எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

நேர்மையான வெற்றி

கிழக்காசிய விளையாட்டுகளின் மாரத்தான் போட்டியில் சிங்கப்பூர் வீரர் ஆஷ்லி லூயி எல்லோரையும் முந்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால், ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்த அவர் தனக்கு முன் இருந்த வீரர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததால் பின்தங்கியதை உணர்ந்தார். அவர்களுடைய பிழையை தனக்கு சாதகமாக்கிகொண்டு ஆஷ்லி தொடர்ந்திருக்கலாம், ஆனாலும், அவருக்குள் காணப்பட்ட போட்டி நேர்மை மனப்பான்மை அப்படி வெல்வது ஒரு உண்மையான வெற்றியாய் இராது என்று உணர்த்திற்று. மற்றவர்களைவிட வேகமாய் ஓடி ஜெயிக்கவேண்டுமேயன்றி மற்றவர்களின் பிழையின் காரணமாக ஜெயிக்கக்கூடாது என்று நினைத்தார். தனக்குள் எழுந்த இவ்வுணர்வின் நிமித்தமாக தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தை சற்றே குறைத்து பின்னே வருபவர்கள் இணைந்துகொள்ள இடங்கொடுத்தார்.

பந்தயத்தின் முடிவில் தோல்வியை சந்தித்த ஆஷ்லி பதக்க வாய்ப்பை இழந்தாலும். தன் நாட்டு மக்களின் உள்ளத்தை வென்றார். அவருடைய நேர்மையுணர்வை பாராட்டி அவருக்கு ஒரு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது. கிறிஸ்தவன் என்பதற்கு இவருடைய ஒரு செயல் ஒரு சான்றாக அமைந்ததோடு, “இவரால் எப்படி இதைச் செய்யமுடிந்தது?” என்ற கேள்வியையும் அநேகருடைய மனதில் எழுப்பியிருக்கும்.

ஆஷ்லியின் இச்செயல் என்னுடைய நம்பிக்கையை, கிரியைகளின் மூலமாக வெளிப்படுத்த எனக்கு ஒரு சவாலாக அமைகின்றது. நல்லெண்ணத்துடன் அன்பையும் மன்னித்தலையும் வெளிப்படுத்தச் செய்யப்படும் சின்னசின்ன காரியங்களும் தேவனை மகிமைப்படுத்தும். இதனைத்தான் பவுல் எளியநடையில் உரைக்கிறார்: “…உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத்து 2:8).

பிறருக்கு நாம் செய்யும் நன்மையான கிரியைகள், ஆவியானவர் நமக்குள் இருப்பதால் நம்மால் வேறுபட்டு வாழமுடியும் என்பதை, உலகிற்கு வெளிப்படுத்தும். அவபக்தியையும் லெளகீக இச்சைகளையும் வெறுத்து, மக்களை தேவன்பால் திருப்பக்கூடிய ஒரு உத்தமமான வாழ்க்கை வாழ்ந்திட தேவன் நமக்கு கிருபையளிப்பார்”

இரட்டிப்பான வாக்குத்தத்தம்

பல ஆண்டுகளுக்கு முன்பு ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். அதிலிருந்து அவளால் சாப்பிடவும், குடிக்கவும் சரியாக விழுங்கவும் முடியவில்லை. அநேக அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகளின் பலனாக அவள் தன் உடல் பெலத்தை இழந்து, இப்பொழுது அவளின் தோற்றம். முன்பு அவள் எப்படியிருந்தாள் என்பதின் ஒரு நிழலாகக் காட்சியளிக்கின்றாள்.

ஆனால், இன்னமும் ரூத்தால் தேவனைத் துதிக்க முடிகிறது. அவளுடைய விசுவாசம் உறுதியாயிருக்கிறது. ஆனால், அவளுடைய மகிழ்ச்சி பிறரையும் பற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் அவள் தேவனையே சார்ந்திருக்கிறாள். தான் ஒரு நாள் முற்றிலும் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னை குணமாக்கும்படி ஜெபிக்கின்றாள். தேவன் அவளுடைய ஜெபத்திற்கு உடனேயோ அல்லது பிந்தியோ பதிலளிப்பார் என்பதில் நம்பிக்கையோடிருக்கின்றாள். எத்தனை அற்புதமான நம்பிக்கை!

