எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

வல்லமைக்குள் ஓடுதல்

நான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது, வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கெதிராக வரும் அசைவுகளுக்குகந்த பாதுகாப்பு நிலையை கத்திச் சொல்வார் (பாரி). அவர் தன்னுடைய கருவியை நீட்டி அந்த தாக்குதலை எதிர்க்கும்படி கத்திச் சொல்லும்போது நான் அதனை கவனித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

இப்படி கவனித்து, உடனடியாகச் செயல்படுகின்ற மனதை, உடனடி கீழ்ப்படிதலை, வேதாகமம் பாலியல் சோதனைகள் வரும்போது பயன்படுத்தச் சொல்லுகிறது 1 கொரி. 6:18ல் பவுல் விசுவாசிகளுக்கு, வேசிகளிடமிருந்து விலகியிருக்கும்படி போதித்து வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்று குறிப்பிடுகிறார். சில வேளைகளில் நாமும் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் “உறுதியாக நிற்கும்படி” அறிவுறுத்தப்படுகிறோம் (கலா. 5:1, எபே. 6:11). நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாக, வேதாகமம் “விலகி ஓடு” என வலியுறுத்திக் கூறுகிறது.

உடனடி செயல் நம்மை சமரசம் செய்து கொள்வதிலிருந்து காத்துக் கொள்கிறது. சிறிய சமரசங்கள் பேரழிவை உண்டாக்கும் தோல்விகளுக்கு வழி வகுக்கும். ஒரு கட்டுப்படுத்த முடியாத சிந்தனை, வலைதளங்களில் தவறான இடத்திற்குச் செல்லும் பார்வை, திருமணமான பின்பும் நண்பர்களோடு சுற்றுதல் ஆகிய இவைகள் நாம் செல்லக் கூடாத வழிகளுக்கு நம்மை இழுத்துச் சென்று, நம்மை தேவனை விட்டுப் பிரிக்கின்றன.

நாம் சபலங்களுக்கு விலகியோடும் போது நாம் ஓடிச் சேர, தேவன் ஓர் இடத்தைத் தருகிறார். நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் தம்மையே பலியாக்கினதின் மூலம், அவர் நமக்கு நம்பிக்கையையும், மன்னிப்பையும், புதிய துவக்கத்தையும் தருகிறார். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நம் பெலவீனங்களில், நாம் இயேசுவிடம் செல்லும்போது அவர் நம்மை விடுவித்து அவருடைய பெலத்தினால் வாழ வழி வகுக்கிறார்.

மெய்யான நம்பிக்கை

சில நாட்களுக்கு முன்பு நான் எனது நண்பனோடு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு பார்வையிட வந்தோரின் வரிசை, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றபின் அந்த நுழைவு வராண்டா, படிக்கட்டு, அதன் வழியேயுள்ள மற்றொரு அறை அனைத்திலும் இருந்த நீண்ட வரிசை மக்களைக் கண்டோம். ஒவ்வொரு புதிய திருப்பமும் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்தது.

கவர்ச்சிகரமானவற்றிலும், கருத்து பூங்காக்களிலும் மக்கள் வரிசை சிறிதாக தோன்றும்படி கவனமாக வழியை அமைக்கின்றனர். எனினும் நாங்கள் “கட்டிடத்தின் திருப்பத்தை” அடைந்தபோது ஏமாற்றங்களையே சந்தித்தோம்.

சில வேளைகளில் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மிகவும் கடுமையாக இருக்கலாம். நாம் எதிர்பார்க்கும் வேலை கைக்கூடவில்லை, நாம் நம்பிய நண்பர்கள் ஏமாற்றிவிட்டனர், நாம் ஏங்கிய வாழ்க்கைத் துணை அமையவில்லை. இத்தனை இதய நொறுங்குதலிலும் தேவனுடைய வார்த்தைகள், அவர் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி ஒரு புதிய உண்மையைப் பேசுகின்றது, அப்போஸ்தலனாகிய பவுல், “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகின்றோம், மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:3-5) என எழுதுகிறோம்.

