இயேசுவைப் போல ஜெபித்தல்
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. அதன் முன் பக்கத்தை “தலை” என்கிறோம், ஏனெனில் ஆதி ரோமர் ஆட்சி காலத்திலிருந்தே நாணயத்தின் முன் பக்கம் அந்த நாட்டின் தலைமையைக் குறிக்கும். அதன் பின் பக்கம் “வால்” எனப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியிருக்கலாம், அந்த நாணயத்தில், ஒரு சிங்கத்தின் வால் உயர்த்தப்பட்ட நிலையில் காட்டப்பட்டிருக்கும்.
ஒரு நாணயத்தைப் போன்று, கெத்செமனே தோட்டத்தில், கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, தன்னுடைய வாழ்வின் துயரம் மிகுந்த நேரத்தில், ஜெபித்தார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது” (லூக்.22:42) என்றார். “இந்தப் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும், அதையே நான் விரும்புகின்றேன்” என்று கிறிஸ்து ஜெபித்திருப்பாரேயானால் அது தான் உண்மையை வெளிப்படுத்தும் ஜெபம், அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஜெபமாயிருந்திருக்கும்.
பின்னர் இயேசு நாணயத்தின் மறு பக்கத்தைத் திருப்புகின்றார், “என்னுடைய சித்தத்தின் படியல்ல” என்று ஜெபிப்பதின் மூலம் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கின்றார். “தேவனே, நீர் என்ன செய்ய விரும்புகின்றீர்?” என்று நாம் கேட்கும் போது, நம்மை அவரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க ஆரம்பிக்கின்றோம்.
இந்த இரு பக்க ஜெபம், மத்தேயு 26, மாற்கு 14 மற்றும் யோவான் 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இயேசு இரு பக்க ஜெபத்தை ஏறெடுத்தார்; இந்த பாத்திரத்தை என்னை விட்டு எடுத்து விடும் (தேவனே, இது நான் விரும்புவது), ஆயினும் என்னுடைய விருப்பத்தின் படியல்ல (தேவனே, நீர் என்ன விரும்புகின்றீர்?), இவ்விரண்டிற்கும் இடையே மட்டுமே அவருடைய ஜெபமிருந்தது. இயேசுவின் இரு பக்கங்கள், அவருடைய ஜெபத்தின் இரு பக்கங்கள்.
விட்டு விடும்படி அழைப்பு
ஓர் இளம்பெண்ணான நான், நல்ல வேலையில் அமர்வேன், திருமணம் முடித்துக் கொள்வேன் என கற்பனை செய்திருந்தேன், ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை அது நடைபெறவில்லை. என்னுடைய எதிர்காலம் வெறுமையாக என் கண் முன்னே காட்சியளித்தது. வாழ்வில் என்ன செய்வதெனத்தெரியாமல், நான் போராடிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பிறருக்குப் பணி செய்வதன் மூலம், தேவனுக்குப் பணிசெய்யும் படி, அவர் வழிகாட்டியதை உணர்ந்தேன், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னில் வேர் விட்டிருந்த யாவற்றையும், நண்பர்களையும், குடும்பத்தையும் தள்ளிவிட்டு, எனக்குள்ளே உண்மை ஊடுருவ ஆரம்பித்தது. தேவனுடைய அழைப்பிற்கு செவிகொடுக்கும்படி, எல்லாவற்றையும் நான் விட வேண்டியதாகிவிட்டது.
கலிலேயா கடற்கரையோரமாக இயேசு நடந்து சென்று கொண்டிருந்த போது, பேதுருவும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவும் தங்கள் வாழ்வினை நடத்தும்படி மீன்களைப் பிடிக்க கடலில் வலைகளை வீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மத். 4:19) என்று அழைக்கிறார். இயேசு மேலும் இரண்டு மீனவர்கள் யாக்கோபு மற்றும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் பார்த்து, இத்தகைய ஓர் அழைப்பை அவர்களுக்கும் கொடுத்தார் (வச. 21).
இந்த சீஷர்களும் இயேசுவிடம் வந்த போது, சிலவற்றை விட்டு வந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் “வலைகளை விட்டு” (வச. 20) விட்டனர், யாக்கோபும் யோவானும் “படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்” (வச. 22). “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” என்பதாக லூக்கா எழுதுகின்றார் (லூக். 5:11).
இயேசு நம்மை அழைக்கும் போது, சிலவற்றை விட்டு வரும்படியாக நம்மையும் அழைக்கின்றார். வலைகள், படவு, தந்தை, நண்பர்கள், வீடு என்று பலவற்றை விட்டு விட்டு, நாம் அவரோடு உறவாடும்படி அழைப்பைப் பெறுகின்றோம், அவரோடு கூட பணி செய்யும்படியாக அழைக்கப்படுகின்றோம்.
