தேவனுக்கு தெரியும்
ஒரு ஓவிய கண்காட்சியில் வரையப்பட்டிருந்த ஒரு பெரிய ஓவியத்தை ஒரு தம்பதியினர் பார்வையிட்டனர். அதின் அருகில் பெயிண்ட் கேன்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அந்த ஓவியம் இன்னும் வரைந்து முடிக்கப்படவில்லை என்றும், பார்வையாளர்கள் தான் அதை நிறைவுசெய்யவேண்டும் என்று எண்ணி, தங்களுடைய பங்கிற்கு சில வர்ணங்களை பூசிவிட்டு கடந்து சென்றனர். ஆனால் அந்த ஓவியம் சமீபத்தில் வரையப்பட்டது என்பதை பிரதிபலிப்பதற்காய், ஓவியர்கள் அவற்றை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த சம்பவத்தின் காணொலிகளை பரிசோத்தி பின்னரே, நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்தனர்.
யோர்தானின் கிழக்கே வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நதிக்கு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியபோது, தவறான புரிதலை உருவாக்கினர். தேவனை ஆராதிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரம் மட்டுமே என்றிருந்த நிலையில், மேற்கத்திய கோத்திரத்தார்கள் இதை தேவனுக்கு எதிரான முரட்டாட்டமாய் கருதினர் (யோசுவா 22:16).
கிழக்கத்திய கோத்திரத்தார், தேவனின் பலிபீடத்தின் மாதிரியை மட்டுமே உருவாக்க நினைத்த எண்ணத்தை விளக்கும் வரை பதட்டம் அதிகரித்தது. தங்கள் சந்ததியினர் அதைக் காணவும், தங்களின் முற்பிதாக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் அதை அரங்கேற்றினர் (வச. 28-29). “தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்” (வச. 22) என்று கூச்சலிட்டனர். அவர்கள் சொன்னதை மற்றவர்களும் காது கொடுத்து கேட்டு, அங்கே நடப்பதைக் கண்டு, தேவனைத் துதித்துவிட்டு வீடு திரும்பினர்.
“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” (1 நாளாகமம் 28:9). ஒவ்வொருவரின் நோக்கங்களும் அவருக்கு தெளிவாக தெரியும். குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்ய உதவுமாறு நாம் அவரிடம் கேட்டால், அதை தெளிவுபடுத்தும் வாய்ப்பையும், நமக்கு விரோதமான செய்கைகளை மன்னிக்கும் கிருபையையும் அவர் நமக்கு அருளுவார். நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாய் வாழும் எண்ணத்தோடு, அவரிடத்திற்கு திரும்புவோம்.
அசாத்தியமான துணிச்சல்
1478ஆம் ஆண்டு இத்தாலி தேசத்தின் ப்ளோரன்ஸ் மாகாணத்தை ஆட்சிசெய்த லோரென்ஸோ டி மெடிசி, எதிரிகளின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தார். அவர் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதலினிமித்தம் கோபம் கொண்ட அவருடைய தேசத்து மக்கள் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். நிலைமை மோசமாக, கொடூர மன்னனான முதலாம் ஃபெரான்டே, லோரென்ஸோவின் எதிரியானான். ஆனால் லோரென்ஸோவின் துணிச்சலான செயல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. அவன் அந்த கொடூர மன்னனை எந்த யுத்த ஆயுதமுமில்லாமல் நேரில் போய் சந்தித்தார். இவரின் இந்த வீரமும், துணிச்சலுமான செயல் அந்த கொடூர மன்னனின் மனதை மாற்றி, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
தானியேலும் ராஜாவின் மனதை மாற்றக்கூடிய காரியத்தை செய்தான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய நபர் பாபிலோனில் யாருமில்லை. அது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், பாபிலோனில் இருந்த ஞானிகளையும், தானியேல் மற்றும் அவன் நண்பர்களையும் கொல்லக் கட்டளையிட்டான். தானியேலைக் கொல்ல கட்டளையிட்ட ராஜாவின் சமுகத்திற்கு, தானியேல் துணிச்சலாய் வருகிறான் (தானியேல் 2:24).
