பாடல்கள் வழியான புரட்சி
ஒரு புரட்சியைத் துவக்கி விட தேவையானது என்ன? துப்பாக்கிகளா? வெடிகுண்டுகளா? கொரிலா யுத்தமா? 1980 ஆம் ஆண்டு இறுதியில், எஸ்டோனியா நாடு பாடல்களால் நிரம்பியது. பல ஆண்டுகளாக சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த அந்நாட்டு மக்கள் சுமைகளைத் தாங்கி வந்தனர், இப்பொழுது, தேசபக்தி பாடல்களை பாடுவதன் மூலம் ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடல்கள் வழியாக “பாடல் வழி புரட்சி” பிறந்தது, இதுவே, 1991 ஆம் ஆண்டில் எஸ்டோனியா சுதந்திரம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
“இது ஒரு வன்முறையான ஆக்கிரமிப்பைத் தூக்கி எறிந்த ஓர் அஹிம்சை வழிபுரட்சி” என இந்த இயக்கத்தைக் குறித்து ஒரு வலைதளம் விளக்கியது. மேலும், “ஐம்பது ஆண்டுகள் சோவியத்தின் அரசாட்சியைப் சகித்துக் கொண்டிருந்த எஸ்டோனியர்களை ஒன்றிணைத்த வலிமையான விசையாக பாடல்கள் திகழ்ந்தன” என்றும் கூறியது.
நம்முடைய வாழ்விலும் கடினமான வேளைகளைக் கடந்து செல்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான் நாம் நம்மை எளிதாக சங்கீதங்களோடு இணைத்துக் கொள்ள முடிகின்றது. தன்னுடைய ஆன்மாவின் ஒரு இருண்ட இரவில் இந்தப் பாடலை சங்கீதக்காரன் பாடுகின்றார். “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (சங். 42:5). ஆராதனை தலைவனான ஆசாப், தான் பெரும் ஏமாற்றத்தைக் கண்டபோது, “சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்” (73:1) எனப் பாடுகின்றார்.
நம்முடைய சோதனை நேரங்களிலும், நாம் சங்கீதக்காரனோடு இணைந்து பாடி, நம் இருதயங்களில் பாடல் வழிப் புரட்சியை ஏற்படுத்துவோம். இத்தகைய புரட்சி, நம்முடைய விரக்தியின் கொடுமையையும் குழப்பத்தையும், தேவனுடைய மிகப் பெரிய அன்பு, உண்மையின் மீதுள்ள விசுவாசத்தோடு கூடிய நம்பிக்கையினால் மேற்கொள்ளும்.
வியத்தகு திறமை
எங்கள் கல்லூரி பாடகர் குழுத் தலைவர், குழுவை வழிநடத்துவதோடு, எங்களோடு இணைந்து பியானோவிலும் வாசிப்பார், அற்புதமாக இவ்விரு பொறுப்பையும் ஒரே நேரத்தில் கையாளுவார். ஓர் இசை நிகழ்ச்சி முடிவுற்ற போது, அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டார், எனவே நான் அவரை விசாரித்தேன், “இதற்கு முன்பு, இவ்வாறு செய்வதற்கு நேர்ந்ததேயில்லை” என்றார். மேலும், “இந்த பியானோவின் சுருதி இசையோடு பொருந்திவரவில்லை, ஆதலால் நான் இந்த முழு நிகழ்ச்சியிலும் இரண்டு பியானோக்களை பயன்படுத்தவேண்டியதாயிற்று, என்னுடைய இடது கை ஒரு பியானோவிலும், வலது கை மற்றொரு பியானோவிலும் வாசித்தன!” என்றார். அவரின் வியத்தகு திறமையை நினைத்து அதிசயித்தேன், மனிதனுக்குள் இத்தகைய திறமைகளைத் தந்த தேவனின் அற்புத வல்லமையை நினைத்து வியந்தேன்.
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14) என இச்சங்கீதத்தை எழுதின தாவீது அரசன் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்துகின்றார். மனிதனின் திறமைகளையும், இயற்கையின் அற்புதங்களையும் நான் பார்க்கும் போது, படைப்புகளின் அதிசயம், என்னை படைப்பாளியின் மகத்துவத்தை நினைத்து வியக்கச் செய்கின்றது.