ரூத்தினுடைய உறுதியான நம்பிக்கைக்கு காரணமென்னவெனின், தேவன் அவருடைய பெயரினால் நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்ற அறிவோடு மட்டுமன்றி, அவருடைய வாக்கை நிறைவேற்றும் வரை தன்னையும் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுள்ளதாக விளக்குகின்றாள். இது, தேவன் தம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, தங்கள் எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தேவனுடைய ஜனங்களின் நம்பிக்கையைப் போலிருக்கிறது (ஏசா. 25:1), (வச. 7). அவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார், அவர் ‘‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” (வ.8).

தேவன் தமக்குக் காத்திருக்கும் தம் பிள்ளைகளுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அருளுகின்றார் (வச. 4) அவர்களின் துக்கங்களில் அவர்களைத் தேற்றவும், சோதனையைச் சகிக்க பெலனையும், தேவன் அவர்களோடிருக்கிறார் என்ற உறுதியையும் தருகிறார்.

இதுவே நமக்குத் தரப்படுகின்ற இரட்டை வாக்குத்தத்தம் - ஒரு நாள் நம்மை விடுவிப்பார், அதனோடு ஆறுதலையும், பெலத்தையும், பாதுகாப்பையும் நம் வாழ்நாள் முழுவதும் தருகிறார்.

காணாமல் போனது, கண்டு பிடிக்கப்பட்டது

என்னுடைய மாமியார் எனது உறவினர் ஒருவரோடு கடைக்குச் சென்றபோது, வழி தவறிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் என் மனைவியும் பதறிப்போனோம். அம்மாவிற்கு நியாபக மறதியும் குழப்பமும் காணப்பட்டது. அவர்களால் என்ன செய்கிறார்களென்பதைச் சொல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருப்பார்களா? அல்லது ஏதாவது ஒரு பஸ்ஸில் அது அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றெண்ணி ஏறியிருப்பார்களா? மிக மோசமான காட்சிகளின் எண்ணங்கள் எங்கள் மனதில் வட்டமிட, நாங்கள் தேவனிடம், தயவுகூர்ந்து அவர்களைக் கண்டுபிடித்துத் தாரும் என்று கதறிக் கொண்டே தேட ஆரம்பித்தோம்.

சில மணிகளுக்குப் பின்னர் பல மைல்களுக்குப்பால் ஒரு சாலையின் வழியே தடைபட்டு என் மாமியார் நின்றதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் படியான ஆசீர்வாதத்தை தேவன் எங்களுக்குத் தந்ததை நினைத்துப் பார்த்தோம். பல மாதங்களுக்குப் பின்னர், அவர்களது எண்பதாவது வயதில், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் திரும்பினார்கள்.

இயேசு மனிதர்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிட்டு இந்த எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்த பின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு... தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடே கூட சந்தோஷப்படுங்கள் என்பான்
(லூக். 15:4-6).

மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எண்ணி எல்லாம் இருக்கின்றனவா என உறுதிப்பண்ணிக் கொள்வார்கள். அதே போலவே இயேசுவும் தன்னை ஒரு மேய்ப்பனாக பாவித்து ஆடுகளாகிய நாம் ஒவ்வொருவரையும் - இளம் வயதினரோ, முதியவர்களோ எல்லாரையும் அவர் அதிகமாய் மதிக்கிறார். நாம் நம் வாழ்வில் நம் நோக்கத்திற்காக தேடி அலைந்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு அது இன்னமும் பிந்தி விடவில்லை. தேவன் நம்மை அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்.

