எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த  இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்!  இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே  அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.

சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார். 

தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.

இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

தழும்புகள் கூறும் கதைகள்

என்னுடைய அம்மா வளர்த்து வரும், பாண்டா முகம் கொண்ட பான்சி மலர்களை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றிச் சுற்றி வந்தது. நான் குழந்தை யாயிருந்த போது, அதைப் பிடித்து விட ஆவலாயிருந்தேன். நான், எங்களது பின் பக்க வளாகத்திலிருந்து, வேகமாக சமையலறைக்குள் வந்து, ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு திரும்பிய போது, பின்புற சிமென்ட் தளத்தில் வழுக்கி விழுந்தேன். என்னுடைய கரத்திருந்த கண்ணாடி குவளை உடைந்து, என்னுடைய கணுக்கையை வெட்டியது. அவ்விடத்தில் பதினெட்டு தையல்கள் போட வேண்டியதாகி விட்டது. இன்றும், என்னுடைய கணுக்கையில் கம்பளி பூச்சி போன்ற தழும்பு காணப்படுகின்றது. அந்த தழும்பு, இன்றைக்கும் நான் காயப்பட்டதையும், மீண்டும் சுகம் பெற்றதையும் கூறிக் கொண்டிருக்கிறது.

இயேசு, மரித்து, உயிர்தெழுந்து, சீடர்களுக்கு காட்சியளித்த போது, அவர் தன்னுடைய தழும்புகளைக் காண்பித்தார். தோமா, அவருடைய “கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தைத்’’ தான், காண வேண்டும் என்கின்றார், என யோவான் எழுதுகின்றார். இயேசு தோமாவை நோக்கி, நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோவா. 20:25,27). அவர் உயிர்த்தெழுந்த பின்பு, அவருடைய பாடுகளால் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை பார்க்க முடிகிறது, அது, அவர் அதே இயேசு தான் என்பதைக் காட்டுகிறது

இயேசுவின் தழும்புகள் அவர் இரட்சகர் என்பதையும், மீட்பின் கதையையும் நமக்குச் சொல்கின்றது. அவருடைய பாதங்களிலும், கரங்களிலும் ஏற்பட்ட துளைகளும், விலாவில் ஏற்பட்ட குழியும், அவர் நமக்காகப் பட்ட வேதனைகளையும், காயங்களையும், அதன் பின் சுகமடைந்ததையும் சொல்லுகின்றது. நம்மை முற்றிலும் மீட்டுக்கொள்ளவே அவர் இத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொண்டார்

இயேசுவின் தழும்புகள் கூறும் கதையை நீ எப்பொழுதாகிலும் நினைத்துப் பார்த்ததுண்டா? 

 

இது நான் தான்

பி.டி.பார்னம் என்பவரின் வாழ்க்கையையும், அவருடைய சர்க்கஸ் அநுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, பிரசித்திப் பெற்ற “த கிரேடெஸ்ட் ஷோ மன்” என்ற திரைப்படத்தின் முன் இசையாக, அனைவரையும் ஈர்க்கும் “திஸ் இஸ் மீ” என்ற, பாடல் மறக்கமுடியாத வகையில் இசைக்கப்படும். அந்த படத்தில் வரும் நடிகர்களால் இப்பாடல் பாடப்படும், இந்த நடிகர்கள், சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லையென்பதற்காக, அவர்கள் சந்தித்த இகழ்ச்சிகளையும், கேவலங்களையும் விளக்குவதோடு, கொடிய வார்த்தைகள் மனிதனைக் கொல்லும் துப்பாக்கி குண்டுகளெனவும், நிரந்தர காயத்தை ஏற்படுத்தும் கத்திகள் எனவும் இந்த பாடலின் வரிகள் கூறுகின்றது. 

கடுஞ்சொற்களால் ஏற்பட்ட அகக்காயங்களை எத்தனை மக்கள் தாங்கிக் கொண்டு வாழ்கின்றனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

ஒருவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தின் வன்மையையும், அது, நீண்ட காலம் நிலைத்திருக்கும் கொடுமையையும் யாக்கோபு அறிந்திருந்தார். எனவே நாவைக் குறித்து அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக். 3:8). என்கின்றார். இந்த வலிமையான ஒப்பிடுதலின் மூலம், விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளின் மிகுந்த வல்லமையை உணர்ந்துகொள்ள வேண்டுமென யாக்கோபு வலியுறுத்துகின்றார். இதற்கும் மேலாக, ஒரே வாயினாலே தேவனைத் துதித்துக் கொண்டும், தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனை தூஷிக்கவும் முற்படுகிறோம் என்கின்றார் (வச. 9-10).