நமக்காகக் குத்தப்பட்ட அன்பு
அவள் அலைபேசியில் அழைத்தாள், குறுஞ்செய்தி அனுப்பினாள். இப்பொழுது கார்லா அவளுடைய சகோதரனின் வீட்டின் முன்புறமுள்ள வாயிலின் அருகில் நின்று கொண்டிருக்கின்றாள், அவனை எழுப்ப முடியவில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையாகி, அதனை விட்டு வெளியே வரமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய சகோதரன், தன்னுடைய வீட்டிற்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். அவனுடைய தனிமைக்குள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், கார்லா அவனுக்குப் பிடித்தமான அ நேக தின்பண்டங்களோடும், சில உற்சாகப்படுத்தும் வேத வார்த்தைகளோடுமுள்ள தனது பையை வெளிகேட்டின் வழியாக உள்ளே இறக்கினாள்.
அவளுடைய கரத்தை விட்டு நழுவிய அந்தப் பை, கேட்டிலுள்ள ஒரு கொக்கியில் மாட்டி, கிழிந்து, அதிலுள்ள அனைத்தும் கீழே மணலில் கொட்டியது. அவள் நல்லெண்ணத்தோடும், அன்போடும் வாங்கி வந்த அனைத்தும் கொட்டப்பட்டு, வீணானது போலாகிவிட்டது. அவளுடைய சகோதரன், அவள் வாங்கி வந்த நற்கொடைகளை கவனிப்பானா? அவள் எதிர் பார்த்த நம்பிக்கையினை, அவளால் கொடுக்க முடியுமா? அவளால் நம்பிக்கையோடு ஜெபிக்கவும் அவன் விடுதலை பெறும் மட்டும் காத்திருக்கவும் தான் முடிந்தது.
சோர்வினாலும், தனிமையினாலும் தவித்துக்கொண்டிருந்த இவ்வுலகினை தேவன் நேசித்தப் படியால், அவருடைய ஒரே நேசக் குமாரனை, அன்பு, சுகம் ஆகிய நற்கொடைகளோடு, பாவம் நிறைந்த கோட்டைக்குள் இறக்கினார் (யோவா. 3:16). இந்த அன்புச் செயலின் கிரயத்தைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி, ஏசாயா 53:5ல் குறிப்பிடுகின்றார். இந்த நேசக் குமாரன் “நம்முடைய மீறுதல்களின் நிமித்தம்…. காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம்…… நொறுக்கப்பட்டார்” அவருடைய காயங்கள், நாம் முழுமையான சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கையைத் தருகின்றது. “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்” அவர் தன்மேல் விழப்பண்ணினார் (வச. 6).
நம்முடைய பாவத்திற்காகவும், தேவைகளுக்காகவும் குத்தப்பட்டவராய், தேவனுடைய ஈவாகிய இயேசு நம்முடைய வாழ்வினுள் இன்று புதிய பெலத்தோடும், புதிய எண்ணத்தோடும் வருகின்றார். அவருடைய ஈவு உனக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
சுத்தமான பாத்திரங்கள்
“பகை, தானிருக்கின்ற பாத்திரத்தை அரித்து விடும்” என்றார் முன்னாள், சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆலன் சிம்ஸ்சன். ஜியார்ஜ் புஷ்ஷின் அடக்கத்தின் போது, அவர், தன்னுடைய நண்பனின் அன்பினை நினைவு கூர்ந்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாற்பத்தி ஒன்றாம் ஜனாதிபதியான புஷ், தன்னுடைய தலைமைத்துவ பணியிலும், தனிப்பட்ட உறவுகளிலும் எந்த பகைமையையும் மனதில் வைத்துக் கொள்ளவேயில்லை, மாறாக நகைச்சுவையையும், அன்பையும் அணைத்துக் கொண்டார், என்றார்.
இந்த சட்ட மன்ற உறுப்பினரின் கருத்தை நானும் ஒத்துக் கொள்கின்றேன். உனக்கும் அப்படித்தானே? நான் பகையை எனக்குள் அடக்கிவைத்த போது, அது எவ்வளவு பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியது!
நாம் கோபத்தை அடக்கி வைத்தாலோ, அல்லது அதனைத் திடீரென வெளிப்படுத்தினாலோ, நமது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது, நம்முடைய ஆவி தொய்ந்து போகிறது, நம்முடைய பாத்திரம் அரிக்கப்படுகின்றது.
“பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்” என சாலமோன் ராஜா, நீதிமொழிகள் 10:12 ல் கூறுகின்றார். பகையினால் வரும் மோதல்கள், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே, இரத்தம் சிந்தும் அளவிற்கு சண்டைகளைக் கொண்டு வருகின்றது. இந்தப் பகை, பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டிவிட்டு, ஒருவரையொருவர் இகழ்ந்து பேச வைக்கின்றதேயல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்காது.
மாறாக, தேவனுடைய அன்பு, எல்லாத் தவறுகளையும் மூடுகிறது, ஒரு திரையினால் மறைக்கிறது, மன்னிக்கிறது. அதற்காக நம் தவறுகளை கவனிக்கக் கூடாது என்பதாகவோ அல்லது தவறு செய்பவருக்குத் துணை செய்வதாகவோ அல்ல. ஒருவர் தான் செய்த தவறை உணர் ந்து, உண்மையாய் மனம் வருந்தும் போது, நாம் அந்த தவறை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர், அதற்காக மனம் வருந்தவில்லையெனின், நம்முடைய உணர்வுகளை தேவனிடம் கொடுத்து விடுவோம். நம்மை அதிகமாக அன்பு செய்கிறவரை அறிந்திருக்கின்ற நாம், ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருப்போம், அன்பு திரளான பாவங்களை மூடும். (1 பேதுரு 4:8)
ஆம், ஆம்… என்னும் தொடர் சங்கிலி
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!
சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?
லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்… என்றே பதிலளிக்கின்றாள்.
நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்.
அழகாக பாரங்கொண்டேன்
நடு இரவில் விழித்துக் கொண்டேன். நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். எனக்கு தூக்கம் வருவதாகவும் இல்லை. என்னுடைய சிநேகிதியின் கணவன் மருத்துவ மனையில் படுத்திருக்கிறார், அவரை பயப்படுத்தும் செய்தி வந்தது,” கேன்சர் மீண்டும் வந்துவிட்டது, அது, மூளையையும், முதுகுத் தண்டையும் பாதித்துள்ளது” என்பதுதான் அந்த செய்தி. என்னுடைய சிநேகிதியின் நிலை, என்னை முற்றிலும் பாதித்தது. எத்தனை பெரிய சுமை! நான் விழித்திருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன், என் ஆத்துமாவில் சற்று ஆறுதல் அடைந்தேன். நான் அவர்களுக்காக அழகாக பாரம் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். இது எப்படி நடந்தது?
மத்தேயு 11:28-30 வசனங்களில், இயேசு சோர்வடைந்த நம்முடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலை வாக்களிக்கின்றார். இது சற்று வித்தியாசமானது. நாம் குனிந்து, அவருடைய நுகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய பாரத்தை நாம் அரவணைக்கும் போது, இந்த இளைப்பாறுதல் கிடைக்கிறது (வச. 30). இதைத் தெளிவு படுத்துகின்றது. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது “என்றார் இயேசு. நம் முதுகிலுள்ள பாரச் சுமையை இயேசு தூக்கிக் கொள்ள நாம் அனுமதித்து விட்டு, அவருடைய நுகத்தில் நம்முடைய தோளைக் கொடுக்கும் போது, அவரோடு இணைந்து, அவர் தருகின்ற சுமையைச் சுமக்கிறவர்களாகின்றோம், அவருடைய நுகத்திற்கு நாம் குனியும் போது, நாம் அவருடைய பாடுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம், அதன் மூலம் அவர் தரும் ஆறுதலிலும் பங்கடைகிறோம் (2 கொரி. 1:5).
என்னுடைய சிநேகிதியின் மீது கொண்டுள்ள கரிசனை, பெரிய பாரமாயிருக்கிறது. ஆனாலும், அதனை ஜெபத்தின் மூலம் தேவனிடம் கொண்டு வரும் படி, தேவன் தயை புரிந்ததால், நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாக என் கவலை தணிந்து, நான் தூங்கி விட்டேன். காலை எழுந்த போது, அந்த அழகிய பாரம், இலகுவான நுகத்தின் அடியில் இலேசான சுமையாக மாறியது, இயேசுவோடு நடக்க ஆரம்பித்தேன்.
நிலைத்திருக்கும் பாரம்பரியம்.
தாமஸ் எடிசன் முதல் மின் விளக்கை எரியச் செய்தார். ஜோனாஸ் சாக் போலியோவிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்தார். நாம் தேவனை ஆராதிக்கும்படி, பாடும் அநேக பாமாலைகளை ஏமி கார்மைக்கேல் எழுதினார். நீ என்ன செய்தாய்? இவ்வுலகிற்கு நீ ஏன் அனுப்பப் பட்டாய்? உன் வாழ்வை எப்படி பயனுள்ளதாக்கப் போகின்றாய்?