அனைவரையும் நேசித்தல்

சிங்கப்பூர் தீவில் (இருபத்தைந்து மைல் நீளமும், பதினைந்து மைல் அகலமும் கொண்டது) மிகவும் அரிதான விசாலமான வெளியில் அமையப் பெற்ற ஒரு தேவாலயத்தில் நான் ஆராதித்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நாட்டில் வந்து பணி புரியும் வெளி நாட்டினர் ஒவ்வொரு ஞாயிறும் ஆலய வளாகத்தில் வந்து கூடுவதை வழக்கமாக்கியுள்ளனர். எங்களில் சிலர் இந்த பார்வையாளர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் எரிச்சலடைந்து, கூச்சலிட்டனர். வேறு சிலர், அந்த ஆலய வளாகத்தை விட்டுச் செல்லாமல் இருந்து, இது நம்முடைய விருந்தோம்பலை அந்நிய கூட்டத்தினருக்குக் காட்டக் கூடிய ஒரு தெய்வீக வாய்ப்பாகக் கருதினர்.

இஸ்ரவேலரும் இத்தகைய ஒரு பிரச்சனையை அவர்கள் காலத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்கள் புதிய தேசத்தில் குடியமர்ந்த போது தங்கள் அருகிலிருக்கும் அந்நியரோடு எப்படி பழகுவது என்பதான ஒரு பிரச்சனை எழுந்தது. ஆனால் தேவன் அவர்களிடம் உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனைச் சுதேசி போல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்புகூருவீர்களாக (லேவி. 19:34) என்று கட்டளையாகச் சொன்னார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த அநேக சட்டங்களில், அந்நியரைக் குறித்து அவர்களை தவறாக நடத்தவோ அல்லது ஒடுக்கவோ கூடாது என்றும் அவர்களை நேசித்து உதவுவீர்களாக என்றும் சொல்லுகிறார் (யாத். 23:9 ; உபா. 10:19). நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயேசுவும் இதனையே செய்யும்படி கட்டளையாகக் கொடுக்கின்றார். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கட்டளையிட்டார் (மாற். 12:31).

நாம் இப்புவியில் சிலகாலம் தங்கிச் செல்லும் பிரயாணிகள் என்பதை நினைத்து, தேவனின் அன்பு இருதயத்தைப் போல, பிறரையும் நம்மைப் போல நேசிப்போம். தேவன் நம்மை தம்முடைய சொந்த ஜனங்களாக நேசித்து நடத்துகின்றாரே.

மீட்டெடுக்கப்பட்ட தோல்விகள்

அழைக்கப்பட்ட ஒரு இசைக் குழுவினர் எங்கள் ஆலயத்தில் துதி ஆராதனையை நடத்தினர். அவர்கள் கிறிஸ்துவுக்காக கொண்டிருந்த வைராக்கியம் அனைவரையும் அசைத்தது. அவர்களின் உற்சாகத்தை எங்களால் உணரவும், பார்க்கவும் முடிந்தது.

அந்த இசை கலைஞர்கள் தாங்கள் அனைவரும் முன்னாள் கைதிகள் என வெளிப்படுத்தினார்கள். உடனே அவர்களின் பாடல்கள் எங்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், அவர்களின் துதியின் வார்த்தைகள் அவர்களுக்குள் அதிக அர்த்தமுள்ளதாக இருப்பதையும் உணர்ந்தேன். உடைந்து போன வாழ்வு மீட்டெடுக்கப்பட்டதற்கு சாட்சியாக அவர்களின் ஆராதனை இருந்தது.

இந்த உலகம் வெற்றியை அரவணைத்துக் கொள்ளும். ஆனால், கடந்துவந்த தோல்விகள் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். எத்தனை முறை நாம் தோல்வியடைந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற நிச்சயத்தை நமக்குத் தருகிறது. ஏபிரெயர் 11ல் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாச வீரர்களின் பட்டியலுக்கு ‘தேவனால் மீட்டெடுக்கப்பட்ட தோல்விகள்’ என தலைப்பிடலாம் என போதகர் ஃஹரி இன்ரிக் கூறுகின்றார். ‘இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வாழ்க்கையில் குறையில்லாதவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், தேவன் அவர்களின் தோல்விகளை மறுசீரமைப்பு வேலையில் இருக்கிறார்… இதுதான் தேவக்கிருபையின் மிகப்பெரிய அடிப்படை கொள்கை எனவும் கூறுகிறார்.