ஒரு நாள் நாம் தேவனுடைய சமுகத்தில் நிற்கும் போது, வெவ்வேறு தலைமுறையிலிருந்தும் வந்த ஜனங்கள், “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாய் இருக்கிறது” (வெளி.4:11) என்பார்கள். அவர் நமக்குத் தந்துள்ள வியத்தகு திறமைகளும், அவர் படைத்த அழகிய உலகமும், அவரே ஆராதிக்கத் தகுந்தவர் எனக் காட்டுகின்றன.
எதிர்பாராத மாற்றம்
1943 ஆம் ஆண்டு, தெற்கு டக்கோட்டாவிலுள்ள ஸ்பியர்ஃபிஷ் என்ற இடத்தை வறண்ட காற்று தாக்கிய போது, அங்கு வெப்பநிலை,-4F இருந்து 45F (-20 டிகிரி C இருந்து 7டிகிரி C) ஆக உயர்ந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம், 49 டிகிரி வெப்பநிலை உயர்வு இரண்டே நிமிடங்களில் ஏற்பட்டது. இந்த பயங்கர வெப்பநிலை மாற்றம், அடுத்த 24 மணி நேரங்களில் வியத்தகு வகையில் 103 டிகிரிகள் உயர்ந்தது என அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது! 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள், லோமா, மான்டனா ஆகியோர் அவ்விடங்களில் வெப்பநிலை -54 டிகிரியிலிருந்து 49 டிகிரி ஃபாரன்கீட் (-48 டிகிரியிலிருந்து 9 டிகிரி செல்ஸியஸ்) ஆக உயர்ந்தது எனக் கண்டனர்.
இவ்வாறு ஏற்படும் திடீர் மாற்றங்கள் வெறுமனே வானிலையில் மட்டும் நிகழ்வன அல்ல, சில வேளைகளில் வாழ்க்கையையே மாற்றுகின்றன. இப்படியிருக்க, “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள், நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” (4:13-14) என்று யாக்கோபு நினைவுபடுத்துகின்றார். எதிர்பாராத நஷ்டம், வியப்பூட்டும் மருத்துவ அறிக்கை, பொருளாதார திருப்பங்கள் என்பதைப் போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படலாமே.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அநேக எதிர்பாராத காரியங்கள் நிகழலாம். இதனாலேயே, ஆண்டவருடைய சித்தத்தை எண்ணத்தில் கொள்ளாத “வீம்பு காரியங்களை” விட்டுத் திரும்புங்கள் (வச. 16) என்று யாக்கோபு கூறுகின்றார். அவர் நமக்குத் தரும் ஆலோசனையின் படி, “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (வச. 15) என்கின்றார். நம் வாழ்வின் காரியங்களெல்லாம் உறுதியற்றவை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நம் வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளின் மத்தியில், நம்முடைய தேவன் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை, நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே.
புயலைப் பின்தொடர்தல்
“புயல் காற்றை பின்தொடர்வது” என்பது கொல்கத்தா மற்றும் வேறு சில இடங்களில் உள்ள வானிலை ஆர்வலர்களின் பொழுது போக்கு நிகழ்வு. இவர்கள் புயலைப் பின்தொடர்ந்து சென்று அதன் செயலைக் குறித்துத் தெரிந்துகொள்கின்றனர், மின்னல் தாக்குவதைப் படமெடுக்கின்றனர், அவற்றின் பின் விளைவுகளையும் கண்டறிகின்றனர், இத்தகைய மோசமான வானிலையின் போது நம்மில் அநேகர், இத்தகைய வலிமையான, தீய விளைவுகளை ஏற்படுத்தும் புயலின் போது வெளியே வருவதற்கே அச்சப்படும் போது, வெவ்வேறு இடங்களில் உள்ள இத்தகைய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, ஊடகங்களோடு இணைந்து, புயலைப் பின் தொடர்கின்றனர்.
என்னுடைய அநுபவத்தில், என் வாழ்வில், நான் புயல்களை பின் தொடர அவசியமில்லை, அவைகள் என்னை விரட்டிக்கொண்டே வருகின்றன. அந்த அநுபவம், சங்கீதம் 107 ல் அப்படியே கூறப்பட்டுள்ளது. அது, புயலில் சிக்கிக் கொண்ட கடல் பிரயாணிகளைப் பற்றி விளக்குகின்றது. அவர்கள், தவறானவற்றைத் தேர்ந்து கொண்டதால் வந்த பின் விளைவுகளால் துரத்தப்படுகின்றனர். சங்கீதக்காரன் சொல்கின்றார், “தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்” (சங். 107:28-30).
