விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பைக் கண்டேன். அதிலிருந்த குழந்தை இயேசுவின் சிற்பத்தில், குழந்தையின் வடிவம் அச்சசலாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த புதிதாய் பிறந்த குழந்தை, துணியால் சுற்றப்பட்டு, கண்கள் மூடியது போலில்லாமல், அதின் கண்கள் திறந்தும், கைகளை விரித்து சற்றே துணிகளை அகற்றியும், கரங்கள் அகற்றி, விரல்கள் நீட்டப்பட்டிருந்தது. “இதோ இங்கே இருக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது.

இந்தச் சிறிய சிலை கிறிஸ்துமஸின் அற்புதத்தைப் பறைசாற்றியது. தேவன் தமது குமாரனை மனு உருவில் உலகத்திற்கு அனுப்பினார். குழந்தையான இயேசு வளருகையில் அவருடைய சிறு கைகள் பொம்மைகளோடு விளையாடினது, பின்பு வேதத்தை ஏந்தினது, பின்னர் ஊழியம் செய்யும் வரைக்கும் மரச்சாமான்களை உருவாக்கியது. அவர் பிறந்தபோது மிருதுவான பூரணமான அவருடைய கால்கள், ஓரிடம் விட்டு வேறிடம் சென்று போதிக்கவும், சுகமாக்கவும் அவரை சுமந்தது. அவருடைய வாழ்வின் முடிவிலே, இந்த கைகளும் கால்களும் ஆணிகளால் கடாவப்பட்டு, அவருடைய உடலைச் சிலுவையில் சுமந்தது.

தமது குமாரனை நமது பாவங்கள் போக்கும் பலியாகத் தேவன் அருளி,  நம்மீதிருந்த பாவத்தின் ஆளுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று ரோமர் 8:3 சொல்கிறது. நாம் இயேசுவின் பலியை நமது பாவங்களுக்கான பிராயச்சித்தமாக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கையில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைவோம். தேவ  குமாரன் நமக்காகக் குழந்தையாகப் பிறந்ததால், நாம் தேவனோடு ஒப்புரவாக வழியுண்டு, அவரோடு நித்தியகாலம் வாழும் நிச்சயமும் உண்டு.