சங்கீதம் 145 தருகின்ற ஆறுதலையும் தேவனுடைய அதிசயமான கிரியைகளையும் (வச. 5,6) அவருடைய ராஜ்ஜியத்தின் மகிமைப் பிரதாபத்தையும் (வச. 11) நான் மிகவும் நேசிக்கிறேன். இது அவருடைய மனதுருக்கத்தையும் (வச. 8,9) உண்மையையும் (வச. 13) கீழே விழுந்தவர்களை துக்கிவிடுகிற அவருடையை பண்பையும் (வச. 14) கூறுகிறது. ஆம், உண்மையாகவே அவர் நம்மை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

நீங்கள் இதற்குமுன் தோல்வியடைந்ததுண்டா? ஆம், நாம் அனைவரும் தோல்வியடைந்திருக்கிறோம். நீங்கள் மீட்டெடுக்கப்பட்டு விட்டீர்களா? அவரால் மீட்டெடுக்கப்பட்ட நாம் அனைவரும் அவருடைய கிருபையின் சாட்சிகள்.

தேவனுக்குத் தெரியும்

வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களால் துக்கத்தோடிருந்த ஒரு வாலிபப் பெண்ணை டீப்ட்டி ஆலயத்தில் சந்தித்தபொழுது. இவளது இருதயம் அவள்மேல் மனதுருகி, ஏதாவது உதவி செய்ய நினைத்தாள். ஒவ்வொரு வாரமும் அவளுக்கு ஆலோசனை கூறி அவளோடு ஜெபித்தாள். டீப்ட்டி அவளுக்கு நம்பிக்கையூட்டும் முன்மாதிரி. சபைத்தலைவர்கள் டீப்ட்டி எடுத்த முயற்சிகளை அறியாமல், அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆலோசகரை நியமிக்க தீர்மானித்தார்கள். ஒருவருமே அந்தப் பெண்ணைக்குறித்து அக்கறை கொள்ளவில்லையென்றும் குறை கூறினார்கள்.

தனக்கு எந்தப் புகழையோ பேரையோ டீப்ட்டி விரும்பவில்லையென்றாலும், அவளுக்குள் ஒரு சோர்வு உண்டானதை அவளால் தடுக்க முடியவில்லை. தான் எதுவுமே செய்யாததுபோல் இருக்கிறது என்று என்னிடம் கூறினாள்.

ஒருநாள், அந்த வாலிபப் பெண் டீப்ட்டியைக் சந்தித்து, ‘நீங்கள் எனக்களித்த ஆறுதலுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்றாள். டீப்ட்டி உற்சாகமடைந்தாள். “நீ அவளுக்காகச் செய்ததை அறிந்திருக்கிறேன்” என்று தேவனே சொல்வதுபோலிருந்தது. டீப்ட்டி அந்தப் பெண்ணை தொடர்ந்து ஒழுங்காக சந்தித்து வந்தாள்.

சில வேளைகளில் நமது முயற்சிகளை ஒருவரும் கவனிக்காமலும் பாராட்டமலும் இருந்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், நாம் செய்வதை தேவன் அறிந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. மற்றவர்கள் பார்க்காததை தேவன் பார்க்கிறார். மனிதரின் புகழ்ச்சிக்கென்று செய்யாமல், தேவனுக்கென்றே செய்யும் பொழுது, தேவன் நம்மேல் பிரியப்படுகிறார்.

ஆதனால்தான் இயேசு ரகசியமாய் தர்மம் செய்வதை உதாரணமாய் சொல்லியிருக்கலாம், “அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:4) என்றார். மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாமலும் பாராட்டாமலும் இருந்தாலும் பரவாயில்லை; நாம் தேவனுக்கும் பிறருக்கும் உண்மையாய்; ஊழியம் செய்வதை தேவன் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம்.

வாழ்விற்காய் பயிற்சிபெறுதல்!

நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கான எனது பயிற்சி சரியாக நடக்கவில்லை. சமீபத்தில் நான் ஓடிய ஓட்டம் மிகுந்த ஏமாற்றமளித்தது. பாதி தூரம் நடந்துதான் சென்றேன். ஒரு சமயத்தில் கீழே உட்கார்ந்தும் விட்டேன். ஒரு குட்டிப் போட்டியில் தோற்றுவிட்டதைப் போல் உணர்ந்தேன்.