நம் வாழ்வில் ஏற்படும் புயல்கள், நம்மால் உருவாக்கப்பட்டவையோ அல்லது இந்த உடைந்து போன உலகத்தில் வாழ்வதால் ஏற்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் நம்முடைய தந்தை, இவை எல்லாவற்றையும் விடப் பெரியவர். புயல்கள் நம்மைத் துரத்தும் போது, அவர் ஒருவராலேயே, அவற்றை அமைதிப் படுத்த முடியும், அல்லது நமக்குள்ளேயுள்ள புயலை அடக்க முடியும்.
நன்றியுள்ள மனப்பான்மை
அமெரிக்காவில் எங்களுடைய மாநிலத்தில், குளிர் காலம் கடுமையானதாகவும், பூஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும், முடிவில்லா பனிப்பொழிவையும் கொண்டிருக்கும்.அப்படிப்பட்ட, மிகக் குளிர்ந்த ஒரு நாளில், எங்கள் வீட்டிற்கு முன்பக்கமிருந்த பனியை ஆயிரமாவது முறை, அகற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த தபால்காரர், எங்கள் நலனைக் குறித்து விசாரித்தார். நான் அவரிடம், இந்தக் குளிர் காலத்தை நான் விரும்பவில்லையெனவும், இந்த பனியினால் நான் சோர்வடைந்துவிட்டேன், எனவும் கூறினேன். அத்தோடு, இந்த மோசமான காலநிலையில், அவருடைய வேலை இன்னும் கடினமாயிருக்குமே எனவும் கேட்டேன். அவர்,” ஆம், ஆனால் எனக்கு ஒரு வேலையாகிலும் இருக்கிறதே, அநேகருக்கு வேலையும் இல்லை, நான் வேலை செய்வதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றார்.
அவருடைய நன்றியுள்ள மனப்பான்மையைப் பார்த்த போது, நான், என்னுடைய குற்றத்தை உணர்ந்தேன். நம் வாழ்வின் சூழ்நிலைகள் மகிழ்ச்சியற்றதாக அமையும் போது, நாம் நன்றி கூறவேண்டிய அநேக காரியங்களைக் காணத் தவறிவிடுகின்றோம் என்பதை உணர்ந்தேன்.
கொலோசே சபை விசுவாசிகளுக்கு பவுல்,” தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) என்று எழுதுகின்றார். தெசலோனிக்கேயருக்கு எழுதும் போது,” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது,” என்கின்றார் (1 தெச. 5:18).
போராட்டங்களும், வேதனைகளும் நிறைந்த நாட்களில், தேவனுடைய சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்படி நாம் ஒப்புக்கொடுப்போம். அந்த சமாதானம் நமக்குள்ளே இருக்கும் போது, கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றுள்ள அனைத்தையும் நினைவுகூருவோம், அப்பொழுது, நாம் உண்மையாய் நன்றி கூறுவோம்.
தேவனுடைய அங்கீகாரம்
பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளரான கெஸப்பி வெர்டி (1813-1901) இளைஞனாக இருந்த போது, எப்படியாகிலும் அங்கீகாரம் பெற்றுவிட வேண்டும் என்ற தணியாத தாகம், அவரை வெற்றிக்கு கொண்டு சென்றது. வாரன் வியர்ஸ்பீ அவரைக்குறித்து எழுதும் போது,”வெர்டி முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்திய போது, அந்த இசையமைப்பாளர் திரை மறைவில் நின்று கொண்டு, பார்வையாளர்களில் ஒருவரின் முகத்தையே கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் தான் மிகப் பெரிய இசையமைப்பாளரான ரோசினி. வெர்டியைப் பொருத்தமட்டில், அரங்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் அல்லது ஊளையிடுகிறார்கள் என்பது பிரச்சனையல்ல, அவர் விரும்பியதெல்லாம், மிகப் பெரிய இசையமைப்பாளரின் முகத்தில், அங்கீகரிக்கும் ஒரு புன்னகையையே” என்றார்.
