உங்களை நேசிக்கும் ஒருவர், உங்களுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை நீங்கள் கேட்கும்பொழுது எவ்வளவு அழகாக உள்ளது. அதுபோல வேறு சில சத்தங்களும் அழகாக இருக்கலாம். மன உருக்கத்தோடும், தேவ ஞானத்தோடும் உங்களுக்காக உங்கள் சினேகிதர் ஜெபம் பண்ணுவதை நீங்கள் கேட்கும் பொழுது, பூலோகத்தை பரலோகம் தொடுவது போல இருக்கிறது.

தேவன் நம்மீது வைத்த அன்பினால் நமது ஜெபங்கள் கூட பரலோகத்தை தொட முடியும் என்பதை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு சிறப்பான காரியமாக உள்ளது. சில நேரங்களில் நாம் ஜெபிக்கும் பொழுது, சரியான வார்த்தைகள் வராமலும் உணர்வுகளை சரியாக வெளிக்காண்பிக்க இயலாமலும் போராடுவோம். ஆனால், இயேசு அவரைப் பின்பற்றினவர்களுக்கு “சோர்ந்து போகாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 18:1) என்று கற்றுக் கொடுத்தார். நாம் இப்படி செய்ய முடியுமென்பதற்கான காரணங்களில் ஒன்று “இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே’’ (ரோம. 8:34) என்று தேவனுடைய வார்த்தை விளக்குகிறது.

நாம் ஒருபோதும் தனியாக ஜெபிப்பது கிடையாது. ஏனென்றால், இயேசு நமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஜெபிக்கும்பொழுது அவர் செவிசாய்த்து நமது சார்பாக பிதாவிடம் மன்றாடுகிறார். நாம் ஒரு சிறந்த பேச்சாளரைப் போல பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் இயேசுவைப்போல நம்மை புரிந்து கொள்பவர்கள் வேறுயாரும் இல்லை. நாம் எதிர்பார்க்கும் பதில்கள் எப்பொழுதும் நன்மையாக அமையாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமது ஒவ்வொரு வேண்டுதலையும், நமது தேவைகளையும் பரிபூரண ஞானத்தோடும், அன்போடும் அவர் சந்திக்கிறார்.

இயேசு நமது சிறந்த ஜெபப் பங்காளராக இருக்கிறார். அளவு கடந்த அன்போடு கூட தேவனிடம் நமக்காகச் செய்யும் வேண்டுதல்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு சிறந்ததாக இருப்பதோடு அவரது ஜெபங்கள் நம்மை நன்றியுடன் எப்பொழுதும் ஜெபிக்க உற்சாகப் படுத்துவதாகவும் உள்ளன.