கால்பந்தும் மேய்ப்பர்களும்
இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டின்போது சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் காணமுடியும். அதாவது ஒவ்வொரு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும் ரசிகர்கள் தங்கள் அணியின் கீதத்தைப் பாடுவார்கள். வேடிக்கையான பாடல் (“கிளேட் ஆல் ஓவர்”), விசித்திரமான பாடல் (ஐம் ஃபாரெவர் புளோயிங் பப்ள்ஸ்”), ஆச்சரியப் பாடல் என அணிக்கு அணிக்கு அந்தக் கீதம் மாறுபடும். உதாரணமாக, வெஸ்ட் புரோம்விச் அல்பியான் அணியின் கீதமாக “சங்கீதம் 23” உள்ளது. அந்த அணி மைதானத்தின் முகப்பில் அந்தச் சங்கீகத்தின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. “வெஸ்ட் புரோம் பேகீஸ்” அணியின் ஆட்டத்தைக் காணச் செல்கிற ஒவ்வொருவருக்கும் அந்த நல்ல, மகத்தான, பிரதான மேய்ப்பனின் அக்கறையை அந்த வார்த்தைகள் பறைசாற்றுகின்றன.
சங்கீதம் 23, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்று தாவீது சொல்லியிருக்கும் வார்த்தைகள் காலத்தால் அழியாதவை (வச. 1). பிறகு வந்த நற்செய்தி எழுத்தாளரான மத்தேயு, “அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று எழுதினார் (மத். 9:36). யோவான் 10 தம் காலத்தில் வாழ்ந்த “ஆடுகளாகிய” மக்கள்மேல் தமக்குள்ள அன்பையும் அக்கறையையும் இயேசு சொல்கிறார். “நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” என்று சொன்னார் (வச. 11). இயேசு திரளான ஜனங்களோடு இடைபட்டதற்கும், அவர்களுடைய தேவைகளைச் சந்தித்ததற்கும், இறுதியில் அவர்களுக்காக (நமக்காக) தம் ஜீவனைக் கொடுத்ததற்கும் இயேசுவின் மனதுருக்கம்தான் காரணமாக இருந்தது.
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” என்பது வெறும் பழங்கால பாடலோ, அறிவுப்பூர்வமான ஒரு முழக்கமோ அல்ல. தேவனை அறிந்து, அவருடைய அன்புக்கு பாத்திரமாகி, அவருடைய குமாரனால் மீட்கப்பட்டிருக்கிற ஒருவர், நம்பிக்கையோடு சொல்கிற வார்த்தைகளாகும்.
நமக்காக வேண்டுதல்செய்கிறவர்
நான் ஆசியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது என்னுடைய ஐ-பாடின் திரையில் ஏற்பட்ட கோளாறால் அது செயலிழந்துபோனது. (வாசிப்பு உபகரணங்களும் பணி ஆவணங்கள் பலவும் அதில்தான் இருந்தன) எனவே ஒரு கணினி கடைக்குச் சென்றேன்; அங்கே இன்னொரு பிரச்சனை எழுந்தது. அதாவது எனக்கு சீன மொழி பேசத்தெரியாது, அந்தக் கடையிலிருந்த தொழில்நுட்பவியலாளருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தீர்வுதான் என்ன? ஒரு மென்பொருளைத் திறந்து, தான் கேட்க விரும்பியதை சீன மொழியல் தட்டச்சு செய்தார்; அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. அதை என்னால் வாசிக்கமுடிந்தது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை அவர் சீனமொழியில் வாசிக்க முடிந்தது. நாங்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும், நாங்கள் தடையின்றி தகவல் தொடர்பு கொள்வதற்கு அந்த மென்பொருள் உதவியது.
சில சமயங்களில், நான் பரலோக பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது, என் இருதயத்திலுள்ளதைத் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மட்டும் அல்ல, ஜெபிக்கும்போது பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டாகலாம். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிற படியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்” (ரோம. 8:26-27).