யாருடைய அங்கீகாரத்தை நாம் தேடுகிறோம் ? பெற்றோருடையதையா ? எஜமானுடையதையா? நாம் அன்பு செலுத்துபவரிடமிருந்தா? பவுலிடம் இதற்கு ஒரு பதில் இருந்தது. “சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத் தக்கதாய்,தேவன் எங்களை உத்தமரென்று எண்ணியபடியே, நாங்கள், மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்” (1 தெச. 2:4) என்றார்.
தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறல் என்பது என்ன? இதற்கு அடிப்படை தேவை இரண்டுள்ளது. மற்றவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஆவலிலிருந்து விடுபடல், நம்மை நேசித்து, நமக்காகத் தம்மையே கொடுத்த கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றும் படி, பரிசுத்த ஆவியானவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்தல். தேவனுடைய நோக்கத்தை நம்மில்,நம் மூலமாக முழுமையாக நிறைவேற்ற நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, மிக முக்கியமானவரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வோம், ஒரு நாள், அவருடைய முகத்தில் நம்மை அங்கீகரிக்கும் புன்னகையைக் காண்போம்.
இரும்பும் பட்டும்
கவிஞர் கார்ல் சான்ட்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி, “மனித குலத்தின் வரலாற்றில் இரும்பின் உறுதியையும், பட்டின் மென்மையையும் ஒருங்கே பெற்ற ஒரு மனிதன், இருதயத்திலும், மனதிலும் பயங்கரமான புயலையும், சொல்லமுடியாத அமைதியையும் ஒருங்கே பெற்றிருக்கின்றார்” என்றார். விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் தன் அரச அதிகாரத்தை லின்கன் சம நிலையில் பயன் படுத்தினார் என்பதை “இரும்பும் பட்டும்” என்பதால் விளக்குகின்றார்.
சரித்திரத்தில் ஒரேயொருமனிதன் தான் வலிமையையும், மென்மையையும் மற்றும் அதிகாரத்தையும் இரக்கத்தையும் சமமாக பயன்படுத்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. யோவான் 8 ஆம் அதிகாரத்தில், மதத்தலைவர்கள் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கல்லெறிந்து கொல்லும்படி கொண்டு வந்த போது, இயேசு அவர்களிடம் வலிமையையும், மென்மையையும் காண்பித்தார். இரத்த வெறி கொண்ட ஒரு கூட்டத்தினரின் கோரிக்கையை வலிமையாக எதிர் நோக்கினார். குற்றம் கண்டு பிடிக்கும் அவர்களின் கண்களை, அவர்களுக்கு நேராகவே திருப்பினார். அவர் அந்த கூட்டத்தினரிடம், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” (வச. 7) என்றார். பின்னர், இயேசு, தனது மென்மையான இரக்கத்தை அப்பெண்ணிடம் காட்டி, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனி பாவம் செய்யாதே” என்றார் (வச. 11).
இயேசு காட்டிய வலிமையையும், மென்மையையும் நாமும் பிறரிடம் காட்டும் போது தான், தேவன் நம்மையும் இயேசுவைப் போன்று மாற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்த முடியும். மென்மையான இரக்கத்தையும், வலிமையான நீதியையும் நாம் செயல் படுத்திக்காட்டும் போது தான் தேவனுடைய இருதயத்தை இவ்வுலகிற்கு காண்பிக்க முடியும்.
சிறியதாக உணர்தல்
அநேக திரைப் பட விமர்சகர்கள், டேவிட் லீன் தயாரித்த லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற திரைப் படத்தை, எல்லாப் படங்களுக்கும் மேலானதாகக் கருதுகின்றனர். அதில் வருகின்ற எல்லையில்லாத அரேபிய பாலைவனத்தின் காட்சிகள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலை முறைகளைக் கவர்ந்துள்ளது. திரைப்படத் துறையில் சிறந்த விருது பெற்ற தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “நான் முதன் முறையாக லாரன்ஸ் படத்தைப் பார்த்த போது, கவரப் பட்டேன், அது என்னை மிகவும் சிறியவனாக எண்ணச் செய்தது. இன்னமும் என்னை குறுகியவனாக எண்ணச் செய்கின்றது. அதுவே அப்படத்தின் பெருமையின் அளவுகோல்” என்றார்.