நாம் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கும் போது, எத்தனை தடைகளை நாம் சந்தித்தாலும் அவருடைய ஆவியானவர் மூலம், நாம் அவரால் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம், ஒரு நாள் நாமும் அவரோடு கூட வாழ்வோம் என்ற உண்மையைப் பேசுகின்றார். நமக்கு அடிக்கடி ஏமாற்றத்தையே தருகின்ற இந்த உலகில் தேவன் நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தந்திருக்கிறார் என்பது எத்தனை நலமானது.

கடைசியில் இருப்பது முதன்மையாகிறது

சமீப காலத்தில் நான் விமான பயணிகளின், முன் பதிவு எண் இல்லாதோரின் வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருந்தேன். விமான இறக்கையின் அருகில் அமைந்த மத்திய வரிசையில் ஒரு இருக்கையை கண்டுபிடித்தேன். ஆனால், எனது கைப் பையை வைப்பதற்கு கடைசி வரிசையின் மேலுள்ள விரிவில்தான் இடம் இருந்தது. அப்படியானால் நான் அனைவரும் வெளியேறும் மட்டும் காத்திருந்து, கடைசியில் தான் எனது கைப்பையை எடுக்கமுடியும்.

நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பொழுது “நீ காத்திருக்க வேண்டிய நேரம் உன்னை துக்கப்படுத்தாது அது உனக்கு நன்மையே செய்யும்” என்ற தேவனுடைய வார்த்தை எனக்குள்ளே தோன்றியது. எனவே விமானம் தரையிறங்கியதும், மிஞ்சிய நேரத்தை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள நான் தீர்மானித்து, சக பயணிகளின் உடைமைகளை கீழே இறக்குவதற்கும், விமான பணியாளரோடு சேர்ந்து சுத்தப்படுத்தவும் ஆரம்பித்தேன். சக பயணி ஒருவர் என்னை விமான பணியாளர் என்று எண்ணியபோது நான் மறுபடியும் சிரித்து கொண்டேன். வேளை வந்தபோது என் பையை எடுத்துக் கொண்டு இறங்கினேன்.

அந்த நாளின் அநுபவம் இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தையை நினைவுபடுத்தியது. “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற். 9:35).

நான் காத்திருக்க வேண்டிய அவசியமானதால் காத்திருந்தேன். ஆனால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி தங்களை வலிய ஈடுபடுத்திக் கொள்ளுபவர்களுக்கு, ‘கீழானவற்றை மேலாக்கும்’ தேவனுடைய ராஜ்ஜியத்தில் கனமுள்ள ஓர் இடமுண்டு.

‘நான் தான் முதல்” என முந்திக் கொள்ளும் இந்த அவசர உலகில் “இயேசுவும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28).

நாம் பிறருக்கு ஊழியம் செய்தலே தேவனுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாம். நாம் எவ்வளவு தூரம் நம்மைத் தாழ்த்துகிறோமோ அவ்வளவு தூரம் நாம் தேவனை நெருங்குகிறோம்.

ஒளிந்து பிடித்து விளையாடுதல்

“உன்னால் என்னைப் பார்க்க முடியாது!”

சிறு பிள்ளைகள் ஒளிந்து பிடித்து விளையாடும்பொழுது, தங்கள் கண்களை மூடிக்கொண்டு, தாங்கள் ஒளிந்திருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அவர்களால் உங்களைக்காண முடியாததினாலே, நீங்களும் அவர்களைக் காண முடியாதென்று நினைத்துக்கொள்வார்கள்.

பெரியவர்களுக்கு, அது ஞானமற்றதாகத் தோன்றினாலும், நாமும் இதைப்போன்ற செயலையே தேவனிடமும் செய்கிறோம். தகாததொன்றைச் செய்ய நாம் விருப்பப்படும்பொழுது, நாம் தேவன் இதைப்பார்க்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டு, நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.

பாபிலோனில் அடிமைகளாக இருந்த தமது ஜனத்திற்கு சொல்லும்படி, எசேக்கியேலுக்குத் தேவன் கொடுத்த தரிசனத்திலிருந்து இந்த உண்மையை எசேக்கியேல் அறிந்து கொண்டான். “அப்பொழுது அவர் என்னை நோக்கி மனு புத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்தில் அவரவர் தங்கள் விக்கிரகங்களின் விசித்திரவிநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்” (எசே. 8:12).

