எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

வேதனையில் ஒர் நோக்கமுண்டோ?

தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. 'தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினாள்.

நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.

பெரிய செய்தி!

எங்களுடைய உள்ளுர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி குறுகியதாயிருந்தாலும் இருதயத்திற்கு இதமாய் இருந்தது. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சிறைச்சாலையில் வாழும் ஒரு குழுவினருக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிப்படையாகச் சந்திக்கலாம் என்பதே அந்த வாய்ப்பு. சிலர் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. ஒரு கண்ணாடித் தகட்டின் வழியே பேசிக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் நேசிக்கும் நபரைத் தொட்டு பிடித்துக் கொள்ளலாம். அந்த குடும்பங்கள் நெருக்கமாக வந்த போது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்களுடைய உள்காயங்கள் ஆற ஆரம்பித்தன.

அநேக வாசகர்களுக்கு இது வெறும் கதையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த குடும்பங்களுக்கு, அது ஒரு வாழ்வை மாற்றும் நிகழ்வு. சிலருக்கு அது மன்னிப்பதற்கும் மனம் பொருந்தலுக்கும் ஆரம்பமாயிருந்தது.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்ததும், நம்மோடு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதும் அவருடைய குமாரன் மூலமாகவே நடைபெற்றது. இது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட ஓர் உண்மை. அந்த செய்தித் தாளில் வெளியான மனம் பொருந்துதலின் செய்தி, இயேசுவின் தியாகத்தின் மூலம் இவ்வுலகிற்கு மட்டுமல்ல, உனக்கும் எனக்கும் கொடுத்துள்ள ஒப்புரவாகுதலின் மிகப் பெரிய செய்தியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.

நாம் நடப்பித்த ஏதோ ஒரு பாவச் செயலின் குற்ற உணர்வினால், நாம் மேற்கொள்ளப்பட்டவர்களாயிருக்கும் நேரத்தில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய செய்தி அது தேவனுடைய அளவற்ற இரக்கம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே அந்த செய்தி. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு மரித்தார். எனவே நாம் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவர்களாகத் தந்தையிடம் வருவோம். இயேசு நம்மை, 'உறைந்த மழையிலும் வெண்மையாய்" (சங். 51:7) நம்மைக் கழுவுகின்றார். நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியற்றவர்களென நினைக்கும் நேரங்களில் நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே காரியத்தை நாம் பற்றிக் கொள்வோம். அது தேவனுடைய கிருபையும், மாறாத மிகுந்த இரக்கமுமே (வச. 1).

ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நற்கிரியைகள்

வெளிநாட்டில், ஒரு தெரு வழியே நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, கம்பீரமான ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்த போது நாங்கள் பயத்தால் பின்வாங்கினோம். எங்களுடைய விடுமுறை நாட்கள் மோசமாகப் போய் கொண்டிருந்தது. சிலர் எங்களிடம் கத்தினர், எங்களை ஏமாற்றினர், அநேக முறை அச்சுறுத்தலையும் சந்தித்தோம். ஒரு வேளை மீண்டும் எங்களை கீழே தள்ளப் போகின்றாரா? என்ன ஆச்சரியம்! அந்த மனிதன் அவருடைய பட்டணத்தின் சிறந்த காட்சியை எங்கிருந்து பார்த்தால் தெளிவாகக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர், அவர் எங்களுக்கு ஒரு சாக்லேட் கட்டியைக் கொடுத்து விட்டு சிரித்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த சிறிய செயல் அந்த நாளையும் எங்களுடைய முழுபயணத்தையும் மகிழ்ச்சியாக்கியது. எங்களை மகிழச் செய்த அந்த மனிதனையும், தேவனையும் நன்றியோடு நினைக்கச் செய்தது.

அந்த மனிதன் இரு அந்நியர்களுக்கு உதவும்படி அவரைத் தூண்டியது யார்? அவர் அந்த நாள் முழுவதும் சாக்லேட் கட்டிகளோடு, யாரிடமாகிலும் கொடுத்து ஆசிர்வதிக்கும்படி திரிந்து கொண்டிருந்தாரா?

