இரும்பொறை வண்டுகள் என்று அழைக்கப்படும் வண்டுகளின் கடினமான வெளிப்புற அமைப்பு அதை மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட வகை, மிக அதிகமான அழுத்தத்தையும் தாங்கக்கூடியவை. அந்த வண்டுகளின் வெளிப்புற ஓடானது, அதிக அழுத்தத்தின் போது உடைந்து நொறுங்காமல் விரிவடையக்கூடிய தன்மையுடையது. அதனுடைய தட்டையான அடிப்பக்கம், விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனுடைய உடல் எடையைக் காட்டிலும் 40,000 மடங்கு அதிக அழுத்தத்தை அதனால் தாங்க முடியும் என அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த பூச்சியினத்தை தேவன் எந்த அளவிற்கு பாதுகாப்பாய் வடிவமைத்தாரோ, அதே அளவிற்கு எரேமியாவையும் பாதுகாப்போடு தேவன் நடத்தினார். இஸ்ரவேலுக்கு பிரியமில்லாத செய்தியை அறிவிக்கப்போகும் இந்த தீர்க்கதரிசி அதிகபட்சமான அழுத்தத்தை சகிக்கவேண்டியுள்ளதால், தேவன் அவரை “இரும்புத்தூணும், வெண்கல அலங்கமும்” (எரேமியா 1:18) ஆக்குவேன் என்று வாக்குப்பண்ணினார்.

தீர்க்கதரிசியை யாரும் வீழ்த்தவோ, செயலிழக்கசெய்யவோ, மேற்கொள்ளவோ முடியாது. தேவனுடைய பிரசன்னத்தினாலும் பாதுகாப்பினாலும் அவருடைய வார்த்தை உறுதியாய் ஸ்தாபிக்கப்படும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எரேமியா, தவறாய் குற்றஞ்சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, கிணற்றில் தூக்கி எறியப்பட்டு துன்பங்களை அனுபவித்தாலும், அவன் ஜீவித்தான். தன்னுடைய மன ரீதியான அழுத்தத்தையும் மேற்கொண்டு எரேமியா ஜெயமெடுத்தான். சந்தேகமும் துயரமும் அவனை ஆட்கொள்ள நேரிட்டது. தொடர்ந்த நிராகரிப்பும், பாபிலோனிய படையெடுப்பைக் குறித்த பயமும் அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எரேமியாவின் ஆவியும் சாட்சியும் உடைக்கப்படாவண்ணம் தேவன் எரேமியாவுக்கு தேவன் தொடர்ந்து உதவி செய்தார்.  

தேவன் நமக்கு கொடுத்த பணியில் நாம் சோர்வுற்றாலோ அல்லது பின்வாங்கினாலோ, எரேமியாவின் தேவன் நம் தேவன் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நம்மை இரும்புத்தூணாய் மாற்றி, நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலனை விளங்கச் செய்வார் (2 கொரிந்தியர் 12:9).