ஆதியாகமம் 4ம் அதிகாரம் சொல்லுகிறது: ஏவாள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று முதல் முறையாக காயீனைக் கையிலேந்தி, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” (வச. 1) என்கின்றாள். முதல் குமாரனைப் பெற்றெடுத்த வினோதமான அநுபவத்தை வெளிப்படுத்தும் வாக்கியம், தேவனாகிய கர்த்தரின் உதவியை முற்றிலும் சார்ந்திருத்தலை விளக்குகின்றது. “கர்த்தரால்” என விளக்குகின்றாள். தொடர்ந்து ஏவாளின் வித்திலிருந்து தோன்றிய மற்றொரு குமாரன் மூலமாக தேவன் தம் ஜனத்திற்கு ஒரு விடுதலையை கொடுக்கின்றார் (யோவா. 3:16). என்ன அருமையாக இப் பாரம்பரியம் தொடர்கின்றது.
பெற்றோராயிருத்தலென்பது இவ்வுலகிற்கு ஜனங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் ஒரு பங்களிப்பு. உன்னுடைய பங்கு ஒருவேளை நீ அமர்ந்து எழுதுன்ற அல்லது பின்னல் வேலை செய்கின்ற அல்லது சித்திரம் வரைகின்ற அறையிலிருந்து வெளியாகலாம். தேவனுடன் தொடர்பற்றிருக்கின்ற ஒருவருக்கு உன் வாழ்வு ஒரு முன் மாதிரியாக அமையலாம் அல்லது உன்னுடைய முதலீடு ஒரு வேளை உன் இறப்பிற்குப்பின் நீ நினையாத வகையில் வெளிவரலாம். அது நீ விட்டுச் சென்ற வேலையாகவோ, உன்னுடைய தொழிலில் நீ செய்த காரியத்தின் புகழ்ச்சியாகவோ இருக்கலாம். எதுவாயினும் உன்னுடைய வார்த்தைகள் ஏவாள் தேவனைச் சார்ந்திருந்ததைப் போன்று அமையுமா? கர்த்தரால், அவருடைய நாம மகிமைக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்?
ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன
சம்பவங்களை அருமையாக விவரிக்கும் சிறுவர் வேதாகமத்தைத் திறந்து, என் பேரனுக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒரு சம்பவத்தில் தேவனுடைய அன்பையும் ஏற்பாட்டையும் பற்றி அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்தபோது பூரித்தோம். பிறகு வாசிப்பதை சற்றே நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திருப்பி மீண்டும் ஒருமுறை தலைப்பை வாசித்தேன்: ‘இயேசுவின் சம்பவம் சொல்லும் வேதாகமம்: ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன. ஒவ்வொரு சம்பவமும்.
உண்மையைச் சொன்னால், சிலசமயங்களில் வேதாகமத்தை வாசிக்கும்போது, குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது சரியாகப் புரியாது. தேவனை அறியாதவர்கள் அவருடைய மக்களைத் தோற்கடிப்பதுபோலத் தெரியும். தேவன் பரிசுத்தர், அவருடைய நோக்கங்களெல்லாம் நன்மையானவை என்றால், அவ்வளவு கொடுமையை தேவன் எவ்வாறு அனுமதித்தார்?
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீடர்களைச் சந்தித்தார். அவர்கள் இயேசுவை அடையாளங்காணவில்லை. தாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த மேசியா மரித்துப் போனாரென ஏமாற்றத்தில் இருந்தார்கள். லூக்கா 24:19-24. “அவரே இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர்” என்று நம்பியிருந்தார்கள். வச 21. இயேசு அவர்களுக்கு மறுநிச்சயத்தைக் கொடுத்தது பற்றி லூக்கா பதிவு செய்கிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை (இயேசு) அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (வச. 27).
ஒவ்வொரு சம்பவமும் அவருடைய பெயரைச் சொல்லுகின்றன, புரியக்கடினமான சம்பவங்களும் கூட. ஏனென்றால், நம் உலகம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதையும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் தேவை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. வழிவிலகிப்போன பிரியமான தம் பிள்ளைகளை மனதில்கொண்டு தேவன் ஏற்படுத்தியுள்ள மீட்பை, அதாவது அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவருகிற வழியைத்தான் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு தலையீடும் சுட்டிக்காட்டுகின்றன.
குச்சி பொம்மை ஓவியத்தின்மூலம் பாடம்
அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.
கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?