எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லாரன்ஸ் டார்மனிகட்டுரைகள்

தேவனின் நன்மைகளுக்காகத் துதியுங்கள்

எங்களது வேத ஆராய்ச்சி குழுவிலுள்ள ஒருவர் ‘‘நாம் நம்முடைய சொந்த சங்கீதத்தை எழுதலாமே!” என்று கூறினார். ஆனால் எல்லாருக்கும் எழுதும் திறமையில்லையே என சிலர் எதிர்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கத்தையளிக்க அவர்களும் எழுதுவதற்கு இசைந்தனர். ஒவ்வொருவரும் தேவன் அவரவர் வாழ்வில் செய்த செயல்களை விவரித்துப் பாடலொன்றினை எழுதினோம். சோதனைகள், பாதுகாப்பு, அன்றன்று தேவைகளைப் பெறல், வேதனைகள், கண்ணீர் ஆகியவற்றிலிருந்து வேதனைகளைத் தாங்கிய செய்திகள் வந்து எங்கள் சங்கீதங்களாயின. சங்கீதம் 136 போன்று, ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்தின.

நம் அனைவருக்குமே தேவனுடைய அன்பினை விளக்கக்கூடிய அனுபவங்கள் உண்டு. அவற்றை நாமும் எழுதவோ, பாடவோ அல்லது சொல்லவோ முடியும். சிலருக்கு அவர்களின் அனுபவம் ஒரு நாடகம் போன்றதாகவோ அல்லது சங்கீதம் 136ல் கூறியுள்ளபடி தேவன் தம்முடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததையும், தங்கள் பகைவர்களை மேற்கொண்டதையும் நினைத்துப் பார்ப்பதைப் போன்றிருக்கும் (வச. 10-15) மற்றவை தேவனுடைய மகத்துவமான படைப்புகளை விளக்குகின்றன. வானங்களை அவருடைய ஞானத்தினால் உண்டாக்கினார்... தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார்... பெரிய சுடர்களை உண்டாக்கினார். பகலில் ஆளச் சூரியனைப் படைத்தார்.... இரவில் ஆளச் சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார் (வச. 5-9).

தேவன் யாரெனவும், அவர் என்னென்ன படைத்தார் என்பதையும் நினைக்கும் போது நாம் அவரைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் அவரை மகிமைப்படுத்தவும் ஆரம்பிப்போம். நாம் ‘‘ஒவ்வொருவரும் சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஆவியில் வெளிப்படும்
ஞானப்பாட்டுகளினாலும்” (எபே. 5:19) தேவன் செய்த நன்மைகளையும் என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பினையும் எண்ணி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். தேவனுடைய அன்பினைக் குறித்த உன்னுடைய அனுபவத்தை, அவரைப் போற்றிப் பாடும் சங்கீதங்களாக மாற்றி, என்றும் நிலைத்திருக்கும் அவருடைய நன்மைகளை எண்ணி மகிழ்ந்திரு.

பாடுகள் தரும் பெலன்

பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றதினால், வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த அவனுடைய குடும்பத்தினர் அவனை விரட்டிவிட்டார்கள். இருப்பினும், கிறிஸ்தவ சமுதாயம் அவனை வரவேற்று அவனுடைய படிப்பைத் தொடர்வதற்கு அவனுக்கு உற்சாகமளித்தது, அவனுடைய பொருளாதார தேவைகளையும் சந்தித்தது. பின்நாட்களில், அவனுடைய சாட்சி ஒரு பத்திரிக்கையிலே வந்ததால், அவன் கூடுதலாய் உபத்திரவப்பட்டான்.

ஆனாலும், அந்த வாலிபன் தன் குடும்பத்தினரை கவனியாமலில்லை. உடன்பிறந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாது என்று சட்டம்போட்டாலும், அவன் அப்பாவை பார்த்துப்பேச தவறியதில்லை. அப்பா நோயுற்றபோது, உறவினரின் அவமதிப்பை பொருட்படுத்தாமல், அவரை கவனித்துக் கொண்டான், விரைவில் குணமடையவும் ஜெபித்தான். அப்பா பூரண குணமடைந்ததும், அந்த மகன்மேல் குடும்பத்தார் அக்கறை காட்டத் தொடங்கினர். காலப்போக்கில், அவனுடைய அன்பான சாட்சி அவர்களுடைய உள்ளத்தை உருக்க ஆரம்பித்தது – குடும்பத்தில் சிலர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும் விரும்பினர்.

