எட்டு வயதிலிருந்தே, லிசா திக்குவாயுடன் போராடினாள். மக்களோடு பேச வேண்டிய சமுதாய சூழலை துணிச்சலாய் எதிர்கொள்ளத் தயங்கினாள். ஆனால் பேச்சு சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பு, அது அவளுடைய எதிர்காலத்திற்கு உறுதுணையாயிருந்தது. லிசா மற்றவர்களுக்கு உதவ தனது குரலைப் பயன்படுத்த முடிவு செய்தாள். உணர்வு ரீதியாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் ஆலோசனை வழக்கும் சேவையை அவள் செய்தாள். 

சிறைப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களின் சிறையிருப்பிலிருந்து மீட்பதற்கு பேச வேண்டிய அவசியத்தைக் குறித்து மோசே கவலைப்பட்டான். தேவன் மோசேயை, பார்வோனை எதிர்கொள்ளும்படிக்கு கேட்டார். ஆனால், மோசே தான் திக்குவாயன் என்பதால் அதை ஏற்க மறுத்தான் (யாத்திராகமம் 4:10). தேவன் அவரிடம், “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?” என்று மோசேக்கு சவால் விட்டு, “நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (வச. 11-12) என்று வாக்களித்தார். 

தேவனுடைய இந்த பதிலானது, நம்முடைய பெலவீனங்களிலும் தேவன் கிரியை நடப்பிக்க முடியும் என்று உறுதியளிக்கிறது. இதை நாம் இருதயத்தில் நம்பினாலும், அதின் படி வாழ்வது கடினம். மோசே தனக்கு பதிலாய் வேறு யாரையாவது அனுப்பும்படிக்கு தேவனிடத்தில் கேட்டுக்கொண்டான் (வச. 13).  எனவே மோசேயின் சகோதரன் ஆரோனை அவனுடன் வர தேவன் அனுமதித்தார் (வச. 14).

மற்றவர்களுக்கு உதவும்படிக்கு நம்மிடம் குரல் வளம் இருக்கிறது. நாம் பயப்படலாம். நாம் தகுதியற்றவர்களாயிருக்கலாம். நமக்கு சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருக்கலாம். 

நம்முடைய சிந்தனைகளை தேவன் அறிவார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்பொருட்டு, மற்றவர்களுக்கு நாம் ஊழியம் செய்வதற்கு ஏதுவான வார்த்தைகளை அவர் அருளுவார்.