ஒரு சிறிய நற்கிரியை, பெரிய மகிழ்ச்சியைத் தந்து, ஒருவரை தேவனுக்கு நேராக வழிநடத்த முடிகிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். வேதாகமம் நற்கிரியைகள் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது (யாக். 2:17,24). அது ஒருவேளை சவால் மிக்கதாகத் தோன்றினாலும் தேவன் நம்மை இத்தகைய காரியங்களைச் செய்யும்படி அவர் நமக்கு பெலனளிக்கிறார், நமக்கு உறுதியளிக்கின்றார். ''அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்" (எபே. 2:10).

இன்று யாரோ ஒருவருக்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் தேவையென்பதையறிந்து தேவன் நம்மை அவர்களோடு தொடர்பு கொள்ளச் செய்கின்றார். பிறருக்கு உதவும்படி நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்குக் கீழ்படிந்து செயல்படுதலே.

தேவன் “இல்லை” எனச் சொல்லும்போது

நான் பதினெட்டு வயதாயிருந்த போது, சட்டப்படி கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்தவர்களெல்லாரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வயதினராக இருந்ததால், நான் எனக்கொரு இலகுவான வேலைகிடைக்கும்படி தீவிரமாக ஜெபித்தேன். ஓர் எழுத்தர், அல்லது ஓட்டுனர் என ஓர் எளிய வேலையை எதிர்பார்த்தேன். நான் பலசாலியல்ல, எனவே அங்குள்ள கடினமான போர்க்கால பயிற்சிகளில் எனக்கு விலக்கு கிடைக்குமென நம்பினேன். ஒருநாள் மாலை வேளையில் நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கத்திலிருந்த ஒரு வசனம் என்னை ஈர்த்தது. “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9).

என் இருதயம் சோர்ந்தது. ஆனால், அப்படி இருந்திருக்கக் கூடாது. தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். ஒருவேளை எனக்கு கஷ்டமான வேலை கொடுக்கப்பட்டாலும் தேவன் எனக்குத் தேவையான பெலத்தைத் தருவார்.

நான் இராணுவக் கவசமணிந்து தரைப்படையில் சேர்ந்தேன். எனக்கு விருப்பமில்லாத வேலையைச் செய்தேன். இப்போது தான் என் முந்திய காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். தேவன் நான் விரும்பியதை எனக்குத்தரவில்லை. ஆகையால் தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும், அநுபவமும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெலப்படுத்தியது. திடமான மனிதனாக ஜீவிக்க எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

ஏசாயா 25:1-5 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய தண்டனையையும் அதன்பின், அவர்களின் விடுதலையையும் உரைத்தபின், தேவனுடைய திட்டங்களுக்காக அவரைப் போற்றுகின்றார். ஏசாயா குறிப்பிட்டுள்ள அத்தனை அதிசயமான காரியங்களும்” வெகுகாலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டன (வச. 1) ஆயினும், அவை நிறைவேற சில கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

நாம் தேவனிடம் ஏதோவொரு நல்ல காரியத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒருவரின் இக்கட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறு கேட்கும்போது, இல்லையென பதிலளிக்கப்படுமாயின், அதனைப் புரிந்து கொள்வது கடினமாகத்தானிருக்கும். அப்பொழுதுதான் நாம் தேவனுடைய நல்லதிட்டத்தின் உண்மையை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் ஏனென்று நமக்குப் புரியாது. ஆனால், நாம் தேவனுடைய அன்பு, நன்மை, மற்றும் உண்மையின் மீது நம்பிக்கையோடிருப்போம்.