கிறிஸ்துவை பின்பற்றவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீர்மானம் நமக்கு சங்கடங்களை கொண்டுவரலாம். “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். என பேதுரு எழுதியிருக்கிறார்.,
(1 பேது. 2:19). நம்முடைய விசுவாசத்தின் காரணமாக பேதுரு கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்திடும்போது, “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (வச. 21) என்பதினாலேயே அப்படி செய்கிறோம்.

மற்றவர்கள் இயேசுவை அவமதித்தபோதும், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
(வச. 23). நம்முடைய பாடுகளில் இயேசுவே நமக்கு மாதிரியாக இருக்கிறார். பாடுகளில் பெலனடைய நாம் இயேசுவை அண்டலாம்.

தொடருகிறேன்

நான் பணிபுரியும் அலுவலக கட்டடத்தின் வெளிப்புறமாக நான் நடந்து சென்ற போது, கான்கிரீட்
தள ஓடுகளில் ஏற்பட்ட சிறிய பிளவில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து ஓடுகளில் அதிசயித்தேன். அது வளருவதற்கு ஏற்ற சூழல் இல்லாதிருந்த போதிலும் அந்தச் செடி தனக்கு ஒரு சிறிய பிடிமானம் கிடைத்ததைக் கொண்டு அந்த வறண்ட குறுகிய திறப்பில் செழித்து வளர்ந்துள்ளது. அந்த செடிக்கு மேல் பகுதியிலுள்ள குளிரூட்டியிலிருந்து (AC) நாள் முழுவதும் தண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை பின்னர் நான் கவனித்தேன். அந்தச் சுற்றுப்புறத்தில் வளருவதற்கு ஏற்ற சூழலில்லாத போதும், அந்த செடியானது தனக்குத் தேவையான உணவை மேலிருந்து வழிந்த நீரிலிருந்து பெற்றுக்கொண்டது.

கிறிஸ்தவ வாழ்வில் வளர்வது சில வேளைகளில் கடினமாகத் தோன்றலாம். ஆனால் நாம் தேவனோடு நம்மைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டோமேயாகில் தடைகளையெல்லாம் மேற்கொள்ள முடியும். நம்முடைய சூழ்நிலை, ஒருவேளை நமக்கு சாதகமற்ற சோர்வடையச்செய்யும் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நாம் நம் தேவனோடுள்ள உறவில் தொடரும் போது அந்த தனிமையானச் செடியைப் போன்று செழித்திருக்கலாம். இதுவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும்கூட, மோசமான கஷ்டங்களையும் சவால்களையும் அவர் சந்திக்க நேரிட்டபோதும் (2 கொரி. 11:23-27) அவர் தளர்ந்து போகவேயில்லை. கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். “மேலும்” பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி. 3:12)

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு என்று சொல்லுகிறார் (4:13). எனவே நாமும் நமக்கு பெலன் தருகின்ற கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தொடருவோம்.

தேவனை அணுகுதல்

ஜெபிக்க விரும்பிய ஒரு பெண் காலியாக இருந்த ஒரு நாற்காலியைப், பிடித்து இழுத்து அதன் முன் முழங்கால்படியிட்டாள். பின் கண்ணீரோடுகூட அவள் “எனது அன்பின் பரம தகப்பனே, இந்த நாற்காலியில் உட்காரும், நீங்களும், நானும் பேச வேண்டியது உள்ளது” என்று கூறினாள். பின்பு அந்தக் காலியான நாற்காலியைப் பார்த்து ஜெபித்தாள். அந்தக் காலியான நாற்காலியில் தேவன் அமர்ந்து அவளது ஜெபத்தைக் கேட்பதாக அவள் கற்பனை பண்ணியதின்மூலம், தேவனண்டை நெருங்கி வருவதாக அவன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள்.

சர்வ வல்லமையுள்ள தேவனோடு ஈடுபாடு கொண்டு அவரோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. நாம் அவரை நெருங்கும்பொழுது அவர் நம்மண்டை நெருங்கி வருவார் (யாக். 4:8). “சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று (மத். 28:20)  அவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். நம்முடைய பரமபிதா நாம் அவரண்டை நெருங்கி வரவேண்டுமென்று எப்பொழுதும் காத்திருப்பதோடு, நமது விண்ணப்பங்களுக்கு செவி சாய்க்கவும் ஆயத்தமாக இருக்கிறார்.

