கேன்சர் சிகிச்சை மையத்தில் என்னுடைய தாயாரோடு தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, எங்களுக்கருகில் தங்கியிருந்து தன்னுடைய கணவன் பிராங்க்-ஐ கவனித்துக் கொண்டிருந்த லாரியின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்குள்ள போது அறையில் லாரியுடன் சம்பாஷித்து, சிரித்து, பெருமூச்செடுத்து, அழுது, ஜெபித்து என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாங்கி, மகிழ்ந்து நாங்கள் நேசிக்கின்ற நபரையும் கவனித்துக் கொண்டோம்.

அங்கு தங்கியிருப்போர் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கும் படி அழைத்துச் செல்லும் இலவச வாகனத்தை நான் விட்டு விட்ட போது, அன்று மாலை லாரி தன்னுடைய காரில் என்னை அந்த கடைக்கு அழைத்துச் சென்றாள். நன்றி கலந்த கண்ணீரோடு அவளுடைய உதவியை நான் ஏற்றுக் கொண்டேன். “நீயாக இருப்பதற்காக நன்றி” என்றேன். எனக்கு ஒரு சிநேகிதியாக எனக்குதவியதற்காக அல்ல, அவளுடைய உண்மையான குணாதிசயத்திற்காக அவளைப் பாராட்டினேன்.

சங்கீதம் 100, தேவன் செய்த காரியங்களுக்காக மட்டுமல்ல, தேவன் எப்படிப்பட்டவர் என்பதைப் பாராட்டி போற்றுகின்றது. பூமியிலுள்ள அனைவரையும் கர்த்தரை மகிழ்ச்சியோடு ஆராதனை செய்யும்படி சங்கீதக்காரன் அழைக்கின்றார் (வச. 1-2). “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்” (வச. 3) என்று உறுதியோடிருக்கச் சொல்கின்றார். நம்மைப் படைத்தவர் நம்மை அவருடைய பிரசன்னத்திற்குள் அழைக்கின்றார். “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத்துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் என்கிறார் (வச. 4). நம்முடைய நன்றியைத் தெரிவிப்பதற்கு அவரே தகுந்தவர், ஏனெனில் “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.” (வச. 5).

இந்த உலகத்தைப் படைத்து அதைப் பாதுகாக்கின்ற இந்த தேவன், நம்மை மிகவும் நேசிக்கும் தேவன். நம்முடைய உண்மையான, மகிழ்ச்சி கலந்த நன்றியைச் செலுத்தத் தகுந்தவர் அவரே.