 ஆனால், தேவன் ஒன்றையும் கவனியாமல் விடுவதில்லை. எசேக்கியாவின் தரிசனம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். அவர்கள் பாவம் செய்திருந்தாலும், பாவ அறிக்கை செய்தவர்களுக்கு ஒரு புது வாக்குத்தத்தம் கொடுத்தார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்றார் (எசே. 36:25).

நாம் பாவத்தினால் சிதைக்கப்பட்டு, அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாலும் நமது பாவத்திற்கான தண்டனையை தமது மனதுருக்கத்தாலே, சிலுவையில் ஏற்றுக்கொண்டு, இறுதியாக விலைக்கிரயம் செய்து முடித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு புதுவாழ்வு தந்ததுமன்றி, நமக்குள்ளே கிரியை செய்து அவரைப் பின்பற்றும் பொழுது நமது இருதயத்தை மாற்றுகிறார். தேவன் எவ்வளவு நல்லவர்  நாம் வழிவிலகி பாவத்தில் மறைந்துகிடந்தபோது, தேவன் கிறிஸ்து மூலம் தம்மண்டை நம்மை சேர்த்துக்கொண்டார்.  “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக். 19:10; ரோமர் 5:8).

நமது ஜெபமும் தேவனுடைய வேளையும்

சில வேளைகளில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க தேவன் காலம் தாழ்த்துகிறார். அதை விளங்கிக்கொள்வது நமக்கு எப்பொழுதுமே எளிதல்ல.

அதுவே ஆசாரியனாகிய சகரியாவுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையாகும். எருசலேம் தேவாலயத்து பலிபீடத்தினருகில் ஒருநாள் காபிரியேல் எனும் தூதன் சகரியாவிற்குக் காட்சி அளித்தார். காபிரியேல் சகரியாவை நோக்கி, “சகரியாவே பயப்படாதே; உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப்பெறுவாள் அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக” என்றான் (லூக். 1:13).

ஆனால், சகரியா ஒரு குழந்தைக்காக தேவனிடத்தில் விண்ணப்பம் செய்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பொழுதோ, எலிசபெத்து பின்ளைபெறுகிற வயதைத் தாண்டிவிட்டாள். அதனால் சகரியா காபிரியேலின் செய்தியை நம்பமுடியாமல் குழம்பினான், கலங்கினான். ஆனாலும் தேவன் அவன் விண்ணப்பத்திற்குப் பதிலளித்தார்.

தேவனுடைய நினைவாற்றல் பரிபூரணமானது. தேவன் பல ஆண்டுகள் கடந்து மட்டுமல்ல, நமது ஆயுசு நாட்கருதி பல தலைமுறைகள் கடந்தாலும் நமது விண்ணப்பத்தை நினைவுகூர வல்லவர். அவர் நம் வேண்டுதலை நிறைவேற்ற காலம் தாழ்த்தினாலும் ஒருபோதும் அதை மறப்பதேயில்லை. சில வேளைகளில் அவருடைய பதில் ‘இல்லை’ என்றிருக்கலாம் அல்லது ‘காத்திரு’ என்றிருக்கலாம். ஆனால், எந்த பதிலும் அன்பின் அடிப்படையிலேயே இருக்கும். அவருடைய வழிகள் நமக்கு விளங்காமலிருக்கலாம்; ஆனால், அது நன்மைக்கேதுவானது என்று நாம் அதை நம்பலாம்.

சகரியா இதைக் அறிந்திருந்தான். அவர் ஒரு மகனைத்தான் கேட்டான். ஆனால் தேவன் அவன் கேட்டதற்கும் மேலானதைக் கொடுத்தார். அவனுடைய மகன் யோவான் வளர்ந்து மேசியாவின் வருகையை அறிவிக்கும் தீர்க்கதரிசியானான். சகரியாவின் அனுபவம் ஒரு முக்கிய சத்தியத்தை வலியுறுத்தி  நம்மை ஜெபம் பண்ண உற்சாகப்படுத்துகிறது.