“திஸ் இஸ் மீ” என்ற பாடல் வார்த்தைகளினால் காயப்படுத்துதலை விளக்குகிறது. நாம் மகிமைக்குரியவர்களென்பதாக வேதாகமம் உறுதியளிக்கின்றது. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனி அழகையும், கெளரவத்தையும் கொடுக்கின்றது. அது நம்முடைய வெளித் தோற்றத்தினாலோ அல்லது நாம் எதையொ செய்துவிட்டதாலோ அல்ல. நாம் அவருடைய கரத்தினால் அழகாக உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய கரத்தின் படைப்புகள் (சங். 139:14) எனவே நாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளும், ஒருவரைப்பற்றி கூறும் வார்த்தைகளும் அவர்களில் உண்மையாகும் வல்லமை பெற்றவை.

 

நான் எந்த பொல்லாப்புக்கும் பயப்படேன்

1957ம் ஆண்டு, மெல்பா பட்டிலோ பீல்ஸ் “லிட்டில் ராக் நைன்” என்ற குழுவிலுள்ள ஒன்பது பேர்களில் ஒருத்தியாகத் தேர்வு செய்யப்பட்டாள். இதுவரை, வெள்ளையர்கள் மட்டுமே பயின்று வந்த லிட்டில் ராக் – அர்கன்சாஸ் உயர் நிலைப் பள்ளியில், முதல் முறையாக பள்ளிக் கல்வியை முடித்த ஆப்பிரிக்க – அமெரிக்க மாணவர்கள் இவர்கள். 2018ம் ஆண்டு இவள் எழுதிய சுய சரிதையில் “நான் பயப்பட மாட்டேன், என்னுடைய வாழ்வின் கதைகள், சோதனைகளின் மத்தியில் என்னுடைய நம்பிக்கையை உறுதிப் படுத்தின”  என எழுதினாள். பதினைந்து வயதே நிரம்பிய மாணவியான பீல்ஸ் தைரியமாக ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த கொடுமைகளையும்,  அநியாயங்களையும், இருதயத்தை உடையச் செய்யும் நிகழ்வுகளையும் எழுதினாள்.

அவள் தேவன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பற்றியும் எழுதினாள். அந்த இருண்ட நாட்களில் பயம் அவளை மேற்கொண்ட போது, பீல்ஸ் தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்ட வேத வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்திக் கொண்டாள். அவற்றை அவள் உச்சரித்த போது, தேவப் பிரசன்னம் அவளோடிருந்ததை அவள் உணர்ந்தாள். வேத வார்த்தைகள் அவளுக்குச் சோதனையைச் சகிக்க பெலன் கொடுத்தது.

பீல்ஸ் அடிக்கடி சங்கீதம் 23ஐ சொல்லிக் கொள்வாள். அவற்றைக் கூறும் போது அவளுக்கு ஆறுதல் கிடைத்தது. “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” (வச. 4). “ தேவன் உனக்கு உன் தோலைப்போல் மிக அருகிலிருக்கின்றார்.
நீ கூப்பிடும் போது உடனே அவர் உனக்கு உதவுவார்” என்று கூறிய அவளுடைய பாட்டியின் ஊக்கந்தரும் வார்த்தைகள் அவளுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

நம்முடைய கடினமான சூழல்கள் வேறுவகையாக இருக்கலாம். நாம் அனைவருமே போராட்டங்களின் மத்தியில், சூழல்கள் நம்மை மேற்கொண்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் தேவனுடைய வல்லமையான பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கின்றது என்ற உண்மை நம்முடைய இருதயத்தை ஊக்குவிப்பதாக இருக்கட்டும்.