ஒரு தாயின் அன்பு

சூ சிறுமியாக இருந்தபோது, அவள் பெற்றோர் விவாகரத்து செய்தார்கள். அவள் யார் பாதுகாப்பில் இருப்பது என்பதில் சட்டச் சிக்கல்கள் எழுந்ததால், சில காலம் அவள் ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க நேர்ந்தது. வயதில் பெரிய சிறுவர்கள் அவளைக் கேலி செய்து, துன்புறுத்தியபோது, தனிமையாக, கைவிடப்பட்டதாக உணர்ந்தாள். அவள் தாய் அவளை மாதம் ஒரு முறை மட்டுமே வந்து பார்த்தாள். அவள் தந்தையை வெகு அரிதாகவே பார்த்தாள். ஆனால் அந்த இல்லத்தின் விதிகளின்படி அவள் அடிக்கடி வந்து தன் மகளைப் பார்க்கமுடியாது என்ற விவரமும், சூ கண்ணில் தென்படுகிறாளா என்று பார்க்க அவள் தாய் தினமும் மதில் சுவர் அருகே நின்ற விவரமும் பல வருடங்கள் கழித்துத்தான் அவள் தாய் சொல்லி சூ தெரிந்துகொண்டாள். “நீ நன்றாக இருக்கிறாயா என்று தெரிந்துகொள்ள வெளியே நிற்பேன். சில சமயம் நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்ப்பேன்,” என்று அவள் தாய் தெரிவித்தாள்.

சூ இதை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, தேவனின் அன்பை எனக்கு அது புரியவைத்தது. நம்முடைய போராட்டங்கள் நடுவே சில சமயம் நாமும் தனிமையாக, கைவிடப்பட்டவர்களாக உணர்கிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் கண்காணிக்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் (சங். 33:18). நம்மால் அவரைப் பார்க்க முடியாது என்றாலும், அவர் நம் அருகே இருக்கிறார். நாம் எங்கே சென்றாலும், அன்பான பெற்றோரைப்போல அவரது கண்களும், இருதயமும் நம்மை கவனிக்கின்றன. ஆனால், சூவின் தாயைப்போல அல்லாமல், நமக்காக எந்த நேரமும் அவர் உதவ முடியும்.

தேவன் தம் பிள்ளைகளைத் தப்புவிப்பதையும், காப்பாற்றுவதையும், கனப்படுத்துவதையும் பற்றி சங்கீதம் 91 கூறுகிறது. அவர் ஒரு புகலிடத்திற்கும் மேலானவர். வாழ்கையின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நாம் பயணப்படும்போது. வல்லமையான தேவன் நம் வாழ்வில் செயல்படுகிறார், நம்மைக் கண்காணிக்கிறார் என்ற உண்மையில் நாம் ஆறுதல் அடையலாம். “(உனக்கு) மறு உத்தரவு அருளிச்செய்வேன்” என்று கூறுகிறார். “ஆபத்தில் உன்னோடிருந்து, உன்னைத் தப்புவிப்பேன்” (வச. 15).

கட்டுவதை நிறுத்தவேண்டாம்!

தன் அலுவலகத்தில் ஒரு புதிய பொறுப்பு தரப்பட்டபோது, அதை தனக்கு கிடைத்த தேவ ஈவாக சைமன் நினைத்தார். அதைக்குறித்து ஜெபித்து, ஆலோசனை பெற்றபோது, இன்னும் பெரிய பொறுப்புகளைத் தருவதற்காக இந்த வாய்ப்பை தேவன் ஏற்படுத்தித் தருவதாக நினைத்தார். எல்லாம் சரியாக நடந்தது. அவரது மேலதிகாரியும் அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் விரைவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குக் கிடைத்த பணி உயர்வை விரும்பாத உடன் வேலை பார்க்கும் சிலர் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். தன் முயற்சிகளைக் கைவிட நினைத்தார்.

தேவனின் ஆலயத்தைக் கட்ட இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, எதிரிகள் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கவும், அவர்களை பயமுறுத்தவும் முயன்றனர் (எஸ்றா 4:4). முதலில் வேலையை நிறுத்திய இஸ்ரவேலர்கள், ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகள்மூலம் தேவன் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் தொடர்ந்தனர் (4:24-5:2).