பயிற்சியின் முழுக் குறிப்பே இதுதான் என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன். ஒரு பயிற்சியின் போது வெற்றிபெறுவதோ, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெறுவதோ முக்கியமில்லை. எனது சகிப்புத்தன்மையை மேம்படுத்த அதன் வழியாகத் திரும்பத் திரும்ப நான் கடந்து செல்ல வேண்டும்.

நீங்கள் இப்போது சந்திக்கிற சோதனையைத் குறித்து நீங்கள் கஷ்டமாய் உணரலாம். நமது ஆவிக்குரிய தசைநார்களையும் நமது சகிப்புத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வண்ணமாக இவ்வித அனுபவங்களைத் தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவைப் போல் இன்னும் சற்று அதிகமாக நாம் மாறும் வண்ணம் அவர் மீது சார்ந்திருக்க அவர் நமக்கும் போதிக்கிறார். நாம் பரிசுத்தமாகும்படி அவர் நம்மை சந்திக்கிறார்.

இஸ்ரவேல் மக்களை அக்கினியினாலும் தண்ணீரினாலும் தேவன் சுத்திகரித்தற்காக சங்கீதக்காரன் அவரைத் துதிப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை (சங். 66:10-12). தேவன் அவர்களைப் பராமரித்து பாதுகாத்தது மட்டுமல்ல, மிகுந்த செழிப்பான பகுதிக்கு அவர்களைக் கொண்டு சென்றார். இடையில் அவர்களை சுத்திகரித்தார்.

சோதனையினுடாகச் செல்கையில், தேவனுடைய பெலத்திலும் இடைவிடாத பாதுகாப்பிலும் நாம் சார்ந்துகொள்ள முடியும். வாழ்வில் நமது கடினமான நேரங்களினூடாக அவர் நம்மை சுத்திகரிக்கிறார்.

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

தகப்பனாரைப் போலவே

ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் பார்த்து, அவர்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்ய பார்ப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கும் காரியமாகும். காரில் குழந்தைகள் ஆசனத்தில், பெல்ட் மாட்டப்பட்டு அமர்ந்திருக்கும் சிறுவன், அவனது கற்பனையில் காரின் ஸ்டீயரிங்கை இயக்குவதுபோல எண்ணிக்கொண்டே, காரை ஓட்டுகிற தனது தகப்பனார் என்ன செய்கிறார் என்று இடையிடையே உன்னிப்பாகக் கவனித்து செயல்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

நான் சிறுவனாக இருந்தபொழுது அவ்வாறு செய்ததை இப்பொழுது நினைவுகூருகிறேன். என் தகப்பனார் செய்ததுபோலவே, நானும் செய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நான் அவரைப் போலவே செயல்பட்டதைப் பார்த்த என் தகப்பனார் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது நிச்சயம்.

இழந்து போனவர்களைத் தேடி, தேவையானவர்களுக்கு உதவியளித்து, வியாதியஸ்தர்களுக்கு சுகம் அருளி, பிதா செய்ததையே அவரது அன்பின் குமாரனும் செய்ததைப் பார்த்த தேவனும், அதைப் போலவே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவா. 5:19) என்று இயேசு கூறினார்.

“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து… நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” என்று (எபே. 5:1,2) நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலவே தொடர்ந்து வளரும்பொழுது, பிதா நேசிப்பது போலவே நாமும் நேசிக்கவும், அவர் மன்னித்ததுபோல மன்னிக்கவும், அவர் இரங்குவதுபோல இரங்கவும், அவருக்கு பிடித்தமான வழியில் வாழவும் செய்ய முயற்சிப்போம். ஆவியின் வல்லமையினால், அவரது செயல்களைப்போலவே நாமும் செய்வது மிக மிக மகிழ்ச்சியான காரியமாகும். ஏனெனில் அதன் பலன் பிதாவின் அன்பும், கனிவும் நிறைந்த புன்சிரிப்பாகும்.