வேலையாளியின் இருதயம்

சமையல் வேலை, நிகழ்வுகளைத் திட்டமிடுதல், உணவு ஆலோசகர் மற்றும் செவிலி போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுகிறவள் தான் நவீனத் தாயார். 2016ல் ஏற்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு சராசரித் தாயாரானவள் ஒரு வாரத்தில் 59-96 மணிநேரங்கள் குழந்தைக்கான வேலைகளில் ஈடுபடுகின்றாள் என்று கூறப்படுகின்றது. தாய்மார்கள் அதிகக்களைப்படைவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தாய் என்கின்ற போது, அவள் குழந்தைக்காக அதிகநேரம் செலவழிக்கின்றாள் என்பதேயாகும். ஏனெனில், இவ்வுலகினை அறிந்து கொள்ள குழந்தைக்கு அதிக உதவி தேவைப்படுகின்றது.

என்னுடைய நாட்கள் நீண்டதாக நான் உணரும் போது மற்றவர்கள் மீதான அக்கறையே நான் நாட வேண்டிய முக்கியமான ஒன்று என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பணியாளர்களை இயேசுவானவர் உயர்த்திக்காட்டும் பொழுது அதைக்குறித்த நம்பிக்கை எனக்குள் ஆழமாக உண்டாகிறது.

மாற்கு சுவிசேஷத்தில் சீடர்களுக்கு மத்தியில் பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று ஒரு வாக்குவாதம் உண்டாகிறது. இயேசுவானவர் அமைதியாக உட்கார்ந்து அவர்களுக்கு, 'எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்" (மாற். 9:35) என்று கூறுகிறார். பிறகு ஒரு சிறு பிள்ளையைக் கையில் எடுத்து, மற்றவர்களுக்கு, குறிப்பாக நம்மில் மிகவும் உதவியற்றவர்களுக்கு சேவை செய்வதைக்குறித்த உதாரணத்தைக் கற்பித்தார். (வச. 36,37).

கிறிஸ்துவின் பதிலானது, பரலோக இராஜ்ஜியத்தில் எது பெரியது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.மற்றவர்களுக்கு மனமார்ந்த உதவிகளைச் செய்வதே அவருடைய தரமாக இருக்கிறது. ஊழியம் செய்வதைத் தெரிந்து கொண்டவர்கள்மேல், அவருடைய வல்லமையளிக்கும் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் (வச. 37). உங்கள் குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதிக உற்சாகத்தோடு அதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் ஊழியம் செய்யும் நேரத்தையும், முயற்சிகளையும் இயேசுவானவர் அதிகமாக கனப்படுத்த விரும்புகிறார்.

வெற்றி பேரணி

“சிகாகோ கப்ஸ்” பேஸ்பால் அணியானது ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதன்முதலாக 2016ல் தான்  உலகத்தொடரை வென்றது. அதன் வெற்றிப்பேரணியில் 50 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். உலக சாம்பியன்களைக் கொண்டாடும் வகையில் நகரில் ஊர்வலமாகச் செல்லத் திரண்டார்கள்.

வெற்றிப் பேரணிகள் நவீனக் காலக் கண்டுபிடிப்புகள் கிடையாது. ரோமர்கள் போரில் வெற்றிபெறும்போது வெற்றி பேரணி நடத்துவார்கள், பண்டைய காலத்தில் அது பிரபலம். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடி தன்னுடைய படைகளோடும் சிறைப்பிடித்து வந்தவர்களோடும் தளபதிகள் பேரணியாகச் செல்வார்கள்.

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி கிறுஸ்துவுக்குள்” சிறைப்பட்டவர்களாக நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று இந்தப் பேரணியை மனதில்வைத்துத்தான் கொரிந்து சபைக்கு பவுல் எழுதியிருக்கவேண்டும் (2 கொரி. 2:14). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இங்கு சிறைப்பட்டவர்களாகக் காட்டப்படுவது சுவாரஸ்யமானது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அந்தப் பேரணியில் கட்டாயமாகக் கலந்துகொள்ள நிர்பந்திக்கப்படாமல், உயிர்த்தெழுந்து, வெற்றிபெற்ற கிறிஸ்துவின் தலைமையின்கீழ் மனதாரப் பங்குபெறுகிறவர்களாகக் காணப்படுவார்கள். கிறிஸ்து தாம் வெற்றிபெற்றதன்மூலம் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதையும், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளப் போவதில்லை என்பதையும் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம்.