மீண்டும் எதிரிகள் அவர்களை தொந்தரவு செய்தனர். ஆனால் இந்த முறை “தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருப்பதை” (5:5) அறிந்து, தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தேவனின் ஆலோசனைகளை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டு, எதிர்ப்புகள் நடுவே அவர் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவாலயத்தைக் கட்டி முடிக்க உதவும்படி தேவன் பெர்சிய ராஜாவை ஏவினார்
(வச. 13-14).

அதேபோல், சைமனும் தான் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டுமா அல்லது வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று வழிநடத்துதலைப் பெற தேவனின் ஞானத்தை சார்ந்திருந்தார். அதே அலுவலகத்தில் தொடர தேவன் வழிநடத்தியதால், அங்கு தொடர்ந்து பணிபுரிய தேவனின் பெலனை நம்பினார். சிறிதுகாலம் சென்றபின், அவர் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.

நாம் தேவனைப் பின்பற்றும்போது, அவர் நம்மை வைக்கும் இடத்தில் நாம் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம். அதுபோன்ற சமயங்களில்தான் நாம் அவரை சார்ந்திருக்க வேண்டும். அவர் நமக்கு ஆலோசனை சொல்லி நம்மை வழிநடத்துவார்.

எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுதல்

பல ஆண்டுகளாக தன் பாடங்களைப் படிக்க அதிக சிரமப்பட்ட ஏஞ்சி அவள் படித்துக்கொண்டிருந்த மிகச்சிறந்த, பிரத்தியேக பள்ளியில் இருந்து, ஒரு “சாதாரண” பள்ளிக்கு மாற்றப்பட்டாள். அதிக போட்டி மிகுந்த சிங்கப்பூரின் பள்ளிக்கல்வியில், “நல்ல” பள்ளியில் படிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றாலும், இந்த சம்பவத்தை பலர் ஒரு தோல்வியாகக் கருதுவார்கள்.

ஏஞ்சியின் பெற்றோர் அதிக ஏமாற்றம் அடைந்தார்கள். ஏஞ்சியும் தன் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டதாக உணர்ந்தாள்.  ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்த சில நாள்களிலேயே சாதாரண பிள்ளைகள் மத்தியில் படிப்பது எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். “அம்மா, இதுதான் எனக்கு ஏற்ற இடம்,” என்றாள். “இங்குதான் என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!”

இயேசு சகேயுவின் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தபோது, அந்த ஆயக்கார தலைவர் எப்படி உணர்ந்திருப்பார் (லூக்கா 19:5) என்பதை ஏஞ்சி குறித்த சம்பவம் எனக்கு நினைவுபடுத்தியது. தங்களிடம் குறை உண்டு என்றும் தங்களுக்கு கடவுளின் கிருபை பெற தகுதி இல்லை என்றும் உணர்ந்தவர்களுடன் சாப்பிடுவதை கிறிஸ்து விரும்பினார். நம்மைக் கண்டுகொண்டு, நாம் இருக்கிறபடியே நம்மை நேசிக்கும் இயேசு, அவரின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் பூரணத்துவத்தைத் தருவதாக நமக்கு உறுதி அளிக்கிறார். அவர் கிருபையினால் மட்டுமே நாம் மாசற்ற முழுநிறைவைப் பெறமுடியும்.

கடவுளின் நேர்த்தியான தன்மையிலிருந்து நான் குறைவாகவே காணப்படுகிறேன் என்பதை நான் அறிவதால், பல வேளைகளில் என் ஆவிக்குரிய பயணம் ஒரு கடினமான பயணமாகவே இருக்கிறது. நாம் இருக்கிறபிரகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம். ஏனென்றால், நாம் இயேசுவைப் போல மாற, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பண்படுத்துகிறார்.

முதலில் கர்த்தரிடம் கேட்பது

திருமணமான புதிதில், என் மனைவியின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இரவில் வீட்டில் அமைதியாக சாப்பிடுவதை விரும்புவாளா அல்லது ஒரு ஆடம்பர உணவகத்தில் சாப்பிட விரும்புவாளா? என் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை ஒத்துக்கொள்வாளா அல்லது வார இறுதி நாட்களில் அவளுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளா? ஒருமுறை, நான் ஊகித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, “உன் விருப்பம் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.

