடாது என்பதற்காக இப்பெண், “தேவனுடைய கவனத்தைப் ஈர்ப்பதற்காக” சில காரியங்களை நியமித்து வைத்துள்ளாள், ஆலயத்திற்குச் செல்லவேண்டும், அப்படியானால் “நான் உண்மையுள்ளவளாயிருக்கிறேன்” என்பதை தேவன் பார்ப்பார் என்றும், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு நான் கடினமாக உழைத்தால், “நான் செய்வதைக் குறித்து, மற்றவர்கள் கூறுவதை தேவன் கேட்பார்” என்றும் நினைத்திருக்கின்றாள்.
நான், அவள் செய்யும் வேலையைக் குறித்து வாசித்து, கவலையுற்றேன். தேவன் நம்மை கவனித்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை இவள், எப்படி அறியாதிருக்கிறாள்? (மத். 10:30). அந்த மிகப் பெரிய குழப்பத்தின் நாளில், நியாயத்தீர்ப்பிலிருந்து நமக்கு விடுதலை தந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்வார் என்பதை இவள் எப்படி அறியாமல் இருக்கிறாள்? (ரோம. 8:1). நம்முடைய நற்கிரியைகளினால் நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை இவள் எப்படித் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றாள்? இரட்சிப்பு என்பது விசுவாசிக்கிறவர்களுக்கு தேவனால் அருளப்படுகின்ற ஈவு (எபே. 2:8-9).
இயேசுவின் வாழ்வும், மரணமும், உயிர்த்தெழுதலும், நாம் தேவனோடு வாழப்போகின்ற எதிர் காலத்தை நமக்குத் தருகின்றது, நாம் விடுதலையோடு பிறருக்குச் சேவை செய்து மகிழ்ந்திருப்போம்.