நேபுகாத்நேச்சாருக்கு முன், அந்த சொப்பனத்தை வெளிப்படுத்திய தேவனுக்கு மகிமை செலுத்துகிறான் (வச. 28). தானியேல் அந்த சொப்பனத்திற்கு விளக்கமளித்தபோது, நேபுகாத்நேச்சார், தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவருமாகிய தேவனுக்கு மகிமையை செலுத்துகிறான் (வச. 47). தேவன் மீதான விசுவாசத்தில் ஊன்றப்பட்ட தானியேலின் இந்த அசாத்தியமான துணிச்சல், அவனையும் அவனுடைய சிநேகிதர்களையும், மற்ற பாபிலோனிய ஞானிகளையும் அன்றைய தினம் உயிரோடே காத்தது.
நம் வாழ்விலும் சில முக்கியமான செய்திகளை சொல்ல துணிச்சலும், தைரியமும் நமக்கு அவசியம். தேவன் நமக்கு ஞானத்தை அருளி, என்ன சொல்ல வேண்டும் என்பதையும், அதை நேர்த்தியாய் சொல்லக்கூடிய தைரியத்தையும் அருளி நம்மை வழிநடத்துவாராக.
பாதுகாப்பிற்கு இழுக்கப்படுதல்
அந்த சிறுபெண் ஆழமில்லா அந்நீரோடையில் தடுமாறி நடப்பதை அவள் தந்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தன் முட்டி வரைக்கும் காலணி அணிந்திருந்தாள். கீழ்நோக்கி பாய்ந்த நீரோடையில் அவள் சறுக்குகையில், தண்ணீர் ஆழமாகி, அவளால் மேற்கொண்டு நடக்ககூடாதபடி பாய்ந்தது. தன்னால் அடுத்த அடி வைக்கமுடியாதபோது, “அப்பா, நான் சிக்கிக்கொண்டேன்” என்று அலறினாள். மூன்றே அடிகள் தான், அவள் தந்தை அவளருகே நின்றார், அவளை கரையில் இழுத்துவிட்டார். அவள் சிரித்துக்கொண்டே தன் காலணியை உதறி கழட்ட, அதிலிருந்த தண்ணீர் கீழே கொட்டியது.
தேவன், சங்கீதக்காரன் தாவீதை தன்னுடைய சத்துருக்களிடமிருந்து மீட்ட பிறகு, அவரும் இப்படி சற்று நேரமெடுத்து அமர்ந்து, “தன் காலணிகளை கழற்றி,” தன் ஆத்துமா விடுதலையில் நனைய அனுமதித்தார். தன் உணர்வுகளை வெளிப்படுத்த பாடலொன்றையும் எழுதினார். “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:4) என்றார். தேவன் தன்னுடைய கன்மலை, கோட்டை, கேடகம் மற்றும் உயர்ந்த அடைக்கலம் என்று துதிக்கிறார் (வச. 2–3). பின்பு தேவன் பதிலளித்த விதத்தை பாடல்நடையில் வர்ணிக்கிறார், “பூமி அசைந்து அதிர்ந்தது; வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (வச. 8, 10, 13–15, 17).
இன்றைக்கு உங்களைச் சுற்றிலும் எதிர்ப்பை நீங்கள் உணரலாம். ஆவிக்குரிய ரீதியில் முன்னேறக்கூடாதபடி பாவத்தில் நீங்கள் சிக்கியிருக்கலாம். தேவன் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவிய விதத்தை நினைத்துப்பாருங்கள். அவரைத் துதித்து, மீண்டும் அதை செய்யுமாறு அவரைக் கேளுங்கள். விசேஷமாக உங்களை தமது ராஜ்யத்திற்குட்படுத்தி விடுவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் (கொலோசெயர் 1:13).