பரிசுத்த ஆவியானவரின் இந்த ஈவு எத்தனை அருமையானது! எந்தவொரு கணினியின் மென்பொருளையும்விட என்னுடைய சிந்தைகளையும் ஆசைகளையும் பிதாவின் நோக்கங்களுக்கு இசைவான விதங்களில் அவர் தெளிவாகத் தெரியப்படுத்துகிறார். ஆவியானவரின் இந்தக் கிரியையின் நிமித்தம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கிறது!
கண்ணீரின் கிண்ணம்
வந்து பெற்றுக் கொள்ளுங்கள்
செலவழிக்கப்படல்
வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களுடன் பிரான்ஸ் தேசத்தின் தெற்குப் பகுதியில், ஒரு குளிர்ந்த இரவில் அனல் அடுப்பினருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அந்த நெருப்பினை உற்று நோக்கிய அந்த முன்னாள் பிரதம மந்திரி, பைன் மரத்துண்டுகள் எரியும்போது வெடித்து, ஸ்ஸ் என்ற ஓசையுடன் கொப்பளித்ததைக் கண்டார். உடனே அவர் தன்னுடைய கனத்த குரலில் “ஏன் இந்த மரத்துண்டுகள் கொப்பளிக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். செலவழிக்கப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்”என்றார்.
நம்முடைய தவறான செயல்களால் வரும் துன்பங்களும், விரக்தியும், ஆபாயங்களும், துயரங்களும் நாம் செலவழிக்கப்படுவதைக் காட்டுகின்றன. சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மெல்ல நம் இருதயத்தை விட்டு எடுத்துவிடும். தாவீது, தன்னுடைய பாவச் செயலால் தான் செலவழிக்கப்படுவதை உணர்ந்தபோது, “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று… என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று” (சங். 32:3-4) என எழுதினார்.
இத்தகைய துன்ப நேரங்களில் நாம் யாரிடம் உதவி கேட்போம்? யார் நமக்கு நம்பிக்கை தருவார்? ஊழிய பாரத்தினாலும், உடைக்கப்பட்ட உள்ளத்தாலும் நிறைந்த அநுபவங்களைக் கொண்ட பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை;” என்றார் (2 கொரி. 4:8-9).
இது எப்படி சாத்தியமாகும்? நாம் இயேசுவைச் சார்ந்து வாழ்வோமாயின், நல் மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்து நம் ஆத்துமாவை மீட்டு (சங். 23:3) நம்முடைய பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய பெலனைத் தருவார். அவர் நம் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நடந்து வருகின்றார் (எபி. 13:5).
மிகப்பெரிய மீட்புப் பணி
1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் ஒரு மிகப்பெரிய, வலிமையான புயல், எஸ்.எஸ். பென்டல்டன் என்ற எண்ணெய் கப்பலை இரண்டு துண்டாக உடைத்தது. மசாசுசெட் கடற்கரையிலிருந்து சுமார் பத்து மைல்களுக்கப்பால் இந்த நிகழ்வு ஏற்பட்டது. நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காற்றினாலும், கொடூரமான அலைகளாலும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் அகப்பட்டுக் கொண்டனர்.
சாத்தம் என்ற இடத்திலுள்ள கடலோர காவற்படையினருக்கு இந்த செய்தி கிடைத்தபோது, மசாசுசெட்டிலிருந்து படகு சவாரியில் திறமைவாய்ந்த பெர்னி வெப்பர் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓர் உயிர்காக்கும் படகில், தப்பிக்கமுடியாத சூழலில் அகப்பட்டு திகைத்து நின்ற கப்பல் பயணிகளை, முடியாத ஒரு நிலையிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தார். இவர்களுடைய இந்த தைரியமான முயற்சி அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடலோரக் காவற்படையினரின் சரித்திரத்தில் மிகப்பெரிய மீட்பு செயலாகக் கருதப்பட்டது. அதுவே அந்த ஆண்டு 2016ல் திரைப்படத்துறையினரின் முக்கிய தலையங்கமாகக் கருதப்பட்டது.