நான் சமுத்திரத்தைப் பார்க்கும் போதும், துருவப் பகுதியை மூடியிருக்கும் பனியின் மேலே பறக்கும் போதும், இரவு வானத்தில் லட்சக் கணக்கான விண் மீன்களைப் பார்க்கும் போதும், இந்தப் படைப்புகளின் மத்தியில் நான் மிகச் சிறியவனாகத் தோன்றுகின்றேன். படைக்கப் பட்ட உலகம் இத்தனை பரந்து, விரிந்து காணப் படுமாயின், அதனை தன் வார்த்தையாலே படைத்தவர் எத்தனை பெரியவர்?
தேவனுடைய பெரிய தன்மையையும், நாம் ஒன்றுமில்லை என்ற உணர்வையும் தாவீது வெளிப் படுத்துகின்றார். “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” (சங். 8:4) என்கிறார். ஆனால் தேவன், “ ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்கின்றார் (மத். 6:26).
நான் என்னைக் குறித்து சிறியதாகவும், ஒன்றுமில்லாததாகவும் உணரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் கண்களில் நான் விலையேறப் பெற்றவன். நான் ஒவ்வொரு முறை சிலுவையைப் பார்க்கும் போதும் என்னுடைய மதிப்பு அங்கே விளங்குகின்றது. தேவன் என்னை மீட்டு, நான் அவரோடு இருக்கும் படி மனப் பூர்வமாய் செலுத்திய கிரயம், நான் எத்தனை விலயேறப் பெற்றவன் என்பதற்குச் சான்றாகவுள்ளது.
அன்பிற்காகவா அல்லது பணத்திற்காகவா
ஐரிஷ் கவிஞர் ஆஸ்கர் வைல்டு இவ்வாறு கூறுகிறார், 'நான் இளைஞனாக இருந்தபோது பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதென்று நினைத்தேன். இப்பொழுதும் நான் வயதான பிறகும் அதையே நினைக்கிறேன்." அவருடைய கூற்றானது நாவிலிருந்து வந்தாலும், அவர் 46ஆம் வயது வரையே வாழ்ந்தார். அதனால் அவர் உண்மையிலேயே வயது சென்று மரிக்கவில்லை. ஆனால் தன் இறுதி நாட்களில் வைல்டு, பணம்தான் வாழ்கைக்கு முக்கியமல்ல என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். பணம் தற்காலிகமானது, அது வரும் அது போகும். எனவே வாழ்க்கை என்பது பணத்தைவிடவும், அது வாங்கும் பொருட்களைவிடவும் முக்கியமானது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் உள்ள சந்ததியாரை. பணக்காரன் ஏழை இருவரும் சமம். மறு அளவீட்டிற்கான மதிப்பீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கியது என்று சவால் விடுத்தார் (லூக். 12:15). '’பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல" என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம்முடைய கலாச்சாரத்தில், அதிகத்தின் மேலும், புதியவற்றின் மேலும், மற்றும் சிறந்தவற்றின் மேலும் நம்முடைய நிரந்தரமான பார்வை படும்பொழுது, பணத்தின் மேலும் ஆஸ்தியின் மேலும் நம்முடைய பார்வையானது, மனத்திருப்தியோடும், உயரிய நோக்கத்தோடும் படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
இயேசுவை சந்தித்த மாத்திரத்தில், ஒரு பணக்கார அதிகாரி, துக்கத்தோடு திரும்பி செல்லுகிறார். ஏனெனில் அவருக்குத் திரளான ஆஸ்திகள் இருந்தது. அதனால் அவைகளை அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை (லூக். 18:18-25). ஆனால் ஆயக்காரனாகிய சகேயு தன் வாழ்க்கையில் முழுவதும் சம்பாதித்தவற்றை விட்டுக்கொடுத்தார் (லூக்.19:8). வித்தியாசம் என்னவெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தைத் தழுவுதலாகும். அவருடைய கிருபையின் நிமித்தம், நம்முடைய ஆஸ்திகளின்மேல் ஆரோக்கியமான கண்ணோட்டத்தை உடையவர்களாய் இருக்கலாம். அவ்வாறு இருப்பின், அந்த பொருட்கள் நம்மை மேற்கொண்டதாக இருக்க முடியாது.