ஒரு நட்பான உரையாடல்
கேத்ரீனும், நானும் சிறந்த பள்ளிபருவ நண்பர்கள். நாங்கள் தொலைபேசியில் பேசுவதோடு, இரவில் யார் வீட்டில் தங்குவதென்று வகுப்பில் துண்டுக் குறிப்புகளை அனுப்பிக் கொள்வோம். சிலநேரம் வாரயிறுதி நாட்களை ஒன்றாகக் கழித்து, பள்ளி வேலைகளை இணைந்து செய்வோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், கேத்ரீனை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அன்று காலை என் சபை போதகர் நித்திய வாழ்வைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆனால் நான் வேதத்தை நம்புவதைப் போல, அவள் வேதத்தை நம்பவில்லை. நான் பாரப்பட்டு, அவளை அழைத்து இயேசுவோடு எப்படி உறவுகொள்வது என்பதைக் குறித்து அவளுக்கு விளக்க விரும்பினேன். ஒருவேளை நான் சொல்வதை அவள் நிராகரித்து, என்னுடனான சிநேகிதத்தை விட்டு விலகிவிடுவாளோ என்றும் தயங்கினேன்.
இந்த பயமே நம்மில் அநேகரை அமைதியாய் இருக்கச் செய்கிறது. பவுல் அப்போஸ்தலனும் கூட, “நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு” (எபேசியர் 6:20) “எனக்காய் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று ஜனங்களிடம் கேட்க வேண்டியிருந்தது. நற்செய்தியைப் பகிர்வதில் எந்த ஆபத்தும் இல்லை. எனினும், பவுல் தன்னை தேவனுடைய சார்பில் நின்று பேசக்கூடிய “ஸ்தானாதிபதி” (வச.19) என்கிறார். நாமும் அப்படித்தான். ஜனங்கள் நம்முடைய செய்தியை நிராகரித்தால், அந்த செய்தியை நம்மிடம் கொடுத்தனுப்பியவரை நிராகரிக்கின்றனர் என்று அர்த்தம். நம்முடைய நிராகரிக்கப்படுதலை நம்மோடு சேர்ந்து தேவனும் அனுபவிக்கிறார்.
ஆகவே, எது நம்மை பேசத் தூண்டுகிறது? தேவனைப் போலவே நாமும் மக்கள் மீது அக்கறையோடிருக்கிறோம் (2 பேதுரு 3:9). கேத்ரீனை துணிந்து கூப்பிடுவதற்கு இதுவே எனக்கு உந்துதலாயிருந்தது. ஆச்சரியப்படும்படி அவள் எனக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, நான் சொன்னதைக் கவனமாக கேட்டாள். என்னிடம் சில கேள்விகளும் கேட்டாள். அவள் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் வேண்டி, அவருக்காய் வாழத் தீர்மானித்தாள். என்னுடைய துணிச்சலான முயற்சி பலனளித்தது.
ஜெயமும் தியாகமும்
ஒரு கோடை விடுமுறை வகுப்பில், என் மகன் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனை குறித்து புத்தகம் ஒன்றில் படித்தான். அச்சிறுவனுடைய பெரும்பாலான நேரம் இந்த இலட்சியத்திற்கு பயிற்சியெடுக்கவே செலவானது. இறுதியில் அவனுக்கான நேரம் கைகூடிவரும்போது, காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மலையேற்றத்தில் ஒரு இடத்தில அவனுடைய குழுவிலிருந்த ஒருவன் நோய்வாய்ப்பட, தன் இலக்கை அடைவதற்கு பதிலாக அவனோடு தங்கியிருக்க தீர்மானிக்கிறான்.
வகுப்பறையில், என் மகனின் ஆசிரியர், "இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் அந்த மலையை ஏறாததால் அச்சிறுவன் தோற்றுவிட்டானா?" என கேட்டார். ஒரு மாணவன் "ஆம் ஏனெனில் தோல்வி என்பது அவனுடைய இரத்தத்திலேயே ஊறியுள்ளது" என்றான். ஆனால் இன்னொரு பிள்ளை இதை மறுத்தது. அச்சிறுவன் தோற்கவில்லை ஏனெனில் அவன் முக்கியமான ஒன்றை மற்றவருக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தான் என்று காரணம் சொன்னான்.