லூக்கா 19:10ல் இயேசு தன்னுடைய மீட்புப் பணியை வெளிப்படுத்துகின்றார். 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்றார். சிலுவையும், உயிர்த்தெழுதலுமே அந்த மீட்பின் பிரதான வெளிப்பாடாக இருந்தது. இயேசு தாமே நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, அவரை விசுவாசிப்பவர்களைப் பிதாவிடம் சேர்க்கவே இவ்வுலகிற்கு வந்தார். 2000 வருடங்களாக தேவன் தருகின்ற இந்த விலையேறப்பெற்ற மீட்பின் வாழ்வை இப்பொழுதும், பிற்பாடு நாம் அவரோடு நித்தியமாக வாழப்போகின்ற வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, அரவணைத்து வருகின்றனர், மீட்கப்பட்டவர்கள்!
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் நமது இரட்சகரின் மிகப்பெரிய மீட்புப் பணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். உன் வாழ்வில் நீ சந்திக்கின்ற யாருக்கு அவருடைய மீட்பின் அன்பு தேவையாயிருக்கின்றது?
ஒரு பாதுகாப்பான இடம்
மேற்கு வெர்ஜீனியாவில், ஒரு காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் என்னுடைய சகோதரரும், நானும் வளர்ந்தோம். அது ஒரு வளமான நிலப்பகுதி. டார்சானைப் போன்று கொடி விட்டு கொடி தாண்டியும், சுவிஸ் குடும்பம் ராபின்சனைப் போன்று மரவீடுகளை அமைத்தும், கதைகளில் வாசிப்பதைப் போன்றும், படங்களில் காணும் காட்சிகளையும் கொண்ட ஓர் இடத்தில் நாங்கள் விளையாடினோம். வசிப்பிடங்களைக் கட்டுவதும் எதிரியின் தாக்குதலிலிருந்து நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என அதில் தங்கி விளையாடுவதும் எங்களுக்கு மிகவும் விருப்பமானவை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய குழந்தைகளும் போர்வைகளாலும், கம்பளிகளாலும், தலையணைகளாலும் ஒரு வசிப்பிடத்தையமைத்து தங்களுடைய கற்பனையில், எதிரியிடமிருந்து “பாதுகாப்பாக ஓர் இடத்தை” ஏற்படுத்திக் கொண்டதாக எண்ணிக்கொள்வர். நாமும் பாதுகாப்பாக நம்பி ஒளிந்து கொள்ள ஓர் இடம் தேவை என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவரிடமும் உண்டு.
இஸ்ரவேலின் கவிஞரும் பாடகருமான தாவீது தனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய போது அது தேவனிடம் மட்டுமேயுள்ளது என்பதைக் கண்டு கொண்டான். சங்கீதம் 46:1-3 வலியுறுத்துவது போல “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்… ஆகையால் நாம் பயப்படோம்.” பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, அவன் தொடர்ந்து அச்சுறுத்தலைச் சந்திக்கின்றான். ஆனாலும் இச்சங்கீதத்தின் வார்த்தைகள் தாவீது தேவன் மீது வைத்துள்ள அற்புதமான நம்பிக்கையைக் காட்டுகின்றது. எத்தகைய அச்சுறுத்தல் இருந்த போதும், அவன் தேவன் தரும் பாதுகாப்பைக் குறித்து உறுதியாயிருந்தான்.
இத்தகைய உறுதியை நாமும் பற்றிக்கொள்வோம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள (எபி. 13:5) தேவனையே நம் அநுதின வாழ்வில் நாம் நம்பியுள்ளோம். நாம் ஒரு பயங்கரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும், தேவன் நமக்குச் சமாதானத்தையும், உத்தரவாதத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் நமக்களிக்கின்றார். அவரே நாம் பாதுகாப்பாகத் தங்குமிடம்.