சிலுவையில் இயேசு வெற்றிபெற்றார், அதனால் விசுவாசிகளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று அறிவிக்கும்போது, “அவரை அறிகிற அறிவின் வாசனையை” எங்கும் பரவச்செய்வதற்கு நாம் உதவுகிறோம். (2 கொரி. 2:14). இந்த வாசனை சிலருக்கு இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிப்படுத்துகிற நற்வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய தோல்விக்கான வாசனையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத இந்த வல்லமையான வாசனையானது நாம் செல்கிற இடங்களிளெல்லாம் நுகரப்படும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் வெற்றியோடு உயிர்த்தெழுந்ததை அறிவிப்பார்கள், அந்த வெற்றிதான் உலகத்திற்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்துள்ளது.

அன்றாடப் பணிகளில் அலுப்பா?

நேராக நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தண்டுகளை/பின்களை பெரிய பந்தை உருட்டி, குறிபார்த்து அடிக்கும் விளையாட்டை ஆங்கிலத்தில் பொளலிங் என்பார்கள். அவ்வாறு அந்தத் தண்டுகளை ஒரு பந்து அடிப்பதுபோல என் தோழியான எரின் தன் கணுக்காலில் பச்சை குத்தியிருந்தாள். “தண்டுகளை நேராக வையுங்கள்” என்கிற அர்த்தமுடைய சாரா குரூவ்ஸின் பாடலைக் கேட்டபிறகுதான் அவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ள அவளுக்கு எண்ணம் வந்ததாம். தண்டுகளை பந்து அடித்தபிறகு, அவற்றை மீண்டும் நேரே வைக்கவேண்டும், அடுத்து யாராவது அடிப்பார்கள், மீண்டும் நேராக வைக்கவேண்டும். அதுபோலத்தான் அன்றாட பணிகளும் இருக்கின்றன; சிலசமயங்களில் அவற்றைச் செய்வது அர்த்தமற்றது போலக்கூடத் தோன்றும். அத்தகைய பணிகளைச் செய்வதில் சந்தோஷங்கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டுகிற பாடல் அது.

துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகள் ஒரு நாள் முடிந்து, மறுநாளும் ஆரம்பிக்க வேண்டியவை. இது புதிதல்ல, எப்போதும் இருப்பதுதான். பழைய ஏற்பாட்டில் பிரசங்கி என்கிற புத்தகத்திலும் அதுபற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் அன்றாட பணிகளை மீண்டும் மீண்டும் செய்வதில் என்னதான் பயனிருக்கிறது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் அலுத்துக்கொள்கிறார். பிர 1:2-3. சில சமயங்களில் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றுகிறதாம். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்.” வசனம் 9.

ஆனால் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது” அப்பணிகள் அர்த்த முள்ளவையாக மாறுவதாகவும், சந்தோஷ உணர்வு கிடைப்பதாகவும் அதன் ஆசிரியர் கூறுகிறார். பிர 12:13. வாழ்க்கையின் அன்றாட பணிகளை தேவன் உயர்வாகப் போற்றுகிறார், அவற்றை உண்மை யோடு செய்பவர்களுக்கு பலனளிக்கிறார். வச 14. இதை உணரும்போது ஆறுதல் உண்டாகிறது.

நீங்கள் மீண்டும் மீண்டும் நேரே நிறுத்தவேண்டிய “தண்டுகள்”/பின்கள் யாவை? அத்தகைய வழக்கமான வேலைகளைச் செய்வது களைப்பாகத் தோன்றும்போது, தேவனுக்கான  அன்பின் பணிகளாக அவற்றைச் சமர்ப்பித்து, செய்துபாருங்களேன்!

வேதாகமம் பரிந்துரைக்கும் மருந்து

கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் தங்களுடைய நான்கு பள்ளி செல்லும் குழந்தைகளோடு “நகைச்சுவை இரவு” என்று ஓர் இரவைச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஓவ்வொரு குழந்தையும் தாங்கள் வாசித்த, கேள்விப்பட்ட அல்லது தாங்களே உருவாக்கிய நகைச்சுவைகளை இரவு உணவின் போது சொல்லும்படி கொண்டுவருவர். இந்த வழக்கம் மகிழ்ச்சியான நினைவுகளையும் வேடிக்கையையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வழிவகுத்தது. அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் சிரிப்பு ஆரோக்கியத்தை கொடுத்ததாகவும், கடினமான நாட்களில் ஆவியில் புத்துணர்ச்சி அளிக்க சிரிப்பு உதவியதாக கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் உணர்ந்தனர்.