நாம் நம்முடைய திட்டங்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக அக்கறை கொள்ளும்போது, நாம் இயேசுவை போல நடக்கிறோம். எங்கும் பயணித்து தேவனுடைய சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இயேசு சொந்த வீடு, நிரந்தர வருமானம் மற்றும் சமுதாய அங்கீகாரம் ஆகியவற்றை தியாகம் செய்தார். இறுதியாக, நம்மை பாவத்திலிருந்து விடுவித்து தேவனுடைய அன்பை காண்பிக்க தன் ஜீவனையே விட்டுக்கொடுத்தார் (1 யோவான் 3:16)
உலக பிரகாரமான ஜெயமும், தேவனுடைய பார்வையில் உள்ள ஜெயமும் அதிக வித்தியாசம் கொண்டவைகள். பிற்படுத்தப்பட்டோரையும், காயப்பட்டோரையும் மீட்க நம்மை உந்தித்தள்ளும் மனஉருக்கத்தை அவர் அதிகமாக மதிப்பீடுகிறார் (வ.17). ஜனங்களை காப்பாற்றும் தீர்மானங்களை அவர் அங்கீகரிக்கிறார். தேவனுடைய உதவியோடு, நாம் நமது மதிப்பீடுகளை அவருடைய மதிப்பீடுகளோடு இசையும்படிச் செய்து அவரையும், மற்றவர்களையும் நேசிக்க நம்மையே ஒப்புக்கொடுப்பதே எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
நான் என்ன சொல்ல வேண்டும்?
பழைய புத்தகக்கடையொன்றில் நான் புத்தகங்களை பார்வையிடுவதை நிறுத்தியபின்பு, அந்த கடையின் முதலாளி வந்தார். அவரிடத்தில் இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளைக் குறித்து நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சத்தியத்தைக் கேட்க விரும்புவாரா என்று என் உள்மனதில் எண்ணிக்கொண்டேன். நான் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக மௌனமாக ஜெபித்தேன். கிறிஸ்தவ ஆசிரியர்களின் சரிதை புத்தகங்களைக் குறித்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. அதைக் குறித்து விவாதிக்கும்போது, அப்படியே தேவனைக் குறித்தும் பேசினோம். ஒரு சிறிய ஜெபம் எங்களுடைய விவாதத்தை ஆவிக்குரிய ரீதியில் திசைதிருப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.
அர்தசஷ்டா ராஜாவின் முன் நின்று பேசுவதற்கு முன்பு நெகேமியாவும் தேவனிடம் ஜெபித்துவிட்டு போகிறான். எருசலேமின் அழிவைக் குறித்து கலக்கமடைந்திருந்த நெகேமியாவுக்கு எப்படி உதவமுடியும் என்று ராஜா கேட்கிறார். நெகேமியா ராஜாவின் வேலைக்காரனாயிருக்கிறான், ஆகையால் ராஜாவின் தயவை அவன் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவனுக்கு பெரிய தேவை ஒன்று உள்ளது. அவன் எருசலேமை மீட்க விரும்புகிறான். ஆகையால் அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தன் பட்டணத்தை ஸ்தாபிக்க அனுமதி கேட்பதற்கு முன்பு “பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபிக்கிறான் (நெகேமியா 2:4-5). ராஜா அதற்கு சம்மதித்து, நெகேமியாவுக்கு உதவி செய்யவும் தீர்மானித்து, அவனுடைய பயண ஏற்பாடுகளை செய்து, அவனுக்கு தேவையான மரமுட்டுகளையும் கொடுத்தனுப்புகிறார்.
“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபிக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது (எபேசியர் 6:18). நமக்கு தைரியம், சுய கட்டுப்பாடு தேவைப்படும் மற்றும் நாம் உணர்ச்சிவசப்படும் தருணங்களும் இதில் உள்ளடங்கும். நாம் பேசுவதற்கு முன்பாக ஜெபிப்பது, நம்முடைய சிந்தனையையும் வார்த்தைகளையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு உதவுகிறது.
