மேற்கு வெர்ஜீனியாவில், ஒரு காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் என்னுடைய சகோதரரும், நானும் வளர்ந்தோம். அது ஒரு வளமான நிலப்பகுதி. டார்சானைப் போன்று கொடி விட்டு கொடி தாண்டியும், சுவிஸ் குடும்பம் ராபின்சனைப் போன்று மரவீடுகளை அமைத்தும், கதைகளில் வாசிப்பதைப் போன்றும், படங்களில் காணும்  காட்சிகளையும் கொண்ட ஓர் இடத்தில் நாங்கள் விளையாடினோம். வசிப்பிடங்களைக் கட்டுவதும் எதிரியின் தாக்குதலிலிருந்து நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என அதில் தங்கி விளையாடுவதும் எங்களுக்கு மிகவும் விருப்பமானவை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய குழந்தைகளும் போர்வைகளாலும், கம்பளிகளாலும், தலையணைகளாலும் ஒரு வசிப்பிடத்தையமைத்து தங்களுடைய கற்பனையில், எதிரியிடமிருந்து “பாதுகாப்பாக ஓர் இடத்தை” ஏற்படுத்திக் கொண்டதாக எண்ணிக்கொள்வர். நாமும் பாதுகாப்பாக நம்பி ஒளிந்து கொள்ள ஓர் இடம் தேவை என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவரிடமும் உண்டு.

இஸ்ரவேலின் கவிஞரும் பாடகருமான தாவீது தனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய போது அது தேவனிடம் மட்டுமேயுள்ளது என்பதைக் கண்டு கொண்டான். சங்கீதம் 46:1-3 வலியுறுத்துவது போல “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்… ஆகையால் நாம் பயப்படோம்.” பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, அவன் தொடர்ந்து அச்சுறுத்தலைச் சந்திக்கின்றான். ஆனாலும் இச்சங்கீதத்தின் வார்த்தைகள் தாவீது தேவன் மீது வைத்துள்ள அற்புதமான நம்பிக்கையைக் காட்டுகின்றது. எத்தகைய அச்சுறுத்தல் இருந்த போதும், அவன் தேவன் தரும் பாதுகாப்பைக் குறித்து உறுதியாயிருந்தான்.

இத்தகைய உறுதியை நாமும் பற்றிக்கொள்வோம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள (எபி. 13:5) தேவனையே நம் அநுதின வாழ்வில் நாம் நம்பியுள்ளோம். நாம் ஒரு பயங்கரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும், தேவன் நமக்குச் சமாதானத்தையும், உத்தரவாதத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் நமக்களிக்கின்றார். அவரே நாம் பாதுகாப்பாகத் தங்குமிடம்.