என்னுடைய மகள் இரண்டு நண்டுகளைப் பரிசாகப் பெற்றாள். ஒரு கண்ணாடிப் பெட்டியை உண்டாக்கி, அதில் மணலைப் போட்டு, அதில் அந்த நண்டுகள் வாழ்வதற்கு ஏதுவான அமைப்பை ஏற்படுத்தினாள். அது உயிர்வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், புரதச்சத்து, காய்கறிகள் ஆகியவற்றை அதில் வைத்தாள். அவை மகிழ்ச்சியாய் இருப்பதுபோல தெரிந்தன. ஆனால் ஒரு நாள் அந்த நண்டுகள் காணாமல் போய்விட்டன. எங்கே என்று தேடினோம். கடைசியில் அது தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது என்று கண்டறிந்தோம். அப்படியே இரண்டு மாதங்கள் அது மண்ணுக்குள்ளேயே புதைந்து, தன்னுடைய ஓட்டை மட்டும் வெளியே காண்பித்தவண்ணம் இருந்தது.
மூன்று மாதங்கள் கடந்துபோனது. அது மரித்துவிட்டதோ என்று நாங்கள் கவலைகொள்ள ஆரம்பித்தோம். காத்திருந்து பொறுமையிழந்தோம். கடைசியில் அது உயிரோடிருப்பதற்கான அடையாளங்களைப் பார்த்தோம். மண்ணுக்குள்ளிருந்து எண்ணற்ற நண்டு குஞ்சுகள் வெளியேறியது.
இஸ்ரவேலர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்த நாட்களில் தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுமா என்று சந்தேகித்திருக்கக்கூடும் என்று நான் எண்ணுகிறேன். அவர்கள் சோர்வுற்றிருந்தார்களோ? அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிருப்பிலேயே முடிந்துவிடுமோ என்று அஞ்சினார்களோ? எரேமியாவின் மூலம் தேவன் அவர்களுக்கு, “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் (எருசலேமுக்கு) திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமியா 29:10) என்று சொல்லுகிறார். எழுபது ஆண்டுகள் கழித்து, பெர்சிய மன்னன் கோரேசின் மூலம், யூதர்கள் தங்கள் சுதேசம் திரும்பி, ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார் (எஸ்றா 1:1-4).
எந்த மாற்றங்களும் நிகழாமல் காத்திருக்கும் நாட்களில், தேவன் நம்மை மறந்துவிடுவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மில் பொறுமையை உண்டாக்கும்போது, அவர் நம்பிக்கையின் காரணர், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர், எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை நாம் அறியக்கூடும்.