உங்களுடைய வார்த்தைகளை அவர் இன்று எவ்வாறு வழிநடத்த விரும்புகிறார்? அவரைக் கேட்டு அதை கண்டறியுங்கள்!
சிறந்த ஆசிரியர்
“எனக்கு இது விளங்கவில்லை!” என் மகள் பென்சிலை மேஜையின் மீது குத்தினாள். அவள் தன்னுடைய கணக்குப் பாடத்தை செய்துகொண்டிருந்தாள். நான் வீட்டில் அவளுக்கு ஆசிரியையாகவும் தாயாகவும் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் குழம்பினோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த பின்னங்களின் எண் இலக்கத்தை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. என்னால் அவளுக்கு அதை கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் அதை விளக்கும் ஆன்லைன் ஆசிரியரின் காணொலியைப் பார்த்தோம்.
மனிதர்களாகிய நாம் சிலவேளைகளில் சிலவற்றை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவோம். ஆனால் தேவன் அப்படியல்ல அவர் சகலமும் அறிந்தவர். ஏசாயா, “கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?” (ஏசாயா 40:13-14) என்று கேட்கிறார். அதற்கு பதில்? யாருமில்லை!
மனிதன் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபடியால் மனிதனுக்கு ஞானம் உண்டு. ஆனால் நம்முடைய ஞானம் கொஞ்சமானது; அதற்கு எல்லை உண்டு. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் அறிந்தவர் (சங்கீதம் 147:5). தொழில்நுட்பத்தின் துணையோடு இன்று நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். எனினும், நாம் தவறு செய்யக்கூடும். ஆனால் இயேசு எல்லாவற்றையும் “துரிதமாகஒரே நேரத்தில்முழுமையாய்சரியாய்” அறிந்தவர் என்று ஓர் இறையியல் வல்லுநர் கூறுகிறார்.
எத்தனை மனிதர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாய் தெரிந்தாலும், கிறிஸ்துவின் எல்லாம் அறிந்த குணாதிசயத்திற்கு ஈடாக முடியாது. அவர் நம்மோடு இருந்து நம்முடைய புரிதலை ஆசீர்வதித்துஎது சரிஎது நல்லது என்று நமக்கு கற்றுத் தருவது அவசியமாயிருக்கிறது.
மகிழ்ச்சியான கற்றல்
இந்தியாவில் மைசூர் என்ற நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் இறுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளுர் கல்வியாளர்கள், ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்கவும் அவைகளை மறுவடிவமைக்கவும் தென்மேற்கு ரயில் நிறுவனத்துடன் இணைந்துக் கொண்டனர். இவைகள் பெரிய உலோகப் பெட்டிகளாக இருந்தன. தொழிலாளர்கள் அதில் படிகள், மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சாய்வுமேசைகளை அமைக்கும் வரை அது உபயோகமில்லாததாய் இருந்தது. தொழிலாளர்கள் சுவர்களுக்கு வண்ணம் பூசி, உள்ளேயும் வெளியேயும் வண்ண வண்ண சுவரோவியங்களை ஒட்டினர். இப்படிப்பட்ட அற்புதமான உருமாற்றம் செய்யப்பட்டதின் காரணமாகத் தற்போது அறுபது மாணவர்கள் அங்கு வகுப்புகளில் கலந்துக்கொள்ளுகின்றனர்.
“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2), என்ற பவுலின் கட்டளையைப் பின்பற்றும்போது, இன்னும் அதிக அற்புதமான காரியம் ஒன்று நிகழ்கிறது. உலகத்தோடும் அதின் வழிகளோடும் இருக்கும் தொடர்பிலிருந்து துண்டித்துவிட பரிசுத்த ஆவியானவரை நாம் அனுமதிக்கும்போது நம்முடைய வழிகளும், சிந்தனைகளும், மனப்பான்மையும் மாறத் தொடங்குகின்றன. நாம் அதிக அன்புள்ளவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவும், உள்ளான சமாதானத்தினாலே நிரப்பப்பட்டவர்களாயும் இருக்கிறோம் (8:6).