 

“எனக்கு எதுவானாலும் சம்மதமே,” என்று புன்முறுவலோடு பதில் சொன்னாள். “என்னிடம் கேட்டதே மகிழ்ச்சி,” என்றாள்.

 

சில சமயங்களில், தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள தீவிர ஆர்வம் காட்டினேன். எந்த வேலையில் சேர்வது என்று முடிவெடுப்பதை உதாரணமாக கூறலாம். வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் தெளிவான பதிலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தெளிவாக இருந்த ஒரு பதில் என்னவென்றால்: நான் கர்த்தரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்து, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதே (சங். 37:3-5).

 

கர்த்தரின் வழிகளை நமது வழிகளுக்கு முன்பாக முதன்மைப்படுத்தும்போது, நம் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதாவது தவறாக, ஆண்டவருக்கு விருப்பமில்லாத நமது தேர்வுகளை விட்டுவிடவேண்டும். நெறியற்ற, தேவ பக்தியற்ற, அவருடன் நமக்கு இருக்கும் உறவை பாதிக்கக்கூடிய ஒன்றாக அது இருக்கலாம். மீதியுள்ள தேர்வுகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்றால், அவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்பின் பிதா நம் இருதயத்தின் வேண்டுதல்களைத் தர விரும்புகிறார். அது அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும் இருதயமாய் இருக்க வேண்டும்
(வச. 4).

கொடுப்பதில் மகிழ்ச்சி

அது ஒரு சோர்வுக்குள்ளான வாரம். நான் எதிலும் ஆர்வமில்லாதவனாகவும், சலித்தும் காணப்பட்டேன். அது ஏனென்றும் எனக்குத் தெரியவில்லை.

அந்த வாரக் கடைசியில் என்னுடைய அத்தை ஒருவருக்கு சிறு நீரகம் செயலிழந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் அவர்களைப் போய் பார்க்க வேண்டும், ஆனால், நான் அதனைத் தள்ளிப்போட நினைத்தேன். ஆயினும் நான் என்னைத் திடப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் அவர்களுடைய இடத்துக்குச் சென்று, அவர்களோடு உணவருந்தி, பேசிக் கொண்டிருந்துவிட்டு, இணைந்து ஜெபித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப்பின் வந்தேன். பல நாட்களாக இருந்த சோர்வு நீங்கியவனாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, பிறர் மீது கவனம் செலுத்திய போது என்னுடைய உள்ளத்தின் சோர்வு அகன்றது.

பிறருக்குக் கொடுக்கும் போது, அதைப் பெற்றுக் கொள்பவரின் நன்றியுணர்வைக் காணும்போது, கொடுப்பவரின் மனதிற்கு, அது நிருப்தியைக் கொடுக்கும் என உளவியலாளர் கூறுகின்றனர். மனிதர்கள் தாராளமாய் கொடுப்பதில் சிறந்தவர்கள் என சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.

எனவே தான், தெசலோனிகேயர் சபையின் விசுவாசக் குடும்பத்தினரைப் பவுல், “பலவீனரைத் தாங்குங்கள்” (1 தெச. 5:14) என ஊக்குவிக்கின்றார். முன்னதாக இயேசுவின் வார்த்தைகளான, “ வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) என்பதையும் பவுல் குறிப்பிடுகின்றார். ஒரு வேளை இது பொருளுதவி செய்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் கொடுப்பதையும் இது குறிக்கும்.

நாம் கொடுக்கும் போது, தேவன் அதை எவ்வாறு கருதுவார் என்பதை நம்மால் உணரமுடியும். ஏன் தேவன் நம்மீது இத்தனை அன்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய மகிழ்ச்சியிலும், அவர் நம்மை ஆசீர்வதிப்பதால் அடையும் திருப்தியிலும் நாமும் பங்கு பெறுகின்றோம். நான் என்னுடைய அத்தையை மீண்டும் சீக்கிரத்தில் போய் பார்ப்பேன்.