நாம் களைப்பாக உணரும் பொழுதோ, துக்க உணர்வால் மேற்கொள்ளப்படும் பொழுதோ, சுகவீனமாக பெலவீனமாக இருக்கும் பொழுதோ, ஜெபம் பண்ணுவதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் பெலனற்று இருக்கும் பொழுது, அல்லது சோதனைகளை சந்திக்கும் பொழுது, இயேசு நமக்காக இரங்குகிறார். “ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16).

பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது

நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியாளர்கள் சாதாரண பார்வையாளர்களை விட முக்கியமானவர்கள். அவர்கள் வழக்கின் முடிவையே தீர்மானிக்கக்கூடிய முக்கிய பங்கை வகிப்பவர்கள். கிறிஸ்துவின் சாட்சியாக வாழக்கூடிய நாமும் அப்படிப்பட்டவர்கள்தான். மிக முக்கியமான இயேசுவின் மரணத்தையும் உயிர்தெழுதலின் சத்தியத்தையும் குறித்து சாட்சி பகருவதில் நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

இயேசுவைப் பற்றி தான் என்ன அறிந்திருந்தானோ, அதையே யோவான் ஸ்நானகன் சாட்சியாய்க் கூறி, உலகின் மெய்யான ஒளியை அறிமுகப்படுத்தினார். இயேசுவின் சீஷராகிய யோவானும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று சம்பவித்த காரியங்களையெல்லாம் பதிவு செய்து சாட்சியளித்தார் (யோவா. 1:14). இளைஞனான தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறும்பொழுதும் இந்த கருத்தைத்தான் பவுல் விளக்கிக் கூறினார். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோ. 2:2). 

உலக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனைத்து கிறிஸ்தவர்களும் அழைக்கப்படிருக்கிறோம். இங்கு நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களும் கூட என்று வேதாகமம் கூறுகின்றது. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சாட்சிகூறவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வேலை ஸ்தலத்தில், சுற்றுப்புறத்தில், சபையில், நண்பர் மற்றும் உறவினர் மத்தியில் நம்முடைய சத்தம் கேட்க வேண்டும். அவர்கள் மத்தியில், இயேசுவைக் குறித்து ஜாக்கிரதையுடன் சாட்சி பகரலாமே!

எல்லாச் சூழ்நிலைகளிலும்

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் குறித்து நாங்கள் குறைகூறுவது வழக்கம். ஒரு வாரத்தில் சுமார் மூன்று முறை ஏற்படும் இம்மின்தடை, 24 மணி நேரம் கூட நீடிக்கும். அப்பொழுது எங்கள் சுற்று வட்டாரம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இம்மின் தடையினால் அடிப்படை வீட்டுப்பொருட்களைக் கூட உபயோகப்படுத்த முடியாத நிலையை ஏற்றுக்கொளவது மிகவும் கடினமான ஒன்று.

இந்நிலையைக் குறித்து, கிறிஸ்தவரான எங்கள் அண்டைவீட்டார் “இக்காரியத்தைக் குறித்து கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமா?” என்று, 1 தெசலோனிக்கேயா 5:18 “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்ற வசனத்தின் அடிப்படையில் அடிக்கடி கேட்பார். நாங்களும் ஒவ்வொரு முறையும், “ஆம், கண்டிப்பாக நாங்கள் எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரஞ் செய்கிறோம்,” என்று கூறுவோம். ஆனால் அரைமனதுடன் நாங்கள் கூறும் இப்பதில், ஒவ்வொரு முறையும் மின்தடை ஏற்படும் பொழுது நாங்கள் முறுமுறுப்பதற்கு எதிர்மறையாக உள்ளது.