இன்னும் ஏதோ ஒன்று நடக்கிறது. இந்த மறுரூபமாக்கப்படுதல் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்தாலும், ரயில் பயணத்தைப் போல அநேக நிறுத்தங்களையும், துவக்கங்களையும் கொண்டிருந்தாலும், இந்தச் செயல்முறை தேவன் நம் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார் என்று புரிந்துக்கொள்ள உதவுகிறது. நமக்காக தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள உதவுகிறது (12:2). அவருடைய சித்தத்தை அறிவது பிரத்தியேகங்களை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஆனால் அது எப்போதும் நம்மை அவருடைய குணத்தோடும் அவர் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளோடும் சீரமைத்துக்கொள்ள வைக்கிறது.
இந்தியாவில் மறுவடிவமைக்கப்பட்ட பள்ளியின் பெயர் “நாலி காலி” - இதற்கு ஆங்கிலத்தில் “மகிழ்ச்சியான கற்றல்” என்று அர்த்தம். தேவனின் மறுரூபப்படுத்தும் வல்லமை அவருடைய சித்தத்தை அறிவதில் உங்களை எவ்வாறு வழி நடத்துகிறது?
பரம வைத்தியர்
என் குடும்ப நபர் ஒருவரின் உணவுசெரிமான கோளாறுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நன்றாய் பலனளிக்கத் துவங்கியதை அறிந்ததும் நான் ஆச்சரியத்தோடு, அதைக் குறித்து மற்றவர்களிடம் பெருமையாக பேசினேன். அந்த சிகிச்சையை கொடுத்த மருத்துவரை புகழ்ந்தேன். “சுகத்திற்கு எப்போதுமே தேவன் தான் காரணராக முடியும்” என்று என் சிநேகிதரில் சிலர் சொன்னார்கள். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது. பரம வைத்தியரை முக்கியத்துவப்படுத்தாமல், சுகத்திற்கு மனிதனை விக்கிரகமாக்கிவிட்டேனோ?
இஸ்ரவேலர்களின் வியாதியை சுகமாக்க தேவன் பயன்படுத்திய வெண்கல சர்ப்பத்திற்கு தூபங்காட்ட துணிந்தபோது இஸ்ரவேலர்களும் ஏறத்தாழ இதே வலையில் சிக்கினர். “மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை” (2 இராஜ. 18:4) எசேக்கியா உடைத்துப்போடும் வரைக்கும் இஸ்ரவேலர்கள் அதை வழிபட்டுக்கொண்டிருந்தனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கொடிய விஷப்பாம்புகள் இஸ்ரவேலர்களை தீண்டியது. அதினால் பலர் மரிக்க நேரிட்டது (எண்ணாகமம் 21:6). அவர்களுடைய ஆவிக்குரிய முரட்டாட்டமே அதற்கு காரணம் என்றாலும் மக்கள் தேவனுடைய உதவிக்காய் கெஞ்சினர். அவர்களுக்கு இரக்கம் செய்யும்பொருட்டு, தேவன் மோசேக்கு ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து அதை எல்லோரும் பார்க்கும்பொருட்டு உயர்த்தி பிடிக்கும்படி சொன்னார். அதை நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்துக்கொண்டனர் (வச. 4-9).
தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை நினைத்துப் பாருங்கள். அவைகளில் ஏதாகிலும் தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பிரதிபலிப்பதற்கு பதிலாக நம்முடைய துதிக்கு பாத்திரமாய் மாறியிருக்கிறதா? நன்மையான எந்த ஈவையும் கொடுக்கும் (யாக்கோபு 1:17), நம்முடைய பரிசுத்த தேவன் மட்டுமே துதிக்குப் பாத்திரர்.