சாப்பாட்டு மேசையைச் சுற்றியமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வதின் நன்மையை சி.எஸ்.லூவிஸ் “ஒரு வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டு வேளையின் போது சிரித்து மகிழ்வதற்கு இணையாக எந்தவொன்றையும் சூரியன் இப்புவியில் கண்டதில்லை” எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு மகிழ்ச்சியான உள்ளத்தைப் பெற்றுக்கொள்வதின் ஞானத்தைக் குறித்து நீதிமொழிகள் 17:22ல் மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்” என வாசிக்கின்றோம். இந்த நீதிமொழி சுகத்தையும், ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறது. நாம் நம்முடைய இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொண்டால் அது மிகப் பெரிய பலனைத் தரக் கூடிய, விலை குறைந்த மருந்து என்கின்றார்.

நம்மனைவருக்கும் வேதாகமம் கூறுகின்ற இந்த மருந்து அவசியம். நாம் நம்முடைய உரையாடல்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவோமேயாயின் அது நம் உரையாடல்களில் வரும் விவாதங்களைத் தவிர்த்துவிடும். பள்ளியில் மன அழுத்தத்தைத் தரும் தேர்வுக்குப் பின்னரும், ஒரு நாளின் கடின வேலைக்குப் பின்னரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவுகின்றது. குடும்ப நபர்களுக்கிடையேயும், நண்பர்களுக்கிடையேயும் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்போது. அந்த இடம் நாம் இங்கு நேசிக்கப்படுகின்றோம் என்று உணரக் கூடிய பாதுகாப்பான இடமாக மாறுகிறது.

உன்னுடைய வாழ்விலும் அதிக சிரிப்பை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உன்னுடைய ஆன்மாவிற்கு “நல்ல மருந்தைக்” கொடுக்க விரும்புகின்றாயா? ஒரு மகிழ்ச்சியான இருதயத்தை உருவாக்கிக் கொள்ளும்படி வேதாகமம் உன்னை ஊக்கப்படுத்துகின்றது என்பதை நினைவில் கொள்.

சுத்தமாக கழுவப்பட்டது

என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நீல நிற ஜெல் பேனா என்னுடைய டவலின் மடிப்புகளுக்குள் ஒளிந்து, துவைக்கும் எந்திரத்திற்குள் சென்று, உலர்ப்பானுக்குள் வந்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அவலட்சணமான நீலக்கறைகள் எல்லாத் துணிகளிலும் காணப்பட்டன. என்னுடைய வெண்மையான டவல்கள் பாழாகிவிட்டன. அதிலுள்ள கடினமான கறைகளை நீக்க எந்தவொரு நிறநீக்கியாலும் முடியாது.

நான் வெறுப்படைந்தவனாய் அந்த டவல்களை பழைய துணிகளோடு சேர்த்தபோது, பழைய ஏற்பாட்டில் எரேமியா தீர்க்கதரிசி, பாவத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி விளக்கியுள்ளது. என் நினைவிற்கு வந்தது. தேவனைத் தள்ளி விட்டு, விக்கிரகங்களிடம் திரும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவின்மீது நீங்காதகறையை ஏற்படுத்திக் கொண்டனர் (எரே. 2:13). “நீ உன்னை உவர் மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கும்” என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கின்றார் (வச. 22). தங்கள் பாவங்களால் ஏற்பட்ட கறையை நீக்க அவைகளால் கூடாமற்போயிற்று என்கின்றார்.

நம்முடைய பாவக் கறையை நீக்க நாம் எடுத்துக் கொள்ளும் சுய முயற்சிகள் யாவும் வீணானவை. ஆனால், நம்மால் முடியாததை இயேசு செய்து முடித்தார். அவருடைய சாவு மற்றும் உயித்தெழுதலின் வல்லமையால் அவர் நம்மை சுத்திகரிக்கின்றார். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7).

இந்த உண்மையை நாம் நம்புவதற்கு கடினமாயிருந்தாலும், உறுதியாகப் பற்றிக்கொள். இயேசுவால் நீக்க முடியாத பாவக்கறை ஒன்றுமேயில்லை. இயேசுவிடம் வரும் எவரிடமுமுள்ள பாவக் கறைகளை கழுவி சுத்திகரிக்க அவர் ஆவலாயிருக்கின்றார் (வச. 9). கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நாம், ஒவ்வொரு நாளும் விடுதலையோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்.