ஆனால் ஒருநாள், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்கிற எங்கள் நம்பிக்கைக்கு ஒரு புதிய அர்த்தம் உண்டாயிற்று. அன்று நான் வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, என் அண்டை வீட்டார், “இன்றைக்கு மின் தடை ஏற்பட்டதற்கு இயேசுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் எங்கள் வீடு தீப்பற்றி நாங்களும் அதோடு கூட சேர்ந்து எரிந்து சாம்பலாகியிருப்போம்,” என நடுநடுங்கியபடி கூறினார். என்ன நடந்ததெனில் அன்றைய தினம் ஒரு குப்பை லாரி அவர்கள் வீட்டு முன்பு இருந்த மின்கம்பத்தில் மோதியதால் உயர் மின் அழுத்த கம்பிகள் அங்குள்ள அநேக வீடுகளின் மேல் விழுந்தது. ஒருவேளை அன்று மின்சார தடை ஏற்படாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் “தேவனே, உமக்கு நன்றி,” எனக் கூறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அவருடைய சித்தத்தை அறியாதிருந்தும், நம்முடைய எல்லா நிலைகளிலும் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு நன்றி சொல்லும் சந்தர்ப்பங்களாக அவற்றை மாற்ற வல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தக்கடவோம்.

உங்கள் சுமைகளை இறக்கி வையுங்கள்

ஒருவன் கிராமப்புற சாலையிலே தன்னுடைய சரக்கு வண்டியை ஓட்டி கொண்டு வந்த பொழுது, பெரிய சுமையை சுமந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டான். வண்டியை நிறுத்தி அவளை அதில் ஏற்றிக்கொண்டான். அப்பெண் நன்றி தெரிவித்துவிட்டு வண்டியின் பின் பகுதியில் ஏறிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்த பொழுது அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. அப்பெண் வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவளுடைய சுமையை அவள் இன்னமும் சுமந்து கொண்டிருந்தாள். ஆச்சரியத்துடன், “தயவுசெய்து உங்கள் சுமையை வண்டியிலே இறக்கி வையுங்கள். இந்த சரக்கு வண்டியினால் உங்களையும், உங்கள் சுமையையும் தாராளமாய் கொண்டு செல்ல முடியும். அதனால் கவலையில்லாமல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சினான்.

நம்முடைய வாழ்க்கையின் போரட்ட பாதையிலே பயம், கவலை மற்றும் பதற்றம் ஆகிய சுமையை நாம் என்ன செய்கிறோம்? சில சமயம் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுவதை விடுத்து, நானும் அப்பெண்ணைப் போலவே நடந்துகொள்கிறேன். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என இயேசு கூறியுள்ளார். ஆனாலும் அவரிடம் இறக்கி வைக்க வேண்டிய பாரங்களை நானே சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

நம்முடைய பாரங்களை ஜெபத்திலே தேவனிடம் கொண்டுவரும் பொழுது, அவற்றை நாம் இறக்கி வைக்கிறோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார் (1 பேது. 5:7). அவர் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறபடியினால் அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்கும் பொழுது கவலையின்றி இளைப்பாறக் கற்றுக் கொள்ளுவோம். நம்மை அழுத்தி சோர்வுறச் செய்யும் பாரங்களை நாம் கஷ்டப்பட்டு சுமப்பதற்கு பதிலாக, தேவனே அதை சுமக்கும்படி அவரிடம் கொடுத்துவிடலாம்.

ஆறுதலின் இன்னொரு பக்கம்

“என்னுடைய ஜனத்தை ஆறுதல் படுத்துங்கள்” என்பது எங்கள் முகாமின் தலைப்பு. முகாமிற்கு வந்த ஒவ்வொரு பிரசங்கியாரும் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளையே பிரசங்கித்தனர். ஆனால் கடைசியாக பேசிய பிரசங்கியார் முற்றிலும் வேறு தொனியில் பேசினார். அவர் “உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஏரேமியா 7:1-11ம் வசனங்களிலிருந்து போதித்தார். அன்போடு, ஆனால் அதே சமயத்தில் வார்த்தை ஜாலமின்றி, கண் விழித்து பாவத்திலிருந்து திரும்பும்படி அறைகூவல் விடுத்தார்.

“நான் கிறிஸ்தவன், தேவன் என்னை நேசிக்கிறார், எனக்கு பயமேதுமில்லை என்று பெருமை பாராட்டுகிறோம், ஆனால் நாம் எல்லா வித தீமையையும் செய்கிறோம். தேவனுடைய கிருபைக்குப்பின் ஒளிந்து கொண்டு இரகசிய பாவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள்” என்று ஏரேமியா தீர்க்கதரிசி உரைப்பது போல அறிவுரைத்தார்.

