டொமினிக்கன் குடியரசுக்கு உட்பட்ட சான்டோ டொமிங்கோ என்ற இடத்திலுள்ள ஒரு பின்தங்கிய வசிப்பிடத்தை நான் பார்வையிட்டேன். அங்குள்ள வீடுகள் எல்லாம் வளைவுகளோடு அமையப்பெற்ற இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன, அதில் மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்தன. நான், அங்குள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்களோடு நேரடியாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றேன். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம், மது பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களை விடுவித்தல் ஆகியவற்றில், ஆலயங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து கலந்துரையாடினேன்.

ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த, அபாயகரமான ஏணி வழியாக ஏறி, ஒரு தாயாரையும் அவளுடைய மகனையும் பேட்டி எடுத்தேன். ஒரு சில நிமிடங்களில் ஒருவர் வேகமாக வந்து, “நாம் இப்பொழுதே இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்”, கொடிய கைக் கோடாரிகளைப் பயன்படுத்தும் ஒரு கூட்டத்தின் தலைவர், நம்மைத் தாக்குவதற்கு கூட்டத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறார், என்றார்.

நாங்கள் அடுத்த மக்கள் கூட்டத்தைச் சந்திக்கச் சென்றோம். அங்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. அதற்கான காரணத்தைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன். அங்கு நான் ஒவ்வொரு வீடாகச் சந்தித்தபோது, ஒரு கூட்டத்தின் தலைவன் வெளியே எங்களுக்குப் பாதுகாவலாக நின்றான். அவருடைய மகளின் படிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை அங்குள்ள சபையினர் பார்த்துக்கொள்கின்றனர், விசுவாசிகள் அவளுக்கு ஆதரவாக நின்றதால், அவன் எங்களுக்குக் காவலாக நின்றான்.

மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு ஒப்பிடமுடியாத ஒரு வகை அன்பினைக் குறித்து விளக்குகின்றார். இவ்வகை அன்பு தகுதியானவர்களை மட்டும் அணைத்துக்கொள்ளும் அன்பல்ல, தகுதியற்றவர்களிடம் காட்டப்படும் அன்பு (மத். 5:43-45), உறவினர்களையும் நண்பர்களையும் தாண்டி, பதிலுக்கு நம்மீது அன்பு செலுத்த முடியாத நபர்களிடம் காட்டப்படும் அன்பு (வச. 46-47). இதுவே மிகப்பெரிய தேவஅன்பு (வச. 48), அனைவரையும் ஆசிர்வதிக்கும் அன்பு.  

சான்டோ டோமிங்கோவிலுள்ள விசுவாசிகள் இந்த அன்பை செயலில் காட்டிய போது, அருகிலுள்ளவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. கடினப்பட்ட இருதயங்கள், தங்களை ஏற்றுக்கொண்டவர்களின் மீது கரிசனைகாட்ட ஆரம்பித்தன. இந்த மிகப் பெரிய தேவஅன்பு பட்டணங்களுக்குள் வரும் போதும் இத்தகைய மாற்றத்தைக் காணலாம்.