தேவனுடைய வேளை அநேகமாக நம்முடைய வேளையாயிராது; என்றாலும் அதற்குக் காத்திருப்பது நல்லது.

அழகிற்கு முடிவே இல்லாத பொழுது

கிராண்ட் கேன்யன் என்ற உலகப் புகழ்பெற்ற மலைப் பள்ளத்தாக்கை பார்ப்பதை நான் அதிகம் விரும்புகிறேன். பள்ளத்தாக்கின் ஓரத்தில் நிற்கும் பொழுதெல்லாம், தேவனுடைய சிருஷ்டிப்பின் புதுமையைக் கண்டு ஆச்சரியத்தால் எனது மூச்சு நின்று போகும்.

கிராண்ட் கேன்யன் என்பது பூமியிலுள்ள மிக ஆழமான குழியாக இருந்தாலும், அது என்னை பரலோகத்தைக் குறித்து சிந்திக்க தூண்டுகிறது. 12 வயதுடைய ஒரு சிறுவன் “பரலோகம் சிலிப்பை உண்டாக்கும் இடமாக இருக்காதா? எந்த நேரமும் தேவனை துதித்துக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைந்துவிடமாட்டோமா?” என்று உண்மையான இருதயத்துடன் என்னிடம் கேட்டான். பூமியிலுள்ள ஒரு அழமான பள்ளம் நம் மனதைத் தொடக்கூடிய அளவிற்கு மிக அழகாக இருப்பதால், அதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க செய்யுமானால், அழகிற்கே ஊற்று காரணமுமான, ஆச்சரியமான புத்தம் பதிய சிருஷ்டிகளின் சிருஷ்டி கர்த்தாவாகிய நமது அன்பின் தேவனை நாம் காணும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும்.

தாவீது “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன். அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்று எழுதினபொழுது அவனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். நாம் விசுவாசத்துடன் தேடும்பொழுது இந்த உலகில் நம்மை நெருங்கி வரும் அவரது பிரசன்னத்தைப் போலவும், அவரை முகமுகமாகத் தரிசிப்பதை எதிர் நோக்கி இருப்பதைப் போலவும் அழகானவைகள் வேறு ஒன்றுமில்லை.

அந்த நாளில் அற்புதமான நமது கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பதில் நாம் களைத்துப் போகவே மாட்டோம். ஏனென்றால் அளவிடப்படமுடியாத அவரது உன்னைத் தன்மையையும், அவரது கரத்தின் கிரியைகளின் ஆச்சரியத்தையம் அறிந்து கொள்வதற்கு முடிவே கிடையாது. அவருடைய பிரசன்னத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய அன்பு அவருடைய அழகு ஆகியவைகள் ஆச்சரியப்படத்தக்க முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

மிகச் சிறந்த ஜெபப் பங்காளர்

உங்களை நேசிக்கும் ஒருவர், உங்களுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை நீங்கள் கேட்கும்பொழுது எவ்வளவு அழகாக உள்ளது. அதுபோல வேறு சில சத்தங்களும் அழகாக இருக்கலாம். மன உருக்கத்தோடும், தேவ ஞானத்தோடும் உங்களுக்காக உங்கள் சினேகிதர் ஜெபம் பண்ணுவதை நீங்கள் கேட்கும் பொழுது, பூலோகத்தை பரலோகம் தொடுவது போல இருக்கிறது.

தேவன் நம்மீது வைத்த அன்பினால் நமது ஜெபங்கள் கூட பரலோகத்தை தொட முடியும் என்பதை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு சிறப்பான காரியமாக உள்ளது. சில நேரங்களில் நாம் ஜெபிக்கும் பொழுது, சரியான வார்த்தைகள் வராமலும் உணர்வுகளை சரியாக வெளிக்காண்பிக்க இயலாமலும் போராடுவோம். ஆனால், இயேசு அவரைப் பின்பற்றினவர்களுக்கு “சோர்ந்து போகாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 18:1) என்று கற்றுக் கொடுத்தார். நாம் இப்படி செய்ய முடியுமென்பதற்கான காரணங்களில் ஒன்று “இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே’’ (ரோம. 8:34) என்று தேவனுடைய வார்த்தை விளக்குகிறது.