அவர் எங்கள் மேல் கரிசனையுள்ளவர் என்று நாங்கள் அறிவோம். தேவன் அன்பானவர் தான், ஆனாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே! (எபி. 12:29 பார்க்கவும்) என்று எங்கள் ஏரேமியா இன்று உரைத்த பொழுது எங்கள் நாற்காலிகளில் உட்காரமுடியாமல் நாங்கள் சங்கடத்தில் நெளிந்தோம். தேவன் பாவத்தை பாராது போல இருப்பவர் அல்ல.

“நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? (7:9-10) என்று தன் ஜனத்தைப் பார்த்து ஏரேமியா தீர்க்கதரிசி கேள்வி எழுப்பினார்.

“உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்னும் இவருடைய தலைப்பு, தேவனுடைய ஆறுதலின் இன்னொரு பக்கம். மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் கசப்பான மூலிகை போல, இவருடைய வார்த்தைகள் ஆவிக்குரிய நோய் தீர்க்கும் நல் மருந்தாக இருக்கிறது.

கடுமையான வார்த்தைகளை எதிர்கொள்ளும் பொழுது, அதைக் கேளாமல் அகன்று போவதை விட, அதின் சுகமளிக்கும் தன்மைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நலமாயிருக்கும்.

நன்றாக கூர்ந்து கவனியுங்கள்

சபையிலே பிரசங்கம் செய்து கொண்டிருந்த போதகரையே உற்றுக் கவனிக்கும் விதமாக நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர் சொல்வதை எல்லாம் நன்றாக கவனிப்பது போல் இருக்கும். அப்பொழுது தீடீரென எல்லோரும் கைதட்டிச் சிரித்தனர். ஆச்சரியத்துடன் நான் அங்கும் இங்கும் பார்த்தேன். அந்தப் பிரசங்கியார் நகைச்சுவையாக எதையோ கூறியிருக்க வேண்டும். ஆனால் அது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அவர் சொல்வதைக் கவனிக்கவேயில்லை. பார்ப்பதற்கு நன்றாகக் கவனிப்பதுபோல் காட்சியளித்தாலும், உண்மையில் என் மனம் அங்கில்லை.

இதைப்போலத் தான் நாமும் பல நேரங்களில் காது கொடுப்போம்; ஆனால் கேட்கமாட்டோம். கண்களினால் பார்ப்போம்; காண மாட்டோம், வெளியரங்கமாய் ஓர் இடத்தில் இருப்போம்; ஆனால் மனதோ வேறொரு இடத்தில் இருக்கும். இப்படியே வாழ்ந்து வந்தால், நாம் பல முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளாமல் போய் விடுவோம்.

தேவனுடைய கட்டளைகளை யூத ஜனங்களின் முன்பாக எஸ்றா படித்தார். “சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்” (நெ. 8:3). வாசித்ததின் அர்த்தத்தை விளக்கிய பொழுது, அவர்கள் புரிந்து கொண்டார்கள் (வச. 8). அதன் விளைவாக மனந்திரும்பி வாழ்வில் எழுப்புதல் அடைந்தனர். இது போலவே சமாரியாவில் பிலிப்பு மூலமாக எழுப்புதல் ஏற்பட்டது (அப். 8:1). எருசலேம் விசுவாசிகள் உபத்திரவப்பட்டபொழுது, பிலிப்பு சமாரிய மக்களை நோக்கி சென்றார். அந்த ஜனங்கள் அவர் செய்த அற்புத அடையாளங்களை மட்டும் பார்க்கவில்லை, “அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்” (வச. 6). அதனால் “அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று” (வச. 8).

ஊரைச் சுற்றும் வாலிபன்போல் நம் மனம் செயல்படும் பொழுது, நாம் நம் பக்கத்தில் இருக்கும் பல முக்கியமான நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளத்தவறிவிடுகிறோம். பரலோக பிதாவைப் பற்றி நாம் கேட்கும் பொழுது அளவில்லாத மகிழ்ச்சியையும், அதிசயத்தையும் உணர்கிறோம். இதை அனுபவிக்காமல் தடுக்கும் கவனச்சிதைவை தவிர்த்து அவரை அறிந்து கொள்ளும் ஜீவ வார்த்தைகளை நாம் அதிகக் கவனத்துடன் கேட்க வேண்டும்.