ஆபத்தான கவனச்சிதறல்கள்
சிகிஸ்மன்ட் கெட்ஸி என்ற ஓவியர் “மனிதர்களுள் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்” என்ற ஓவியம் ஒன்றை வரைந்து விக்டோரிய காலத்து இங்கிலாந்து தேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கண்டனம் செய்யப்பட்டு துன்பத்துக்குள்ளான இயேசுவைச் சுற்றி தன்னுடைய தலைமுறையைச் சேர்ந்த மக்கள் நிற்பதைப்போல அந்த ஓவியத்தை வரைந்திருந்தார். வர்த்தகம், காதல், அரசியல் என்று தங்கள் சுய விருப்பங்களிலேயே மூழ்கிப்போயிருந்த அவர்களுக்கு, இயேசுவின் தியாகம் ஒரு பொருட்டாகப்படவில்லை. இயேசுவின் சிலுவை அருகில் இருந்த கலகக் கும்பலைப்போல, இந்த ஓவியத்தில் கிறிஸ்துவைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாருக்கும் தங்கள் எதை, யாரை இழந்தோம் என்பதே தெரியவில்லை.
இப்போதும்கூட, விசுவாசிகளும், விசுவாசம் இல்லாதவர்களும் நித்தியத்தில் இருந்து எளிதாக திசை திருப்பப்படலாம். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தேவனின் அன்பு என்ற உண்மையின்மூலம் எப்படி சிதறடிக்கும் பனிமூட்டத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியும்? தேவனின் பிள்ளைகளாக நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதன்மூலம் இதில் முதல் அடி எடுத்துவைக்கலாம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு கூறினார் (யோவான் 13:35).
ஆனால் உண்மையான அன்பு அதோடு நிற்பதில்லை. மக்களை இரட்சகர் பக்கம் ஈர்க்கும் நம்பிக்கையில், நற்செய்தியைப் பகிர்வதன்மூலம் நாம் அந்த அன்பை வெளிப்படுத்துகிறோம். பவுல் சொன்னவிதமாக, “நாம் கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாய் இருக்கிறோம்” (2 கொரி. 5:20).
இப்படியாக கிறிஸ்துவின் சரீரம், நாம் ஒருவருக்கு ஒருவரும், உலகத்தாருக்காகவும் ஏங்கும் அன்பை, பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்பட்ட நாம் தேவனின் அன்பை இயேசுவில் காண்பதைத் தடுத்து திசை திருப்பும் காரியங்களை விலக்க இந்த இரண்டு முயற்சிகளும் உதவுவதாக.
மனதுருக்க சோர்வு
ஆன் ஃப்ராங்க் என்ற சிறுபெண், இரண்டாம் உலகப்போரின்போது அவள் குடும்பத்தினர் எப்படி பல வருடங்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள் என்பது குறித்து எழுதிய நாள்குறிப்பின்மூலம் அதிக பிரபலமடைந்தவள். பின்னர் அவள் ஜெர்மானிய நாசிக்களின், மரணத்தை எதிர்நோக்கும் முகாமில் சிறைவைக்கப்பட்டாள். அப்போது அவளுடன் இருந்தவர்கள் அவள் எப்போதும் தங்கள்மேல் மனதுருக்கம் கொண்டவளாக இருந்தாள் என்று கூறினார்கள். “அவளை அறிந்தவர்களுக்கு அவள் அருகாமை ஆசீர்வாதமாக இருந்தது. இதனால் கென்னெத் பேய்லி என்ற அறிஞர், அவளுக்கு ஒருபோதும் “மனதுருக்க சோர்வு” ஏற்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.