நாம் ஒருபோதும் தனியாக ஜெபிப்பது கிடையாது. ஏனென்றால், இயேசு நமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஜெபிக்கும்பொழுது அவர் செவிசாய்த்து நமது சார்பாக பிதாவிடம் மன்றாடுகிறார். நாம் ஒரு சிறந்த பேச்சாளரைப் போல பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் இயேசுவைப்போல நம்மை புரிந்து கொள்பவர்கள் வேறுயாரும் இல்லை. நாம் எதிர்பார்க்கும் பதில்கள் எப்பொழுதும் நன்மையாக அமையாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமது ஒவ்வொரு வேண்டுதலையும், நமது தேவைகளையும் பரிபூரண ஞானத்தோடும், அன்போடும் அவர் சந்திக்கிறார்.

இயேசு நமது சிறந்த ஜெபப் பங்காளராக இருக்கிறார். அளவு கடந்த அன்போடு கூட தேவனிடம் நமக்காகச் செய்யும் வேண்டுதல்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு சிறந்ததாக இருப்பதோடு அவரது ஜெபங்கள் நம்மை நன்றியுடன் எப்பொழுதும் ஜெபிக்க உற்சாகப் படுத்துவதாகவும் உள்ளன.

புதிய விசுவாசம்

என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!

எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பகுதி

“அவனுடைய துண்டு என்னுடையதைக் காட்டிலும் பெரியது!”

நான் சிறுவனாக இருந்தபோது, நானும் என் சகோதரர்களும் என் தாயார் வீட்டில் தயாரித்த பையை (Pie) பங்கிடும் போது சண்டையிடுவதுண்டு. ஒரு நாள் என் தந்தை எங்களின் இந்த வேடிக்கை நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, தன் உயர்த்தப்பட்ட கண் புருவங்களோடு அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் தட்டினை உயர்த்தி பிடித்து “தயவு கூர்ந்து உன் உள்ளம் போன்ற பெரியதொரு துண்டினை எனக்குத் தா” என்றார். என் தாயார் சிரித்துக் கொண்டே மிகப் பெரிய பகுதியை அவருக்குக் கொடுத்த போது, நானும் என் சகோதரர்களும் அதிர்ந்து அமைதியாக கவனித்தோம்.

நாம் பிறருடைய உடைமைகள் மீது கண்வைக்கும் போது பொறாமை வந்து விடுகிறது. ஆனாலும் தேவனுடைய வார்த்தைகள் நம் கண்களை இந்த உலக பொருட்களைவிட விலையேறப் பெற்ற ஒன்றின் மீது பதிக்கச் செய்கின்றன. “கர்த்தாவே, நீரே என் பங்கு நான் உமது வசனங்களைக் கைக் கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உமது தயவுக்காகக் கெஞ்சுகிறேன்” (சங். 119:57-58). தேவனுக்கு மிக அருகில் இருப்பதைவிட சிறந்தது வேறெதுவுமில்லை என்ற உண்மையை பரிசுத்த ஆவியானவரால் ஏவவ்பட்டு எழுதியவர் நமக்குத் தெரிவிக்கின்றார்.

அன்பு நிறைந்த, முடிவு இல்லாதவராகிய நம்முடைய படைப்பின் கர்த்தாவைவிட மேலான பங்கு நமக்கு என்ன இருக்க முடியும்? அவருக்கு இணையானது இப்புவியில் வேறொன்றும் இல்லை. எதுவும் நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. மனிதனின் ஏக்கமெல்லாம் ஒரு அகன்ற வெற்றிடம் போல இருக்கிறது. ஒருவன் இவ்வுலகில் அனைத்தையும் அடைந்தாலும் அவனுடைய வாழ்வு பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. ஆனால், தேவன் நம்முடைய மகிழ்ச்சியின் ஊற்றாக மாறும் போது நாம் உண்மையான நிறைவைப் பெற்றுக் கொள்வோம். நமக்குள்ளேயுள்ள வெற்றிடத்தை தேவனாலே மட்டும்தான் நிரப்ப முடியும.; அவராலேயே நமது இதயத்திற்கேற்ற அமைதியைத் தர முடியும்.