சின்னாபின்னமாகியுள்ள உலகில் வாழ்வதால் ஏற்படும் விளைவுகளில் மனதுருக்க சோர்வும் ஒன்று. மனிதர்கள் படும் அளவுக்கடங்காத பாடுகளும், கஷ்டங்களும், அதிக நல்லெண்ணம் கொண்டவர்களின் உணர்ச்சிகளையும் மரத்துப்போக வைத்துவிடும். ஆனால் கிறிஸ்துவை மனதுருக்க சோர்வு ஒருபோதும் ஆட்கொள்ளவில்லை. “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று மத்தேயு 9:35-36 கூறுகிறது.
உலகப்பிரகாரமான தேவைகள் மட்டுமல்லாமல், ஆத்துமாவும் நொறுங்குண்டதால் நம் உலகம் அதிக பாதிப்படைந்துள்ளது. இந்தத் தேவைகளை சந்திக்க இந்த உலகத்திற்கு வந்த இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களையும் இந்தப்பணியில் ஈடுபடச்சொல்கிறார் (வச. 37-38). தனிமை, பாவம், சுகவீனம் ஆகியவற்றால் மனிதர்கள் படும் கஷ்டம் மற்றும் தேவைகளை சந்திக்க பணியாட்களை எழுப்புமாறு அவர் பிதாவிடம் ஜெபித்தார். அவருடைய இருதயத்தைப் பிரதிபலிக்கும், மற்றவர்கள்மேல் கரிசனைகொள்ளும் ஒரு இருதயத்தை பிதா நமக்குத் தந்தருள்வாராக. அவருடைய ஆவியின் வல்லமையால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய மனதுருக்கத்தின் கரிசனையை நம்மால் வெளிப்படுத்தமுடியும்.
அழகிய உச்சம்
நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய சங்கீதம் என்று எல்லா விதமான பாடல்களையும் ரசிக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே மாஸ்கோ தேசிய இசைக்குழுவின் (Moscow National Symphony) இசை விருந்தைக் கேட்க, ரஷ்யாவின் புகழ்பெற்ற சங்கீத சபைகளில் ஒன்றான மாஸ்கோ கான்ஸர்வேடரியில் (Moscow Conservatory) நான் அடி எடுத்து வைத்தபோது, என் மனம் படபடத்தது. சைக்கோவ்ஸ்கி இயற்றிய ஒரு அழகிய பாடலை சங்கீத வித்துவான்கள் இசைக்கும்படி நடத்துனர் செய்தார். நிகழ்ச்சியின் மையக் கருத்துக்களின் சிறிது சிறிதாக உயர்ந்து, ஆழ்ந்த, வியப்பைத் தரக்கூடிய உச்ச ஸ்தாயினைத்தை எட்டியது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அந்த அழகிய தருணத்தைப் பாராட்டினார்கள்.
வேத வசனங்கள், வரலாற்றின் உச்சமான சிலுவை மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கி முன்னேறுகின்றன. ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மீட்பர் வருவார் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாடு முழுவதும் இந்த மையக்கருத்து முன்னோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியிலும் (யாத்திராகமம் 12:21), தீர்க்கதரிசிகளின் நம்பிக்கையிலும் (1 பேதுரு 1;10), கடவுளின் ஜனங்களின் வாஞ்சையிலும் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்.
இந்தக் கருத்து முன்னோக்கிச் செல்வதை 1 யோவான் 4:14 உறுதிப்படுத்துகிறது: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்”. எப்படி? நம்மை மன்னித்து, நம்மைப் படைத்தவரிடம் நம்மை மீட்டுக்கொடுக்க இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக சிதைந்த உலகை மீட்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றினார். ஒரு நாள் மீண்டும் வந்து, தன்னுடைய படைப்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்வார்.
கடவுளின் குமாரன் நமக்காக மரித்ததை நினைவுகூரும்போது, கடவுளின் அருள் மற்றும் மீட்பராகிய இயேசு என்ற அழகிய உச்சத்தைக் கொண்டாடுகிறோம்.